Skip to main content

நிறம் மாறும் செங்கொடி தேசம்! – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 8

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
vietnam-travel-series-part-8

சிறைச்சாலையின் அந்த இருட்டினுள் நடந்த பயங்கரங்களால் உடல் தசைகள் சில்லிட்டது என்று கடந்த பகுதியில் சொல்லியிருந்தேன் அல்லவா? அப்படி என்ன நடந்தது சிறையின் அந்தப் பகுதியில், நாட்டில் கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோரும், அரசை எதிர்ப்பவர்களுக்கும் தண்டனை வழங்கும் இடம் அது. அந்த இடத்திற்கு பெயர் ‘கச்சோட்’!

அந்தக் கச்சோட்டுக்குள் சூரிய ஒளி நுழையாது; கும்மிருட்டில் தான் தண்டனை காலத்தை கழிக்க வேண்டும். தண்டனை பெற்று கச்சோட்டுக்குள் செல்பர்களின் கால்கள் அங்கு தரையில் உள்ள இரும்பு லாக்கால் பூட்டப்படும். அவர்கள் ஒரு பக்கமாக தான் இருக்க வேண்டும். திரும்பிக்கூட படுக்க முடியாது. கச்சோட்டுக்குள் கழுத்தை துண்டாக்கி கொல்லும் தண்டனையும், கழுத்தில் இரும்பு ராடுகளை சொருகி கொல்லும் முறையும் இருந்தன. வியட்நாம் சுதந்திரத்திற்காக போராடிய அரசியல் கைதிகளை அடைக்க இந்த சிறை பயன்படுத்தப்பட்டது. வியட்நாமிய கைதிகள் இங்குள்ள காவலர்களால் இரக்கமின்றி சித்திரவதை செய்யப்பட்டு, தினமும் தாக்கப்பட்டனர். சித்திரவதைகளில் மின்சார அதிர்ச்சி, தலைகீழாக தொங்குதல் மற்றும் மோசமான சாப்பாட்டை தந்தனர். 

vietnam-travel-series-part-8

முதலில் 200 பேரை அடைக்கும் விதமாக கட்டப்பட்ட இந்த சிறையில் அதைவிட 10 மடங்கு பேர் அடைக்கப்பட்டனர். 1913களில் 600 பேர் வரை அடைக்கப்பட்டனர். பின்னர் 1916ல் 700 கைதிகள், 1922ல் 895 கைதிகள், 1954ல் 2 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டனர். 

ஒரு காலத்தில் இந்தோசீனாவில் உடைக்க முடியாத சிறையாகவும் யாரும் தப்பிக்க முடியாதபடி பாதுகாப்பானதாகவும் இது கருதப்பட்டதாக கடந்த பகுதியில் சொல்லியிருந்தேன். ஆனால், இந்தச் சிறையில் இருந்து மரணத் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் 16 பேர் தப்பிச் சென்று மீண்டும் நாட்டின் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றனர். விடுதலைக்காகப் போராடி கைது செய்யப்பட்ட அந்த 16 பேரும், 1951 டிசம்பர் 24 ஆம் தேதி சிறை வளாகத்திலிருந்து பாதாள சாக்கடைக்கு தண்ணீர் செல்லும் வழியாக தப்பிச்சென்று மீண்டும் விடுதலை போராட்டத்தில் கலந்துகொண்டு போராடினர் என்றார் சுற்றுலா வழிகாட்டி.

vietnam-travel-series-part-8

1954இல் பிரெஞ்சுக்காரர்கள் ஹனோயிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால், அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த சிறை அதன் பிறகும் தொடர்ந்து செயல்பட்டே வந்தது. 1964 முதல் 1973 வரை, இரண்டாம் இந்தோசீனா போரின் போது வியட்நாமை எதிர்த்த அமெரிக்க போர் கைதிகளை அடைத்து வைக்கும் சிறையாகவும் இருந்து வந்தது. அமெரிக்காவுடனான போருக்கு பிறகும் அடுத்த 20 ஆண்டுகள் உள்நாட்டு அரசியல் கிளர்ச்சியாளர்களை காவலில் வைக்க இந்த சிறை பயன்பட்டது. 1990 ஆம் ஆண்டு இந்த சிறைச்சாலை மூடப்பட்டது. 

நகரத்தின் மையத்தில் இருந்த இந்த சிறைச்சாலை, நகரத்தின் வளர்ச்சிக்காகவும், அரசின் செயல்பாடுகளுக்காகவும் பெரிய கட்டடங்கள் கட்டுவதற்காகவும் சிறைச்சாலையின் பெரும்பகுதி இடிக்கப்பட்டது. வியட்நாமின் விடுதலை வரலாற்றில் காலத்தால் அழிக்க முடியாத பல வரலாற்று நிகழ்வுகளைக் கொண்ட அந்த சிறையின் முகப்பு பகுதியும், சில பகுதிகளும் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது. அந்தச் சிறை கட்டடத்தின் கற்கள் சொல்லும் வரலாற்றை பிற்கால சந்ததிகள் தெரிந்துகொள்ளவே அது தற்போது அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

vietnam-travel-series-part-8

‘ஹோவா லோ’ சிறை உள்ளே சிறை கைதிகள் நடத்திய முறையை மினியேச்சர், சிற்பங்கள், உருவ பொம்மைகள், ஓவியங்கள் வழியாகவும் அதன் குறிப்புகள் வழியாக பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துகின்றனர். இந்த சிறைக்கு வருபவர்கள் இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்களை அதாவது 1896 முதல் 1955 வரையிலான பிரெஞ்ச் காலக்கட்ட சிறை குறித்தும், 1964 முதல் 1975 வரையிலான வியட்நாம் நாட்டின் சிறை செயல்பாடுகள் குறித்தும் அறிந்துகொள்ள முடியும். இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதே எனது கருத்து. இந்த சிறையை மையமாக வைத்து தி ஹனாய் ஹில்டன் என்கிற பெயரில் ஹாலிவுட்டில் 1988களில் திரைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய வியட்நாமின் சிறையும், அரசியல் கைதிகளைப் பற்றியும் ஹோவா லோ சிறை வரலாறாக நமக்கு சொல்ல, இன்றைய வியட்நாம் அரசியல் கைதிகளும் அவர்கள் சிறைபடுவதும் குறித்து 88 இயக்கம் கனமான குரலில் வரலாற்றை எழுதி வருகிறது. அது என்ன 88 இயக்கம்? 

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம்! – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 7