குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்கும் பிரஷர் குறித்து குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் விளக்குகிறார்
தன்னுடைய குழந்தை இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதுவதாகவும், அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் கூறி ஒரு பெற்றோர் என்னிடம் வந்தனர். அந்தக் குழந்தையுடன் எனக்கு நல்ல கனெக்ட் ஏற்பட்டது. முதல் முறையே நீட் தேர்வுக்கு தான் நன்றாக பயிற்சி பெற்றதாகவும், தேர்வு நாளன்று பயத்தில் பினாயிலை எடுத்து தான் குடித்துவிட்டதாகவும் அவர் கூறினார். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டும் அந்தக் குழந்தை நீட் தேர்வை எழுதியது. ஆனால் வெற்றிபெற முடியவில்லை.
குழந்தையின் நிலைக்கு தான் கொடுத்த பிரஷர் தான் காரணம் என்று அவளுடைய தாய் ஒப்புக்கொண்டார். இப்போது தன்னுடைய குழந்தையின் உடல் நலனே தனக்கு முக்கியம் என்றும் கூறினார். முதலில் அவருக்கு நான் கவுன்சிலிங் கொடுத்தேன். குழந்தைகளை அதிகம் பிரஷர் செய்யக்கூடாது என்றேன். அந்தக் குழந்தைக்கு தன்மேல் நம்பிக்கை இருந்தாலும், தாய் அடிக்கடி இதுகுறித்து கேட்பதால், தன் மீதே ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அம்மா திட்டுவதால் மிகுந்த பயம் ஏற்பட்டது.
தான் தேர்ச்சி பெறவில்லை என்றால் தன்னுடைய தாயின் நிலை என்னவாகும் என்கிற பயம் அந்தக் குழந்தையை ஆட்கொண்டது. பயத்தில் பினாயில் குடித்ததற்கான காரணம் இதுதான். அந்தக் குழந்தைக்கு நான் கவுன்சிலிங் கொடுத்தேன். அதன் பிறகும் தேர்வு நெருங்க நெருங்க அதே பயம் குழந்தைக்கு ஏற்பட்டது. இரண்டாவது முறையும் அந்தக் குழந்தையால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் இப்போது அவளுடைய பெற்றோர் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்தனர்.
உனக்கு எது பிடிக்கிறதோ அந்தத் துறையை நீ தேர்வு செய்து படி என்று குழந்தையிடம் அவர்கள் கூறினர். குழந்தைகள் எப்போதும் பெற்றோரின் மனநிலை குறித்து தான் சிந்திப்பார்கள். தேர்வு பயத்தில் இருக்கும்போது குழந்தைகள் சரியாகத் தூங்க மாட்டார்கள். பிடித்த உணவுகளைக் கூட சரியாக சாப்பிட மாட்டார்கள். யாரோடும் பெரிதாக ஒட்ட மாட்டார்கள். எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். அவர்கள் மனச்சோர்வுடன் இருப்பதையே இது காட்டுகிறது. அந்த நேரத்தில் அவர்களுக்கு அதிக கோபம் வரும்.
ஒரு குறிப்பிட்ட காலம் தாண்டி குழந்தைகள் இவ்வாறு நடந்துகொள்ளும் போது அதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். தற்கொலை முடிவுக்கு கூட குழந்தைகள் செல்லக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். இப்போது குழந்தைகள் அதிக சென்சிடிவாக இருக்கின்றனர். அவர்களிடம் பொறுமை மிகக் குறைவாக இருக்கிறது. ஹார்மோன் மாற்றங்களும் இதற்கான காரணமாக அமைகிறது. நட்போடு கலந்த குழந்தை பராமரிப்பு முறையை பெற்றோர் கற்றுக்கொள்ள வேண்டும்.