கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் மது விற்பனை குறித்த பல்வேறு தகவல்களை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
ஸ்பிரிட் வைத்துக்கொள்வதற்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். அரசிடம் அனுமதி பெறாமல் நடத்தப்படும் அனைத்தும் கள்ளச்சாராயம் என்றும், கள்ளக்கடத்தல் என்றும் தான் கருதப்படும். சாராய தயாரிப்பில் ஏற்படும் பிரச்சனையால் தான் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படுகின்றன. மதுபான தொழிற்சாலைகளில் மதுபானம் தயாரிக்கும்போது, எவ்வளவு சதவீதம் ஆல்கஹால் சேர்க்கலாம் என்பதை நிர்ணயம் செய்வதற்கு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இருக்கின்றனர். அந்த அதிகாரிகளிடம் சான்று பெற வேண்டும்.
அந்த அதிகாரிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள். சாராயக் கலவையில் செய்யப்படும் அளவு மீறல் காரணமாகவே உடலுக்கு கேடு வரும். விலைக் குறைவாக இருப்பதாலும், நீண்டகால பழக்கத்தினாலும் சிலர் கள்ளச்சாராயத்தின் பக்கம் செல்கின்றனர். இந்தியா முழுக்கவே இது இருக்கிறது. தரமில்லாத சாராயத்தைக் குடிக்கும்போது மக்கள் இறக்கின்றனர். கள்ளச்சாராயம் என்பது காலங்காலமாக இருக்கிறது. இதற்கும் ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனிதகுலம் தோன்றியதிலிருந்தே இருக்கும் சில தவறான விஷயங்கள் போல் தான் இதுவும்.
ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குறைவு. வடமாநிலங்களில் அரசாங்கம் விற்கும் மதுபானங்களை யாரும் மதிக்கமாட்டார்கள். கள்ளச்சாராயத்துக்கு தான் அங்கு மதிப்பு அதிகம். டாஸ்மாக்கில் விற்பனை குறைந்தால் அதற்கு காரணம் கள்ளச்சாராயமாகத் தான் இருக்கும் என்கிற ரீதியில் எப்போதும் விசாரணை நடக்கும். சமீபத்தில் நடந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு உளவுத்துறை சரியான தகவல் தராததே காரணமாக இருக்கலாம். ஆனால் காவல்துறையில் இதைக் கண்டுபிடிப்பதற்கு சிறப்பு பிரிவு இருக்கிறது.
இவ்வளவு அதிகாரிகளையும் தாண்டி தவறு எப்படி நடந்தது என்பது விசாரணையில் தான் தெரியும். கள்ளச்சாராய மரணங்கள் குறித்த பல்வேறு வழக்குகளை நாங்கள் பார்த்துள்ளோம். மதுபானம் தயாரிக்கும் ஆலைகளும் நம்மிடம் இன்சூரன்ஸ் எடுப்பார்கள். மதுவிலக்கு என்பது இங்கு சாத்தியமே இல்லை. மது இல்லையென்றால் இவர்கள் வேறு விதமான போதைகளுக்கு அடிமையாகிவிடுவார்கள். குஜராத்தில் மதுவே இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் அங்கு சென்று பார்த்தால் தான் அங்கு சட்டம் எவ்வளவு மீறப்படுகிறது என்பது தெரியும். எனவே மதுவிலக்கு என்பது தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே இருக்கும். டாஸ்மாக் குறித்து அரசாங்கத்தின் மீது வைக்கப்படுவது அரைவேக்காட்டுத்தனமான விமர்சனம் தான்.