'எவர்க்ரீன் ஃப்ரண்ட் ஆஃப் அஜித்'- இது, நான் அமர்க்களம், அட்டகாசம், ஆஞ்சநேயா, வில்லன், வரலாறுன்னு வரிசையா அஜித் கூட நடித்தபோது ஒரு பத்திரிகையில் என்னை குறிப்பிட்டு எழுதப்பட்ட வரி. அப்படித்தான் ரசிகர்களும் நினைச்சாங்க. நான் அஜித்துக்கு நெருக்கமானவன், விஜய்க்கு தூரமானவன்னு. ஆனா,ரெண்டு பேரும் என்னை நண்பனாகப் பார்த்தவர்கள்தான்.
அஜித், ராசி பார்க்காமல் என்னை இயக்குனராக்கியதிலும் 'தொடரும்' படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கிலேயே என்னை 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' ஷூட்டிங்குக்கு அனுப்பிவைத்துவிட்டு அரைநாள் காத்திருந்ததிலும் என் மனதில் உயர்ந்து நிற்பவர். அவரது படங்களில் நான் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து அமைந்தது. விஜய்யுடன் நான் நடித்த ஒரே படமான 'ப்ரண்ட்ஸ்' மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்.அந்தப் படத்தில் எனக்கு மிக முக்கிய ரோல் கொடுத்தார் இயக்குனர் சித்திக். அதன் பிறகு ஓரிரு படங்களில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தபோதிலும் அப்போதிருந்த தேதி மற்றும் வேறு சூழ்நிலைகளால் என்னால் நடிக்க முடியாமல் போனது. அஜித், என் மனதில் உயர்ந்து நிற்பவர் என்றால் விஜய் என் மரியாதைக்குரியவர்.
கொஞ்ச நாளாக பெரிய தொடர்பில் இல்லாமலிருந்த விஜய்க்கும் எனக்கும் மீண்டும் என் மகனால் தொடர்பு உண்டானது. என் மூத்த மகன் ஜஸ்வந்த் 'சர்கார்' படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்தான் என்பதை முன்பே சொல்லியிருக்கிறேன். தன் திருமணத்திற்கு விஜயை இன்வைட் பண்ணியதாகவும் வருவதாக சொன்னாரென்றும் சொன்னான். நான், "இல்லப்பா, அவங்க எல்லாம் பெரிய மனிதர்கள், பிஸியானவங்க. வரமுடியாது, நாம தொந்தரவு பண்ணவேண்டாம்"னு சொன்னேன். "இல்லப்பா, கண்டிப்பாக வர்றேன்னு சொல்லியிருக்கார்" என்று சொன்னான். அப்போ மரியாதையாக நாம் சென்று அழைப்பிதழ் வைக்கவேண்டுமென அவரிடம் நேரம் கேட்டு நான், எனது மனைவி, ஜஸ்வந்த் எல்லோரும் போனோம்.ரொம்ப அன்பா எங்களை வரவேற்று, நிறைய பேசி, எங்களை கவனித்து அனுப்பினாங்க. 'ப்ரண்ட்ஸ்' படத்துல விஜய், சூர்யா, நான் மூவரும் கைகோர்த்து ஒரு ஸ்டில் எடுத்திருப்போம். அதே மாதிரி விஜய் சார், நான், ஜஸ்வந்த் மூணு பேரும் ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம். இதுவரை அந்த புகைப்படத்தை எங்கும் ஷேர் பண்ணல. உங்ககிட்ட பகிர்ந்துக்குறேன்.
என் மனைவியின் தந்தை பி.எஸ்.திவாகர் அந்தக் காலத்தில் பிரபலமான இசையமைப்பாளர். அவரிடம் விஜய் கிட்டார் கற்றுக்கொண்டதை கூறி "உங்களுக்கு ஞாபகம் இருக்கா அக்கா?" என்று அன்புடன் கேட்டார் விஜய். எனக்கு அந்த சந்திப்பே போதும் என்பது போல மகிழ்ச்சியாக இருந்தது. அஜித், அந்த சமயத்தில் வெளிநாட்டில் இருந்ததால் அவரை சந்திக்க முடியல. சொன்ன மாதிரியே சென்னை கோயம்பேட்டில் நடந்த திருமண வரவேற்புக்கு எல்லோருக்கும் முன்னாடி சீக்கிரமே வந்தார் விஜய். நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல. அவர் வந்த செய்தி தீ மாதிரி பரவி, ரசிகர்கள் நிறையபேர் மண்டபம் முன்னாடி வந்துட்டாங்க. மண்டபத்துக்குள்ளயும் பெரிய பரபரப்பு. எங்களால கட்டுப்படுத்த முடியல. அவர்,மேடைக்கு வந்து பத்து நிமிடங்கள்கிட்ட இருந்து, ஜாலியா பேசி சிரிச்சு புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்றார். திரும்ப வெளியில காருக்குக் கூட்டிட்டுப் போயி அனுப்பி வைக்கிறது பெரிய வேலையாகிடுச்சு.
இந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் குறையும் முன்னரே திடீர்னு போலீஸ் வந்துட்டாங்க. என்னை பார்த்ததும் "சார், இது உங்க வீட்டு ஃபங்ஷனா? முன்னாடியே சொல்லமாட்டீங்களா?" என்று கேட்டாங்க. "என்ன சார் புதுசா இருக்கு? கல்யாணத்தை எதுக்கு போலீஸ்ல சொல்லணும்?"னு கேட்டேன். "வெளிய வந்து பாருங்க"னு கூட்டிட்டுப் போனாங்க. போய் பார்த்தா, பயங்கர ட்ராஃபிக். விஜய் வந்தது தெரிஞ்சு, அவர் இன்னும் அங்கதான் இருக்கார்னு நினைச்சுக்கிட்டு எக்கச்சக்க கூட்டம். போலீஸ்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு வந்தேன். அங்க மட்டுமில்லை, சோசியல் மீடியாலயும் அன்னைக்கு என் பையன் திருமணம் ட்ரெண்டானது. காரணம், விஜய் வந்து கலந்துகொண்டது. இப்படி, எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தார் விஜய். குறைவாகப் பேசினாலும் நிறைவான அன்பை தருபவர் விஜய்.
இது போன்ற இன்னும் பலருடனான, பல சுவாரசிய அனுபவங்களை, நீங்கள் பார்த்திராத புகைப்படங்களை ‘ரமேஷ் கண்ணாவின் ஃப்ரண்ட்ஸ்’ புத்தகத்தில் படிக்கலாம். கிண்டிலில் படிக்க... https://amzn.to/2JgcgN6