Skip to main content

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! ‘சூட்சும உலகம்’ #12

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

sootchama ulagam part 12

 

வீட்டைச் சீர்செய்து, பொருட்களை அடுக்கி, ரசனையுடன் அலங்கரித்து, வித விதமாய் சமைத்து வாத்சல்யனை திகைக்க வைத்தாள் ரதி. 5000 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தின் நடுவில் வீடும், வீட்டைச் சுற்றித் தோட்டமும், அதில் மா, பலா, வாழை, தென்னை போன்ற மரங்களும், மல்லிகை, முல்லை, ரோஜாச் செடிகளும் அவற்றின் பச்சையமும் கண்களுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்க,  வாத்சல்யன் சுகந்தமான சுத்தமான காற்றை ரசித்ததோடு, ரதியிடம் பகிர்ந்துகொண்டபோது, புன்முறுவலை முகத்தில் தவழ விட்டாள் ரதி. தன் எண்ணத்தைச் சிறிது சிறிதாக வாத்சல்யனின் மனதில் பதிக்கும் முயற்சியில் இறங்கினாள்.

 

மலையாள மாந்திரீக நம்பூதிரி ஒருவனை ரகசியமாகச் சந்தித்தாள். வாத்சல்யன் தன்னை விட்டுப் பிரியாமல் இருக்கும்படி செய்ய வேண்டினாள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சொன்னாள். நம்பூதிரி கேட்டபடி வாத்சல்யனின் புகைப்படத்தையும், பனியன் ஒன்றையும் கொடுத்து விட்டு வந்தாள். அடுத்த இரண்டுநாளில் வரும் அமாவாசையில் நம்பூதிரி பூஜை செய்து, அஞ்சனம் உள்ள சிறிய பெட்டி போல் அமைப்புள்ள டப்பாவைக் கொடுத்து, தினம் அதைக் கண்களில் தீற்றிக்கொள்ளச் சொன்னதோடு,  இதை யார் கண்ணிலும் படாமல் வைத்துக்கொள்வது முக்கியம் என்பதையும் வலியுறுத்தினான். ஒரு பொடியைக் கொடுத்து தினம் பாலில் கலந்து கொடுக்கச் சொல்ல... வாங்கிக்கொண்டு வந்தாள். ரகசியமாய் ஓரிடத்தில் பதுக்கி வைத்தாள். 

 

"ரதி.... இங்கு வந்து பதினைந்து நாட்கள் ஆயிற்று. நாளைப் புறப்படலாம் என்றிருக்கிறேன். நீயும் டியூட்டியில் ஜாய்ன் பண்ணிட்டே." என்றபோது...

"தாராளமாய் போய்ட்டு வாங்க." என்றவள், மனதிற்குள் நகைத்தாள். "வாத்சல்யன்... இனி நீ எனக்கு சொந்தம்! நான் என்ன சொன்னாலும் தலையாட்டுவாய். மாலாவையும் ஏன்... உன் அம்மாவையும் கூட என்னால் ஆட்டி வைக்க முடியும் ஆனால் அது எனக்குத் தேவையில்லை. எனக்குத் தேவை நீ மட்டும்தான். மாலாவை நெருங்க முடியவில்லை என்று கதையா சொல்கிறாய்... நெருங்க முடியாமல் செய்கிறேன்" என்று மனதிற்குள் கருவினாள். 

 

இரவானதும் பாலில் வசியப்பொடியைக் கலந்து கொடுத்தாள். கண்களில் அஞ்சனத்தைச் சந்தேகம் வராதவாறு தீட்டிக்கொண்டாள். நடு இரவு வரை ஏதேனும் படிக்கும் பழக்கமுள்ள வாத்சல்யன் புத்தகத்தை நாடாமல், ரதியைத் தேடி அடுக்களைக்கு வந்தான். பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தவளைத் தூக்கியபோது...

 

"ஏய்... என்ன இது...?  விடு  வத்சு. நாளை மார்னிங் டியூட்டி... பாத்திரத்தைத் தேய்ச்சுட்டு வந்துடுறேன்" என்று கெஞ்சுவது போல் நடித்து... அஞ்சனமிட்ட கண்களால் வாத்சல்யனை உற்றுப் பார்த்துச் சிணுங்கினாள். "விடேன் ப்ளீஸ்"... கெஞ்சுவது போலொரு பாவனையில் வாத்யனின் தலையைக் கலைத்தாள். "முரட்டுப் பயல்டா நீ. நாளைக்கு ஊருக்குப் போ... இரண்டு நாளாவது ஃபிரீயா இருப்பேன்!" என்ற எதையும்  வாத்சல்யன் பொருட்படுத்தவில்லை.

 

மறுநாள் விடியலில் எழுந்து பாத்திரம் தேய்த்தான்; காய்கறிகள் நறுக்கினான்; பால் காய்ச்சினான்; காஃபியுடன் சென்று ரதியை எழுப்பினான். திகைத்துப் போனாள் ரதி. இப்படித்தானே உன்னோடு வாழ ஆசைப்பட்டேன் என்று மனதிற்குள் நினைத்தபடி

 

"டிப்பிக்கல் கணவனா மாறிட்டியா... குட்  பாய்...!” என்று சிலாகித்தபடி எழுந்து குளித்துவிட்டு வருவதற்குள், நான்கு பிரட் சிலைஸ்களை ரோஸ்ட் செய்து வெண்ணெய் தடவி வைத்தான். அதில் இரண்டை மட்டும் புசித்து விட்டு ரதி ஓட, வாசல் வரைச் சென்று வழியனுப்பினான். அடுத்த வந்த நாட்கள் இப்படியே நகர ஊருக்குப் போகும் எண்ணமே வராமல் போக... விசாலம் மகனை ஃபோனில் அழைத்தாள்.

 

"வாத்சல்யா... நீ போய்  இரண்டு வாரத்துக்கு மேலாச்சு. இன்னும் அம்மாவோட நினைப்பு வரலையா..". ? 

"சாரி மா... வீட்டை சீர்செய்யவே ஒரு வாரம் ஆச்சு. அந்த அலுப்பே இன்னும் போகலை. ரதி கூட ஞாபகப்படுத்தினாள். அநேகமா இன்னிக்கு டிக்கெட் புக் பண்ணிடுவான்னு நினைக்கிறேன். நாளைக்குப் புறப்பட்டு வருவேன் மா. இரண்டு நாளில் மறுபடியும் இங்கே வர வேண்டியிருக்கும்ன்னு நினைக்கிறேன். கோவிலில் பூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கா. அதற்கு நான் இருந்தே ஆகனும்னு சொன்னாள்.

 

"அதெல்லாம் சரி டா. நீ முதலில் இங்கு வந்துட்டுப் போ.. முக்கியமான விசயம் பேசணும்! "

" என்ன விசயம்னு சொல்லு மா."

"நேரில் வா சொல்றேன்" என்ற விசாலம் ஃபோனை துண்டித்ததும் யோசித்தான். என்னவாக இருக்கும்...? எதுவானால் என்ன... போனால் தெரிந்துகொள்ளப் போகிறோம் என்று தனக்குள் பேசியபடி, குக்கரில் சாதம் வைத்தான். வெட்டி வைத்த காய்கறிகளில் இரண்டை ஒன்றை பொரியல் செய்தான். ஒன்றை சாம்பாரில் போட்டான். சாப்பிடாமல் ரதிக்காகக் காத்திருந்தான். நேற்றைய நிகழ்வுகள் மனதில் ஓடின. அடங்காத குதிரையாய் ஆட்டம் போட்டதை நினைத்து வெட்கினான். கூடவே மாலாவின் நினைவு வர, குற்ற உணர்வில் குமைந்தான்.

 

"நான் வந்தது கூடத் தெரியாமல் அப்படியென்ன யோசனை..." ரதியின் குரல் கேட்க...

"அம்மா ஃபோன் செய்தார்கள் நாளைக்குப் புறப்படலாம் என்றிருக்கிறேன். டிக்கெட் புக் பண்ணிட்டியா...?”

"ம்ம்ம்... ரிட்டன் டிக்கெட்டும் புக் பண்ணிட்டேன். சுணங்கி நிற்காமல் வந்துடுங்க. கோவிலில் பூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்."

"சரி. வா சாப்பிடலாம்" என்ற வாத்சல்யனிடம்... "ஒரு குளியல் போட்டுட்டு வந்துடுறேன்” என்று சிட்டாய் பறந்தாள். மனசு பரபரத்தது. நடப்பதெல்லாம் கனவா... நனவா... என்று ஒருமுறை தன்னையே கிள்ளிப் பார்த்துக்கொண்டாள். வாத்சல்யன் கிடைக்கவே மாட்டான் என்று நம்பிக்கையற்று இருந்த வேளையில்... தன் போக்கில் போய்க்கொண்டிருந்தவளை வம்பாக இழுத்து நிறுத்தியது விசாலத்தின் சந்தேகம்.  மாலாவும் அலட்சியப் பார்வை! காலச் சூழல்தான் மனித மனங்களை மாற்றுகிறது. தன்னால் கூட இப்படியெல்லாம் நடந்து கொள்ள முடியுமா...? என்ற கேள்விக்குறி எழத்தான் செய்கிறது. ஆனால்... என்ன செய்ய... விதி வலியது!" என்று தனக்குள் பேசியபடி  குளித்துவிட்டு தலையைத் துவட்டியபடி வந்து டைனிங் டேபிள் முன் அமர்ந்தாள். இருவருக்கும்  உணவு பரிமாறிய வாத்சல்யனிடம்... "எப்போது மாற்றலாகி வருவாய்...? என்னால் உன்னைப் பிரிந்து இருக்க முடியாதுடா." என்றதும் தலை நிமிர்ந்து ரதியைப் பார்த்தான்.

"எப்போது வரமுடியுமோ... அதுவரை நீ சமாளித்துத்தான் ஆக வேண்டும். அம்மா என்ன சொல்வாளோ... ஏற்கனவே மாலாவோடு பேச்சுவார்த்தையில்லை. என் முகம் பார்த்துப் பேசுவதே இல்லை."

" ம்ம்ம்... மாற்றல் கிடைச்சதும் டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிடு. ஒப்புக்கு ஒரு மனைவி உனக்குத் தேவையா."..? என்றதும் திடுக்கிட்டான்.

"ரதி.... திஸ் இஸ் டூ மச்!  காதலித்த உன்னையே விட முடியாமல்தானே ஓடி வந்தேன். கட்டியவளை விட முடியுமா...? வேறு ஏதாவது பேசு. உன்னுடன்தானே இருக்கிறேன். இன்னும் என்னதான் வேண்டும் உனக்கு..?”

"வேண்டும் எல்லாம் வேண்டும்! தாலி கட்டிய மனைவி என்ற அந்தஸ்து வேண்டும். உன் குழந்தைக்கு முதலில் நான்தான் தாயாக வேண்டும்! "

"இவ்வளவு தூரம் யோசிப்பாய் என்று நான் நினைக்கவே இல்லை." என்றான் வாத்சல்யன்

"யோசி...நன்றாக யோசி! மனைவியை டைவர்ஸ் பண்ண முடியாது என்கிறாய். விட்டு விடுகிறேன்! தாலி கட்ட ஏன் தயங்குகிறாய்...? என்மேல் அன்பில்லையா."..? 

"ரதி... சிறிது காலம் அவகாசம் கொடு. அம்மாவிடமும், மாலாவிடமும் பேசிப் பார்க்கிறேன்."

"பேச்சுவார்த்தையெல்லாம் எடுபடாது. துணிந்தவனுக்குத் துக்கமில்லை! தவிர... நானும் நீயும் வாழ வேண்டும் என்றுதான் விதிக்கப்பட்டிருக்கிறது." என்ற ரதி கையலம்பி எழுந்து செல்ல... வாத்சல்யன் கண்மூடி அமர்ந்தான். எது சரி... எது தவறு என்று புரியாமல் தத்தளித்தான். மனக்குரங்கு தாவித் தாவி அலைந்தது.

 

ரதி கண்களில் வசிய மையை மெலிதாகத் தீற்றிக் கொண்டு, அருகே வந்தாள். 

"ஐ லவ் யூ டியர்!" என்றவள், “என் விருப்பத்தைச் சொன்னேன். உன் விருப்பம்தான் எனக்கு முக்கியம்! எதற்கு விசனப்படுகிறாய். உன்னை ஒரு நொடி கூடப் பிரியக் கூடாது என்ற பேராசை! மாலா சின்னப் பெண் அவளுக்கும் நீ வேண்டும்தானே... நான் சொன்னதை மறந்துடு." என்றபடி அணைத்து ஆறுதல் படுத்த...

"ஐ. லவ் யூ டூ... உன் விருப்பப்படி நடக்கிறேன்.  ஊருக்குப் போவதைத் தள்ளிப் போடுகிறேன். இன்னும் ஒருவாரம் விடுமுறை இருக்கிறது. நம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்...! என்ற வாத்சல்யன், ரதியின் காந்தப் பார்வையில் மயங்கினான்.

 

(திகில் தொடரும் )

 

 

-இளமதி பத்மா

 

 

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #11