முன்பெல்லாம் மனசு தெளிவாக இல்லாமல் இருக்கும்போது தாத்தா - பாட்டி பக்கத்தில் சென்று அமர்ந்தால், அவர்கள் பல நீதிக் கதைகளையும் கருத்துகளையும் சொல்வார்கள். அதைக் கேட்கும்போது நம் பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைத்துவிடும். இப்போதோ அப்படியொரு வாய்ப்பு யாருக்கும் கிடைப்பதில்லை. பெரும்பாலான இல்லங்களில் தாத்தா - பாட்டிகளே இருப்பதில்லை. எல்லோரையும் முதியோர் இல்லங்களுக்குப் பார்சல் செய்துவிடுகிறார்கள் நவீன உலகினர். இருக்கும் சிலரின் அறிவுரைகளையும் பெருசுகளின் புலம்பல் என்று கூறிக்கொண்டு, இளைய தலைமுறையினர் கேட்பதில்லை.
அதனால், இப்போதெல்லாம் இளைய தலைமுறையினரின் பிரச்சனைகளுக்கான தீர்வு அவர்கள் கைகளில்தான் உள்ளது. தன்னை நம்புவதைவிட, கூகுளை அதிகளவு நம்புகிறார்கள் நம்மவர்கள். கவியும் அந்த மனநிலையில்தான் இருந்தாள். ‘பராசக்தி’ படத்தில் வரும் கோர்ட் சீனை அவள் பார்க்க நேர்ந்தபோது, அதில் வக்கீலாக கவியும், சிவாஜியாக கவியின் மனசாட்சியையும் மாறிமாறி நின்று வாதிட்டனர்.
தன் செயல்களை நியாயம் என்று நினைத்துக்கொண்டு அதைச் சார்ந்த வாதத்தையே வைத்து முன்னேறினாள் கவி.
உண்மைதான். அப்படி ஒரு நியாயத்தைத்தான் கவியும் தன்னிடம் வைத்துக்கொண்டு, அது ஜெயிக்க வேண்டும் என்று போராடுகிறாள். இருப்பினும் அவள் இப்போது குழப்பமான மனநிலையில் இருந்தாள்.
லில்லியின் கேஸ், அலாவுதீன் அற்புத விளக்கு மாதிரி தேய்க்கத் தேய்க்க நிறைய பூதங்கள் கிளம்புகிறதே எனத் திகைப்பான யோசனையில் மூழ்கினாள்.
கவியின் நோக்கம் தியாவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தது. அதோடு கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு அரங்கேறும் பாலியல் தொந்தரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதும் அவள் நோக்கமாக இருந்தது. உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க முடியாவிட்டாலும், அதற்கு வேகத்தடை போல் ஒரு கமாவாவது போடவேண்டும் என்கிற ஆதங்கம் அவளிடம் பீறிட்டது. சில நேரங்களில் தான் செய்வது சரிதானா என்று தன்னைத்தானே சுய பரிசோதனை செய்துகொள்வாள் கவி. ‘மனசாட்சியுடன் பேசுகிறது மௌனம்’ என்று எங்கோ படித்த வரிகளை நினைத்து மௌனமாக மனசாட்சியுடன் பேசிக்கொண்டிருந்தாள் கவி.
அந்த நேரம் கவியின் அறைக்கதவு தட்டப்பட, சோர்வுடனே சென்று கதவைத் திறந்தாள்.
"ஹாய்" என்று சொல்லியபடி ராம் அங்கே நின்றிருந்தான். கொஞ்சம் புளிப்பு, கொஞ்சம் இனிப்பு மாதிரி இருந்தது ராமின் வருகை.
"ஹாய்" என்று பதிலுக்குச் சொல்லிவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். ராமும் ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.
"என்ன ஒரே மேகமூட்டமாக இருக்கு. கண்கள் மழை பெய்த மாதிரி இருக்கே?” என்று கிண்டல் செய்தான் ராம்.
"என்னன்னு உனக்கு தெரியாதா ராம்?" என்று பதில் கேள்வி கேட்டாள்.
"நல்ல செய்தி ஒன்னு இருக்கு, கெட்ட செய்தி ஒன்னு இருக்கு. எதை முதலில் சொல்வது?" என்று பீடிகை போட்டான்.
"கெட்டதை முதலில் சொல்லு, அப்பதான் நல்லதைச் சொல்லும்போது ஆறுதலாக இருக்கும்" என்றாள்.
"என் டாடி இன்று ஈவினிங் கனடாவிலிருந்து வராரு" என்றான்.
“பெரியப்பா வர்ரது எனக்கு எப்படி கெட்ட செய்தியாக இருக்கும்? லூசா நீ" என்றாள்.
"சேர்மனை, அதாவது உங்க அப்பாவைப் பழி வாங்கணும்னு நீ துடிக்கிற. அண்ணன் வந்துட்டா தம்பிக்குப் பலம்தானே? எப்படி உன்னால் பழிவாங்க முடியும்? அதான் சொன்னேன் கெட்ட செய்தின்னு" என்று விளக்கினான்.
"நான் சொன்னேனா? அப்பாவைப் பழிவாங்கப் போறேன்னு. அப்பா எந்த வகையிலும் அக்யூஸ்ட்டாக இருக்க மாட்டார். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். இதையெல்லாம் நீயாக கற்பனை பண்ணிக்கிட்டு OTT ல படம் ரிலீஸ் பண்றியா" என்று எரிச்சலாகச் சொன்னாள்.
"இது கற்பனையா, இல்லை உண்மையான்னு இன்னும் ஓரிரு நாள்ல வெளியே வரும்” என்று சவால் விட்டான்.
"சரி நல்ல செய்தி என்னன்னு சொல்லு" என்று இயல்பாகக் கேட்டாள்.
"இன்ஸ்பெக்டர் ஃபோன் பண்ணினார். லில்லி கேஸ் முடிஞ்சு ஃபைலைக் குளோஸ் பண்ணிட்டாங்களாம். லில்லியின் மரணத்திற்குக் காரணம் அவர்களுடைய கவனக்குறைவுதான். பள்ளியைச் சேர்ந்த யாரும் பொறுப்பில்லைன்னு கேஸ் முடிந்துவிட்டது” என்று ராம் சொன்னவுடன், கவி எழுந்து டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டாள். கூடவே ராமும் டான்ஸ் ஆடினான். கவிக்கு இவ்வளவு நாள் இருந்த மன அழுத்தம் சற்று குறையட்டும் என்று நினைத்தான் ராம். கவி ரிலாக்ஸ் ஆனதும் கட்டிலில் அமர்ந்தாள்.
"கவி உன் மேல தவறு இல்லைன்னா நீ இந்த அளவுக்கு மகிழ வேண்டிய அவசியம் இல்லையே?" என்று மீண்டும் மீண்டும் அவன் வேதாளமாக மாறி முருங்கை மரத்திலேயே இருந்தான்.
"உனக்கு எதுவுமே தெரியாது அப்படித்தானே, விடு இந்தப் பர்தா போட்ட பெண்ணையாவது தெரியுமா? பார்த்து சொல்லு" என்று தன் செல்லில் இருந்து ஒரு பெண்ணின் படத்தைக் காட்டினான்.
அதைப் பார்த்ததும் "யார் இந்த பெண்? எனக்குத் தெரியாது" என்று ரொம்ப இயல்பாகக் கேட்டாள்.
"அப்படியா..? உனக்குத் தெரியாதா..? இந்தப் படத்தில் இருப்பவர்களையாவது தெரியுமா, சொல்" என்று ஒரு ஃபோட்டோவைக் காட்டினான். அந்தப் படத்தைப் பார்த்ததும் கவியின் முகம் நொறுங்கிய கார் கண்ணாடி சில்லாகி கீழே விழாமல் அதிலேயே இருக்குமே அதுபோல பலவித உணர்வுகளைக் காட்டியது.
அந்த ஃபோட்டோவில் கவியும் பர்தா பெண்ணும் ஒன்றாக இருந்தனர். கவி அந்தப் பெண்ணுடன் பேசுவது போன்ற ஒரு படத்தைத்தான் ராம் காட்டினான். இனி எந்தக் காரணமும் சொல்ல முடியாது.
இதுவரை அவனிடம் கேள்வி கேட்டு, எனக்கென்ன தெரியும் என்று சீறியவள், செத்த பாம்பைப் போல அசைவற்று அமைதியாக இருந்தாள்.
"வாழ்வே மாயம்... இந்த வாழ்வே மாயம், யார் யாருக்கு என்ன வேடமோ.. இங்கே யார் யாருக்கு என்ன மேடையோ..." என்று சிச்சுவேஷன் சாங் பாட ஆரம்பித்தான் ராம்.
இவ்வளவு நாள் அவளுக்கு இருந்த மன அழுத்தமும், தோற்றுவிட்டோம் என்ற இயலாமை எல்லாமும் சேர்ந்து உடைபட்ட ஏரியாக அவள் கண்கள் மாறியது.
ராமின் தோளில் சாய்ந்து கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள். அந்த நேரம் கவியின் அம்மா இவர்களுக்குக் காபி எடுத்துக்கொண்டு இவர்கள் இருக்கும் அறைக்கு வந்தார்.
கவி அழுவதைக் கேட்டதும் முதலில் திகைத்தவர், என்ன நடக்கிறது? அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்? என்று அறிவதற்காக அறை வாசலிலேயே நின்றார் திலகா.
(திக் திக் தொடரும்)
சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #44