Skip to main content

என் டார்கெட் அவளது விழிகள்! லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #9

Published on 03/09/2020 | Edited on 03/09/2020
beautiful eyes

 

முந்தைய பகுதி:

"இருள் மூடிய அந்த இடத்தில் அவள் வேகமாய் ஓடிக்கொண்டு இருந்தாள்.." - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #8

 

இறுக்கமாய் சாத்தப்பட்ட கதவுகள் திறப்பு குமிழின் மேல் எப்போதோ பிராணன் விட்டுப் போயிருந்த அவளின் சிகப்பு திரவத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட யாரோ ஒருவனின் கைரேகைப் பதிவுகளாய். இரவு ஒரு மணியை நெருங்கிக் கொண்டு இருந்த கடிகாரம் அவனால் மூர்க்கத்தனம் செலுத்தப்பட்ட அவளின் உடலைக் கண்டு ஒரு விநாடி தயங்கி பின் தன் ஓட்டத்தைத் துவங்கியது. டிக் டிக் என்று துல்லியமான சப்தம் நிசப்தக் குறட்டையை விரட்டும் மருந்தாய்.

 

ருத்ரமான கண்களில் ஒரு வித பளபளப்பை உணர்ந்து எச்சரிக்கை தூறலில் அவள் நனைவதற்குள் எதிர்கொண்ட முதல் தாக்குதல் வயிற்றுப்பிரதேசம் முழுவதும் நான்கு அங்குல வெண்கல வஸ்துவை பவ்யமாய் தாங்கிக் கிழிந்த திசைகளில் சூடாய் வழிந்த திரவத்தை வெகு ஆர்வமாய் நீல நிற பாட்டில்களில் நிரப்பிக்கொண்டேன் நான்.

 

தடால் என்ற உடலதிர்வில் மீதம் புள்ளிகளாய் மொசைக் தரையில் பீய்ச்சியடித்து, சிதறிய ரத்தக் குழம்புகளை விரற்கரண்டியில் வழிக்க ஆறு மாத பெண்ணின் கர்ப்பத்தைப் போல முழுமையடையாமல் முக்காவாசியில் நிறைந்திருந்ததில் என் நீண்ட கரங்களை வைத்து முதுகைத் தட்டிக்கொண்டே வெல்டன் டார்கெட் அட்சீவ் பண்ணிட்டே என்றேன் நான்.

 

டார்கெட் இந்த ஒரு வார்த்தைதான் வருடம் முழுமைக்கும் என்னைத் துரத்திக் கொண்டு இருக்கிறது. பந்தயக் குதிரையின் மேல் ஓட்டப்படும் ஸ்டிக்கரைப் போல, டார்கெட் ஒட்டப்பட்ட பயணக்குதிரையாய் ஓடி ஓடி எது இலக்கு எது எல்லை என்றே அறியமுடியாமல்....?! வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த என் குதிரையின் லகானை பிடித்தது ஷீலாவின் அந்த கண்கள்தானே!

 

man with knife

 

ஹால் முழுவதும் வண்ண விளக்குகளில் கைகளில் பளபளக்கும் ஷீல்ட்டை ஸ்பரிசித்து கொண்டே எப்படி டியர் உங்களால் மட்டும் ஒவ்வொரு வருடமும் டார்கெட் கம்ப்ளீட் பண்ண முடியுது என்ற அந்த ரோஜா நிற லிப்ஸிட்டிக் பெண்ணின் வார்த்தைகளையும், இவனுக்கு எங்கேயோ மச்சம்டா என்ற சக ஊழியர்களின் பொறாமைப் பார்வைகளையும் வாங்கிக்கொண்ட சுகானுபவம். 26 வருட எக்ஸ்பீரியன்ஸ். ஆனால் கடந்த இரண்டு வருடமாக பூஜ்ஜியமாகிப் போனேன்.

 

ச்சே....என்று தலையில் அடித்தபடியே என் இந்த புரோஜெக்ட்டில் யாரும் என்னை ஓவர்டேக் பண்ண முடியாது முக்கியமாய் அந்த ஷீலா.... ஆணிவேராய் இருந்த என்னை அலங்காரப்பொருளைப் போல அழகாய் ஒதுக்கியவள். உங்களுக்குத் தெரியுமா ஏமாற்றங்கள் அழியச் சொல்லும் வெகு அபூர்வமாய் அழிக்கவும் சொல்லும் எனக்கு அழிக்கச் சொல்லியது.

 

இன் பண்ண சட்டும் மடிப்பு கலையாத பேண்ட்டும் நுனிநாக்கு ஆங்கிலமும் கலந்த என்னை இறைச்சி வெட்டும் சாத்தானைப் போல மாற்றியது அந்த ஏமாற்றங்கள்தான். அது தந்த ஆக்ரோஷமான கீறல்கள்தான். விவாகரத்து செய்யப்பட்ட இருளை மறுநாளைக்கான ஜீவனாம்சத்துடன் ஒதுக்கி, வெளிச்சத்தைக் காமத்துடன் போர்த்திக் கொண்டான் வானமனிதன்.

 

ஷீலாவின் பிளந்திருந்த கருவிழிகளின் மேல் கட்டெறும்பு ஒன்று ஓடி விழித்திரையை கிழிக்கத் தொடங்கியது என்னைப் போலவே நின்று நிதானமாக விளையாடி ரசித்து சுவைக்கிறது அந்த கட்டெறும்பு. ஏய் அவள் உன்னை என்ன செய்தாள் ? என்ற என் கேள்வியை மதிக்காமல் கருமமே கண்ணாய் இருந்தது கட்டெறும்பு.

 

இந்த வீட்டிற்குள் நுழையும் வரையில் இவள் யாரென்று தெரியாது, அழுந்த துடைத்த வியர்வை ஏற்படுத்திய கசகசப்பு போக சட்டை பட்டன்களை நீக்கிவிட்டு காற்றுக்காய் நிமிர்ந்த போது அவள் பால்கனியின் விளிம்புகளில் என்னை நேருக்கு நேர் பார்த்தபடி, ச்சீ என்ற வெறுப்பினை உமிழ்ந்த அந்த கண்கள் தெருவிளக்கின் நியான் ஒளியில் ஷீலாவின் கண்களை ஒத்திருந்தது தான் இவளின் குற்றம் என் டார்கெட் இவள்தான் என்று நான் முடிவு செய்த அத்தருணம்.

 

மூளையின் அரைக்கோளங்களின் குழியான வென்ட்ரிக்களில் 550மில்லிலிட்டர் நிரம்பியிருக்கும் நிறமற்ற திரவம் மூளையின் ஒட்டுமொத்த எடையும் அடிப்பாகத்தில் படர்ந்திருக்கும் நரம்புகளை நசுக்கப்படாமல் காத்திருக்கும் அதன் அடர்த்தி என் வரையில் சரியாக சுரக்காமல் நாவறண்டு போயிருக்க வேண்டும்.

 

சென்ற வாரமும் இப்படித்தான் பால்பண்ணையின் வாசலில் வயிற்றை நிரப்பிக்கொள்ள காத்திருக்கும் கேன்களில் பத்து கேன்களில் இளஞ்சூடான செந்நீரைக் கலந்தேன். அது மனித ரத்தம் அல்ல என்று பின்னாளில் ஏதோவொரு பாரன்சிக்கின் அமில உபயத்தில் அறிந்து கொண்டீர்களே நீங்கள் கூட ஆம் அது மார்கழி அதிகாலை மகிழ்வில் இணைந்த ஒரு நாயின் ரத்தம்.

 

ஏழு நாளைய சில மணி நேரங்களுக்கு முன்னர் பால்பண்ணையின் வாசலில் வயிற்றை நிரப்பிக்கொள்ள காத்திருக்கும் கேன்களில் பத்து கேன்களில் இளஞ்சூடான செந்நீரைக் கலந்தேன். அது மனித ரத்தம் அல்ல என்று பின்னாளில் ஏதோவொரு பாரன்சிக்கின் அமில உபயத்தில் அறிந்து கொண்டீர்களே நீங்கள் கூட ஆம் அது மார்கழி அதிகாலை மகிழ்வில் இணைந்த ஒரு நாலு கால் ஜீவனின் ரத்தம். அதைப்போலவே ஒரு நாள் ஷீலாவின் விழிகளுக்குள்ளும் ஆணவமகற்றப்பட்ட ஒரு வெறுமைத்தனத்தைக் காண்பதே என் வாழ்நாள் டார்கெட். என்ன நான் சொல்றது சரிதானே? ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்லலாமே? என் டார்கெட்டை அடைய...