பல்வேறு கொலை குற்றச் சம்பவங்களை ‘தடயம்’ என்னும் தொடரின் வழியே தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்கி வருகிறார். அந்த வகையில் இன்று பிரபலமாகவும், சர்வ சாதாரணமாகவும் சோசியல் மீடியாவில் பயன்படுத்தக்கூடிய 'தக் லைப்' என்ற சொல், ஒரு காலத்தில் இந்தியாவையே உலுக்கிய நிஜ தக்கீ என்ற கொலை, கொள்ளை கூட்டத்தின் சுவாரஸ்யமான வரலாற்று வழக்கின் பின்னணி பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
தக்ஸ் என்று அழைக்கப்பட்ட கொள்ளைக் கூட்டம், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போதே இருந்து வருகிறது. 'தக்' என்பதின் அர்த்தமாக தந்திரமான, மோசடி செய்பவர் என்று கூறலாம். இந்த தக்கீஸ் என்ற கொள்ளைக் கூட்டம் அருமையாக நிர்வகிக்கப்பட்டு கிட்டத்தட்ட 600 வருடங்கள் ஆட்சியர்கள் கையில் பிடிபடாமல் இருந்து வந்தது. இவர்களின் கூட்டத்தில் இருக்கும் எந்த நபருக்கும் மதம், சாதி என்ற பிரிவினை இருக்காது, 'தக்' என்ற ஒரு அடையாளம் மட்டுமே. முஸ்லீம் மதத்தவர் இருந்தாலும், இந்த கூட்டம் காளி மாதாவையே வணங்கி உயிர்ப்பலியை கொடுக்கும் பழக்கம் உடையவர்கள். இவர்கள் பெரும்பாலும் இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்தனர்.
இவர்களுக்கு என்று பிரத்யேக சங்கேத பாஷைகளும், வித்தியாசமான வாழ்க்கை முறைகளும் உண்டு. தான் செய்யும் தொழில் பற்றி சொந்தம் உட்பட யாரிடமும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாழுபவர்கள். இவர்கள், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள், இசை, நடன கலைஞர்கள், சீக்கியர்கள் என ஒரு பத்து வகை பிரிவினருக்குள் வருபவரை கொல்லக்கூடாது என்று வினோத கொள்கையை பின்பற்றினர். இவர்கள் மாட்டு வண்டிகளிலும், கழுதையிலும், நடந்தும் யாத்திரைகளுக்கு பயணம் செய்யும் மக்களை குறிவைத்து அவர்களுடன் ஒருவராக கலந்துகொண்டு, மேலும் 'தக்கீஸ்' கூட்டத்திலிருந்து தப்பிக்க அவர்களுடனே சேர்ந்து பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பேசி ஏமாற்றி கலந்துவிடுவர். இவர்களுக்கென்று பெரிய ஆயுதம் எதுவும் கிடையாது. ஒரு மஞ்சள் தலைப்பாகைக்குள் ஒரே ஒரு காயின் போன்றவற்றை வைத்து தலையில் கட்டி இருப்பர். கூட்டத்தில் முக்கியமான ஒரு நபரை பயணிகள் சோர்வடையும் நேரமாகப் பார்த்து அந்தி நேரத்தில் தனியாகப் பிரித்து அந்நபரைத் தாக்கி தலைப்பாகையினாலே கழுத்தை நெரித்து அந்த காயினால் வெட்டிச் சத்தமின்றி கொன்று விடுவர்.
இவர்கள் தங்களுக்குள் மூன்று பிரிவினராக - உளவு பார்ப்பவர், குழி வெட்டுபவர், கழுத்தை நெறிப்பவர்கள் என்று பிரித்து இருந்தனர். கழுத்தை சிறந்த முறையில் நெறிப்பவனே 'சமேதார்' என்று கூட்டத்தில் தலைவனாக நியமிக்கப்படுவான். கொன்ற சடலங்களை குழி வெட்டி ஏற்பாடாக இருக்கும் இடத்தில் போட்டுவிடுவர். பயணித்த கூட்டம் ஏற்றி வந்த வண்டியையும் ஏரிக்குள் தள்ளி, குழந்தைகள் எடுக்கப்பட்டால் அதனை தங்கள் 'தக்' கூட்டத்தில் சேர்த்துக் கொள்வர். இவர்களினால் 14-18ம் நூற்றாண்டுகளில் வருடத்திற்கு 30,000 முதல் 40,000 வரை பயணிகள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
பின்னர் ஈஸ்ட் இந்தியா கம்பெனி வந்தவுடன், இவர்கள் மீது வந்த புகார்கள் அன்றைய இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் வில்லியம் பென்டிங்க் பிரபு என்பவர், சிறப்பு விசாரணைக்காக சிப்பாய் வில்லியம் ஹென்றி ஸ்லீமன் என்பவரை தக்கீஸ் எனப்படும் வழிப்பறி கொள்ளைக் கூட்டத்தை அடக்க நியமிக்கிறார். ஸ்லீமன் இவர்களைத் தேட தனி அமைப்பை அமைக்கிறார். இவர் முதல் கட்டமாக, தக்கீஸ் அதிகமாக நடமாடும் இடங்களில் புழங்கும் 6,7 மொழிகளைக் கற்றுக்கொள்கிறார். அடுத்ததாக காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட பயணிகளின் கொலை செய்யப்பட்ட இடத்தை அறிந்து சடலங்களை எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்து அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்று அறிந்து கொள்கிறார். அடுத்ததாக தக்கீஸின் குடும்ப உறுப்பினர்களைக் கண்டுபிடித்து அவர்களின் மறு வாழ்விற்கு வழி செய்து கொடுக்கிறார். அவர்களின் குழந்தைகளுக்கு ஜமால்பூர் என்ற ஊரில் ஒரு பள்ளிக்கூடம் அமைத்தும், கைத்தொழில் செய்ய வழி அமைத்துக் கொடுத்தும், அவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறார்.
மேலும் பிடிப்பட்ட ஓரிரு தக்கீஸ்களை வைத்து அவர்களின் தலைமுறை பின்னணி கேட்டு அறிகிறார். அதன்படி அப்போது இயங்கி வந்தது ஏழாவது தலைமுறை. இவர்களின் ஆரம்பம், ராஜஸ்தானில் மியா என்கிற கோட்டைப் பகுதியில் ஆட்சி செய்த மேவாட் மன்னர்களுக்கு பூசாரிகளாக இருந்து வந்த ஒரு குடும்பத்தின் நபரே இந்த தக்கீஸ் கூட்டம் உருவாக காரணம். காலப்போக்கில், இவர்கள் 500 குடும்பமாக பெருகி, கிட்டத்தட்ட 32 கிராமங்களில் வசிக்கின்றனர். அந்த கிராமத்தின் ஜமீன்தார்களுக்கு, இவர்கள் கொள்ளையடித்து, வேட்டையாடி தரும் பொருள்களில் சிறிய பங்கு சன்மானமாக கொடுக்கப்படுகிறது. இது வீட்டில் இருக்கும் தன் குடும்பத்தை பேணிக் காக்க இது அவர்களுக்கு தேவையாக இருக்கிறது. மேலும் வரலாற்றுக் குறிப்பில், சிந்திய மன்னர்கள் இவர்களிடம் வருடத்திற்கு எட்டணா கப்பம் கொண்டு இவர்களின் குடும்பத்தை பார்த்துக் கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறது.
இந்த தக்கீஸ் என்பவர்களைப் பிடிக்க முக்கிய மைல்கல்லாக ஸ்லீமனுக்கு அமைந்தது, இந்த கூட்டத்தின் முக்கிய தலைவனான பெரங்கியா என்ற ஒருவனை பிடிக்க முயல்கின்றனர். எளிதில் மாட்டாத அவனை மிகவும் சிரமப்பட்டு ஜான்சியில் பிடிக்கின்றனர். குறிப்பாக இவனைப் பிடிக்க, ஹைதராபாத்தின் அன்றைய நிசாமும் படை வீரர்களை வைத்து தேடி இருக்கிறார். ஸ்லீமன் மேலும் 1000 தக்கீஸ்களை பெரங்கியா கொடுத்த தகவலின் பேரில் கைது செய்கின்றனர். கூடுதலாக பெரங்கியாவிற்கும் மேலே பேராம் என்பவன் தலைவனாக இருப்பது தெரிய வருகிறது. அவனையும் பிடித்து அவனோடு சேர்த்து 40 கூட்டாளிகளை ஜமால்பூர் அருகில் ஒரே மரத்தில் தூக்கிலிட்டனர். 1830ல் இந்த ஆபரேஷனை ஆரம்பித்து 1835ல் முக்கிய நபர்களைப் பிடிக்கின்றனர். 1840க்குள் தக்கீஸ்களே இல்லை என்று அறிவிக்கின்றனர். இதுபோல கொள்ளைக் கூட்டம் தொடரக்கூடும் என்றுதான் பின்னாளில் கிரிமினல் ட்ரைப்ஸ் ஆக்ட் என்று கொண்டு வருகின்றனர். 1871வது வருடம் அமல்படுத்தவும் படுகிறது.
அதன்பிறகு, இதுபோல நடப்பில் இருந்த 200 இனக் குழுக்கள் இந்த ஆக்ட் கீழ், குற்றவாளிகளாக கருதப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. அந்த சட்டத்தின் படி, அக்குடும்பத்தில் பிறந்தவர்களையும், அவர்களை சேர்ந்தவர்களையும் பிறவி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கூட சில சாதி, இனத்தை சேர்த்தவர்களையும் அப்படி அறிவித்தார்கள். இந்த பிறவி குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரமே மிகவும் பாதிக்கப்பட்டது. இவர்கள் மறுவாழ்வுக்கு வேறொரு தொழில்கள் செய்து பிழைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சுதந்திரத்தின் போது இதுபோல பிறவி குற்றவாளி என்று அவர்களை ஒதுக்கி முடக்கும் விதத்தை பா. ஜீவானந்தம் என்ற கம்யூனிஸ்ட் தலைவர், முத்துராமலிங்கம் போன்றோர் எதிர்த்தனர்.
மைக் டச் என்பவர் தன்னுடைய ஆராய்ச்சி புத்தகத்தில், தக்ஸ் அழிவின் பிறகு மிச்சம் இருக்கும் 5000 பேரில், தோராயமாக ஐநூறு பேருக்கு தூக்கு தண்டனை கொடுத்தும், சுமார் மூவாயிரம் பேரை சிறையில் அடைத்தும், மீதம் ஒரு ஆயிரம் பேரை கடுமையான தண்டனை கொடுத்து தூர தேசங்களுக்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும் 'கன்பஷன்ஸ் ஆப் எ தக்’ என்று , ஸ்லீமன் போல ஹைதராபாத்தின் நிசாமால் நியமிக்கப்பட்ட பிலிப்ஸ் மெடோஸ் என்பவர் 19ம் நூற்றாண்டில் எழுதி மிகப் பிரபலமாக விற்கப்பட்ட அந்த நூலின் அடிப்படையிலேயே நிறைய திரைப்படங்கள் வந்திருக்கிறது. இந்த 'தக்ஸ்' என்ற வார்த்தை பிரபலப்பட்டு பின்னாளில் ஆக்ஸ்போர்ட டிக்ஷனரிலேயே இடம்பெறும் அளவுக்கு ஆனது. பல்வேறு வெளிநாடுகளில் அண்டர்வேர்ல்டு குற்றவாளி கூட்டமும் தங்களை 'தக்ஸ்' என்றே அடையாளப்படுத்துகின்றனர்.