Skip to main content

சயனைடு கொண்டு பெண்கள் கொலை; கோர்ட்டில் தானே வாதாடிய கொலையாளி - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 36

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

thilagavathi-ips-rtd-thadayam-36

 

சயனைடு கொடுத்து இளம்பெண்களைக் கொலை செய்த கொலைகாரனின் வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

 

தொடர்ச்சியாக பெண்களை கொலை செய்த கொலைகாரனை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. அங்கே சயனைடு மோகன்குமார் தன்னுடன் சிறையில் இருக்கும் சிறைவாசிகளுக்கு தான் ஆங்கிலம் கற்பிக்க விரும்புவதாக ஒருமுறை அவன் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினான். சேவை மனப்பான்மை உள்ளவன் போல் தன்னை அவன் காட்டிக்கொண்டான். இவனா கொலை செய்திருப்பான் என்று எல்லோரையும் யோசிக்க வைக்கும் அளவுக்கு நல்லவனாக காட்டிக் கொண்டிருந்திருக்கிறான்.

 

அனிதா காணாமல் போனபோது தேடியதால் சிக்கியவன், அதற்கு முன்னே சுனந்தா என்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவளுடைய பெற்றோரிடம் அவன் ஒருமுறை கேட்டிருக்கிறான். வரதட்சணை எதுவும் வேண்டாம் என்றிருக்கிறான். திருமணம் செய்த பிறகு அந்தப் பெண்ணை சயனைடு கொடுத்து அவன் கொன்றான். எந்தக் கொலையையும் அவன் செய்யவில்லை என்று போலீசாரிடம் பொய் கூறினான்.

 

அனிதா என்ற ஒரு பெண்ணையும் இவன்தான் கொலை செய்தான் என்பதை மக்களிடம் காவல்துறை தெரிவித்தது. காவல்துறையிலும் பல பெண்கள் இவனால் பாதிக்கப்பட்டிருந்தனர். தொடர் கொலைகளில் அவன் ஈடுபட்டிருக்கிறான். அவன் மீது 20 வழக்குகள் பதியப்பட்டன. ஒவ்வொரு வழக்கிலும் அவனுக்கு ஒவ்வொரு விதமான தீர்ப்பு வழங்கப்பட்டது. தன்னுடைய வழக்கைத் தானே வாதாட அவன் முடிவு செய்தான். அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல வந்த பெண்களிடம் குறுக்கு விசாரணை செய்து அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நிறுவ முயன்றான். 

 

ஒரு கீழமை நீதிமன்றத்தில் இவனுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான். அங்கு வந்த தீர்ப்பை எதிர்த்து டிவிஷன் பெஞ்சுக்கு சென்றான். அவன் செய்த சில குற்றங்களுக்கு உறுதியான சாட்சியங்களும் தடயங்களும் இல்லை என்று கூறிய நீதிமன்றம், அந்த சந்தேகத்தின் பலனை அவனுக்கு வழங்கி, தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை வழங்கியது. எந்தவிதமான தண்டனைக் குறைப்பையும் அவனுக்கு செய்யக்கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. 

 

அவன் ஆயுள் முழுவதும் சிறைக்குள்ளேயே இருப்பதுதான் சரி என்று நீதிமன்றம் முடிவு செய்தது. கடைசிவரை அவன் தன்னுடைய குற்றங்களை ஒப்புக்கொள்ளவே இல்லை. அனைத்து பெண்களும் தாங்களாகவே தற்கொலை செய்துகொண்டனர் என்றும், தான் யாரையும் கொல்லவில்லை என்றும் இறுதிவரை அவன் கூறினான். அவனுக்கு பல மனைவிகள் இருந்தாலும், ஸ்ரீதேவி என்கிற இளைய மனைவி மீது அவனுக்கு அதிக அன்பு இருந்தது. அவன் செய்த குற்றங்களை அந்தப் பெண் நம்பவே இல்லை. கர்நாடகாவையே உலுக்கிய ஒரு வழக்கு இது.