நடிகர் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'களத்தில் சந்திப்போம்'. பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸின் 90-ஆவது படைப்பாக உருவாகியுள்ள இப்படம், பிப்ரவரி 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அருள்நிதியோடு, நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் உரையாடினோம். அவர் நமக்கு அளித்த பேட்டி பின்வருமாறு...
'களத்தில் சந்திப்போம்' படம் பற்றி..?
தன்னுடைய நண்பனுக்கு ஒரு பிரச்சனைனா என்ன வேணாலும் பண்ணத் தயாராக இருக்கிற இரு நண்பர்களுக்கு இடையே நடக்குற கதை. இது நாம ஏற்கனவே பார்த்த கதைதான். ஆனால், இயக்குநர் கதை சொல்லும் விதம் புதுமையாக இருக்கும். காதல், காமெடி, ரொமான்ஸ்னு எல்லாம் கலந்த படமா இருக்கும்.
நீங்கள் படம் பார்த்துவிட்டீர்களா?
நான் பார்த்துவிட்டேன். பொதுவாக என்னுடைய படங்களில் கிளைமாக்ஸ் குழப்பமாக இருக்கும். சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. இந்தப் படம் பார்த்த பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருந்தது.
டபுள் ஹீரோ சப்ஜக்டில் முதல் முறையாக நடிக்கிறீர்கள். அதைப் பற்றி...?
என்னுடைய முதல் படத்தில் இருந்து எல்லா படமுமே மல்டி ஸ்டார் படம்தான். 'வம்சம்' படத்துல எனக்கு சமமான கதாபாத்திரம் சுனைனாவுக்கு இருக்கும். 'மௌனகுரு' படத்தில் ஜான் விஜய், உமா ரியாஸ் மேடம் கதாபாத்திரம் பெரிய அளவில் இருக்கும். 'தகராறு' படத்துல எல்லாருமே நண்பர்கள். என்னுடைய கதைல, எல்லா கதாபாத்திரங்களுமே சம அளவில் இருக்கும். இந்தப் படத்துல நிறைய ஹிட் படம் கொடுத்துள்ள ஜீவாவோடு இணைந்து நடிக்கிறதுனால டபுள் ஹீரோ சப்ஜக்டா தெரியுது.
தொடர்ந்து திரில்லர் வகை படங்களிலேயே நடிக்கிறீர்களே?
நாம சீரியஸா இருக்குறதுனால இது மாதிரி கதை வருதா இல்லை இது மாதிரி கதைல நாம நடிக்கிறதுனால நம்ம முகம் இப்படி மாறியிருச்சானு நானே பலமுறை யோசித்துள்ளேன். கொஞ்ச நாள் அது மாதிரியான படங்களில் நடிக்க வேண்டாம்னு நினைச்சாலும், நல்ல கதையா வரும்போது தவிர்க்க முடியல. வேற மாதிரி படங்களில் நடிக்கிறேன் என்று கதையே இல்லாத படத்தில் நடிக்க முடியாதுல. முந்தைய படமும் நடிக்கிற படமும் ஒரே மாதிரியா இருக்கக்கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருக்கேன்.
படப்பிடிப்புத் தளத்தில் கிடைத்த அனுபவம்?
நான் திரில்லர் வகை படங்கள் நடிக்கும் போது, படப்பிடிப்புத் தளமே பயங்கர சீரியஸா இருக்கும். இந்தப் படத்தில் அப்படி இல்லை. பயங்கர ஜாலியா இருக்கும். என்னடா எல்லாரும் இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்காங்களேனு நினைச்சேன். ஒரு வாரம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஜீவாதான் என்னை இயல்புநிலைக்குக் கொண்டு வந்தார்.
யுவன் இசையில் முதல் முறையாக நடித்துள்ளீர்கள்... அது பற்றி?
என்னுடைய கேரியர்ல 'வம்சம்' படத்திற்குப் பிறகு பெரிய படமாக இந்தப் படத்தைப் பார்க்கிறேன். ஆர்.பி. சௌத்ரி சார் படம் என்றாலே அது குடும்பப்படமாக இருக்கும் என மக்கள் முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதுல, யுவன் சாரோட இசை, பின்னணி இசை படத்திற்குக் கூடுதல் ப்ளஸ்.
அரசியல் களத்துல உங்களைச் சந்திக்கலாமா?
சினிமாதான் எனக்கு எல்லாம். அதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறேன். கபடியை மையமாக வைத்து உருவான படம் என்பதால் 'களத்தில் சந்திப்போம்' எனப் பெயர் வைத்துள்ளோம். மற்றபடி வேறெதுவுமில்லை.
ஒரு வேளை எதிர்காலத்தில்?
அதற்கு எதிர்காலத்தில் பதில் சொல்கிறேன்.