
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜூனா தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை பாராளுமன்றத்தில் சந்தித்துள்ளார். அப்போது நாகார்ஜூனாவின் மனைவி நடிகை அமலா, இவர்களது மகன் நாக சைதன்யா மற்றும் இவரது மனைவி நடிகை ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட குடும்பத்தினர் இருந்தனர்.
இந்த சந்திப்பில் நாகார்ஜுனா, தனது தந்தை அக்கினேனி நாகேஸ்வர ராவ் குறித்து எழுதப்பட்டுள்ள புத்தகத்தை மோடிக்கு பரிசாக வழங்கினார். இந்த புத்தகம் அக்கினேனி நாகேஸ்வர ராவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை பத்மபூஷன் விருது பெற்ற எழுத்தாளர் யர்லகட்டா லட்சுமி பிரசாத் எழுதியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது தெலுங்கு சினிமாவில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் பங்களிப்பை பிரதமர் மோடி பாராட்டினார். அவரிடம் நாகார்ஜூனா தான் கட்டிய அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மற்றும் அன்னபூர்ணா திரைப்பட கல்லூரியின் முன்னேற்றத்தை குறித்து எடுத்துரைத்துள்ளார். இந்த முயற்சியை பிரதமர் பாராட்டியுள்ளார். பின்பு நாகார்ஜூனா பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அவருக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பின்பு மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில் நாகார்ஜூனா குடும்பத்தினரைச் சந்தித்தது குறித்து பதிவிட்டுள்ளார்.