தமிழ் கலை டாட் காம் எனும் செயலி அறிமுக விழாவில் நடிகர் ஜீவா கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசிய நடிகர் ஜீவா, “கலைஞர்களுக்கு சாதி, மதம் இல்லை என்று சொல்வார்கள். ஜிப்ஸி படத்தில் நடித்ததால் இந்தியா முழுவதும் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த பயணத்தில் அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகள் உள்ளன. ஆனால் கலைக்கு மட்டும் தான் மொழிகள் இல்லை.
இன்றைய வேகமான உலகில் இன்று ஒரு படம் எடுத்து நாளை அதை ரிலீஸ் செய்ய முடியும். இம்மாதிரியான உலகத்தில் மறைந்து போன கலைகள் மீண்டும் வருகிறது என்று நினைக்கும் பொழுது மிக சந்தோசமாக இருக்கிறது. இச்செயலியில் முதலில் முன்பதிவு செய்வது நானாகத்தான் இருப்பேன். எனது கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளின் ஈமெயில்களை எடுத்துப் பார்த்தால் நாம் ஏன் இந்த செயலிகளை தொடங்க முயற்சிக்க கூடாது என்பது போல் இருக்கும். ஆனால் அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் அதை மறந்துவிடுவோம். இம்முயற்சியை நீங்கள் எடுத்தது மிக சந்தோஷம்
நான் டிஷ்யூம் படத்தில் ஒரு டயலாக் சொல்லி இருப்பேன். ‘நாங்கள் கைத்தட்டலுக்கு ஏங்குற ஜாதி’ என்ற மாதிரி ஒரு வசனம் வரும். இன்று இங்கு இருக்கிற கலைஞர்கள் மிக அற்புதமாக தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அவர்களுக்கு பெரிய கரகோஷத்தை கொடுத்தாக வேண்டும். அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சி என்பது இன்றைக்கு சினிமா, யூடியூப், மேடை நிகழ்ச்சிகளிலும் வெளிநாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் கலந்துகொள்ள வேண்டும். இது மாதிரியான கலைஞர்களை அடுத்தகட்ட இடத்திற்கு கொண்டு போக வேண்டும். இம்மாதிரியான கலைஞர்களுக்கு நிச்சயமாக நானே ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அமெரிக்காவிலோ அல்லது லண்டனிலோ இம்மாதிரியான நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவரிடம் அங்கே கூடியிருந்த ஊடக நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்துக் கொண்டிருந்த ஜீவா. தொடர்ச்சியாக கேள்வி கேட்ட நிருபர் ஒருவரிடம் நீ என்ன இணையதளம் என ஒருமையில் கேட்டார். பிறகு ‘போர் அடிக்காதயா, நான் சொல்வதை மட்டும் புரிந்துகொள் என்றவர் இதனால் தான் நாம முன்னேறாமல் இருக்கிறோம்’ என்று பதிலளித்துச் சென்றார்.