எதற்கெல்லாம் இன்சூரன்ஸ் எடுக்கப்படுகிறது என்பது குறித்த சுவாரசியமான தகவல்களையும், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட நாட்களாகப் பணிபுரிந்த தன்னுடைய அனுபவங்களையும் “சொல்ல மறந்த கதை” என்னும் தொடர் வழியாக நம்மோடு ராஜ்குமார் பகிர்ந்து கொள்கிறார்.
அனைத்து அரசாங்கங்களுமே ஏழை மக்களுக்காக நிறைய திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டம் முதலமைச்சர் காப்பீடு திட்டம். இதுவரை ஒரு கோடியே 45 லட்சம் குடும்பத்தினர் இதன் மூலம் தமிழ்நாட்டில் பயன்பெற்றுள்ளனர். இதில் ஒரு மாதத்திற்கு 12 ஆயிரத்துக்குள் வருமானம் இருக்கும் 4 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் வரை காப்பீடு உண்டு. 98 சதவீத வியாதிகள் இந்த காப்பீட்டுக்குள் அடங்குகின்றன.
உலக சுகாதார நிறுவனமே பாராட்டிய திட்டம் இது. தமிழ்நாட்டைப் பார்த்து நிறைய மாநிலங்கள் இதைச் செயல்படுத்தினாலும், தமிழ்நாடு அளவுக்கு யாரும் வெற்றியடையவில்லை. இந்தத் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தும்போது இவ்வளவு பெரிய வெற்றியடையும் என்று நினைக்கவில்லை. இந்த காப்பீடுக்கான தனி வார்டுகளே அரசு மருத்துவமனைகளில் இருக்கின்றன. மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மருத்துவமனைகளுக்கு நிறைய நவீன கருவிகள் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளன.
பல தனியார் மருத்துவமனைகளிலும் இந்த காப்பீடு செல்லும். இந்தத் திட்டத்தின் மூலம் நஷ்டம் ஏற்படும் என்று பல உயர் அதிகாரிகளும் நிபுணர்களும் கூறினார்கள். ஆனால் இன்றுவரை இது லாபத்தை மட்டுமே வழங்கி வருகிறது. மிகப்பெரிய தொழிலதிபர் ஏ.சி. முத்தையா அவர்கள் ஒருமுறை அவருடைய வீட்டு திருமணத்துக்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று நம்மிடம் வந்தார். இதனால் நாங்களே ஒரு நிமிடம் திகைத்தோம். அந்த கல்யாணத்தை முழுமையாக இன்சூரன்ஸ் மூலம் கவர் செய்தோம்.
தவறான நிகழ்ச்சிகள் எதுவும் அந்த திருமணத்தில் நடக்கவில்லை. எனினும், இதுபோன்ற இன்சூரன்ஸ் எடுக்கும்போது சம்பந்தப்பட்டவர்களுக்கு மன நிம்மதியும் அமைதியும் கிடைக்கும். மணிரத்னம் தன்னுடைய படங்களுக்கு இன்சூரன்ஸ் எடுப்பார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரும் தங்களுடைய படங்களுக்கு இன்சூரன்ஸ் எடுப்பார்கள். படத்தில் வேலை செய்யும் நபர்கள் மற்றும் பொருட்களின் பாதுகாப்புக்காக இந்த இன்சூரன்ஸ் எடுக்கப்படுகிறது. இன்சூரன்ஸ் கொடுக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க நாங்களும் நேரம் எடுத்துக்கொள்வோம்.