



அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் கமிட்டாகியுள்ளதாகத் தகவல் வெளியானது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது.
அங்கு நடந்த படப்பிடிப்பின்போது படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.
இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஆரவ், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளது உறுதியாகிவிட்டது. அஜித்துடன் இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அர்ஜுன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் யார் என்று யூகியுங்கள்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தப் பதிவிற்கு கீழ் அனைவரும் அஜித் என கமெண்ட் செய்திருந்தனர்.
இந்த நிலையில் படக்குழுவை அஜித் எடுத்த புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அர்ஜுன் நேற்று பகிர்ந்திருந்த புகைப்படம், இயக்குநர் மகிழ் திருமேனியின் புகைப்படம், ரெஜினா கெஸாண்ட்ராவின் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா கமிட் செய்யப்பட்டார். முதற்கட்ட படப்பிடிப்பும் அவர்தான் பணியாற்றினார். ஆனால் அண்மையில் திடீரென்று ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் விடாமுயற்சி படத்தில் பணியாற்றி வருவதாகத் தகவல் வெளியானது. அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.