Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #19

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

saambavi sankar's maayapura part 19

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

கொல்லைப் புறத்தில் "டமால்" என்ற சத்தமும், ’அம்மா’ என்ற அலறலும் கேட்டதும் அனைவரும் விழுந்தடித்துக் கொண்டு அங்கு ஓடினர். வீட்டின் தோட்டத்தில் இருந்த சிமெண்ட்டாலான தண்ணீர்த் தொட்டிக்குள், தனம் பாட்டி கால்வழுக்கி விழுந்திருந்தாள். அவளது சத்தம் தான் அந்த பிராந்தியத்தையே அதிர வைத்தது.

 

பதற்றத்துடன் ஓடி வந்தவர்கள், பாட்டியைப் பரபரப்பாகத் தூக்கினார்கள். பாட்டி வலி தாங்க முடியாமல் துடிக்க, மெதுவாகத் தூக்கி உட்கார வைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார்கள்.

 

பதற்றத்துடன் பரபரப்பாக இந்த வேலைகளை எல்லாம் குறிப்பாக சங்கவிதான் செய்தாள். தங்கத்திற்கு அம்மா விழுந்ததும் என்ன செய்வது என்று புரியவில்லை.

 

அந்த இடம் லேசான பாசியாக இருப்பதை பார்த்ததும் தங்கம் "வெட்டியாக இருக்கியே.. இந்தப் பாசியை  எல்லாம் கழுவக் கூடாதா?" என்று சங்கவி மீது கோபத்தை வார்த்தைகளாகக் கொட்டினாள்.

 

மனிதர்களின் இயல்பே தன் தவறுகளைப் பிறர் மீது சுமத்துவது தான். முள்ளு குத்தி விட்டது என்று கூறுவோம். நான் முள்ளில் தெரியாத் தனமாகக் கால் வைத்துவிட்டேன் என்று கூற மாட்டோம். முள்ளு என்னவோ  நாம் இருக்கும் இடத்தைத் தேடி வந்து குத்தியது போலச் சொல்வோம். தனம்மா பாட்டி கவனமாக காலை அழுத்தி வைத்து நடந்து இருக்கலாம். ஆனால் விழுந்ததற்கான காரணமே சங்கவி பாசியைச் சரியாகக் கழுவாமல் விட்டது தான் என்று தங்கம் குற்றம் சாட்டினாள்.

"அத்தை, நான் நேத்து கூட செங்கல்லைப் போட்டு நல்லா தேய்த்துத் தரையைக் கழுவினேன்" என்று பயத்துடன் சொன்னாள் சங்கவி. 

கைத் தாங்கலாகப் பிடித்துக்கொண்டு வந்து, கூடத்தில் பாட்டியை உட்கார வைத்தனர். 

"என்  வலது கை ரொம்ப வலிக்குது" என்று வலியில் துடித்தாள் பாட்டி. அவளது வலதுகை எண்ணெயில் போட்ட பூரி மாதிரி  "புசு புசு" என்று  வீங்கிப் போயிருந்தது.

"இந்த மூதேவி கால் வச்ச நேரம், என் பாட்டிக்கு இப்படி கை உடைஞ்சு போச்சு" என்று மணி குத்தலாக சங்கவியைக் குறிவைத்து வார்த்தையை எறிந்தான்.

 

உடனே செல்வம், ”எந்த மூதேவியைச் சொல்ற மணி? இங்க உனக்கும் அசோக்குக்கும் ஒரே நேரத்தில் தான் கல்யாணம் நடந்தது. ரெண்டு மருமகள்களும் ஒரே  நாள்லதான் இங்க காலெடுத்து வச்சிருக்காங்க " என்று சொல்லவும் கப்சிப் ஆகிவிட்டான் மணி.

 

இதைக்கேட்டதும் மணியின் புது மனைவி, அவனை முறைத்தாள்.

"இந்த  அப்பா அடிக்கடி நமக்கு ஆப்பு வைக்கிறாரே" என்று  நினைத்துக் கொண்டு மௌனமாக இருந்தான் மணி. 

 

சங்கவி வேகமாக ஓடிப்போய் பக்கத்து வீட்டிலிருந்து தென்னமரக்குடி எண்ணெய் வாங்கி வந்து, தங்கத்திடம் கொடுத்து, பாட்டிக்கு நன்றாகத் தேய்த்து விடச் சொன்னாள். தேய்க்கத் தேய்க்க வலியும் வீக்கமும் அதிகமாகியது. அதற்குள் அந்தத் தெருவில் இருக்கும் தனம்மாவின் வயதொத்த அக்கப்போர் தோழிகள் அங்கு கூடிவிட்டனர்.

"பானை பானையாய் நெல்லு அவிச்சி, கலங்கலமாய் அரிசி குத்தி,  பத்துப்பட்டி சந்தையில பந்தல் போட்டு வியாபாரம் பண்ணுன தனம்மாக, இப்படி கை ஒடிஞ்சி நிற்பதைப் பார்க்கையில் மனசு பதறுது" என்று அவர்கள் பொய்யாய்ப் பெருமூச்சுவிட்டனர்.  அவர்கள் பேசியதைக் கேட்டதும் 

"விதியை நெனச்சு  வெசனத்தில் போனாளாம்... வானத்தில் போன பிசாசு... மண்டையில ஆடுச்சாம். அந்த மாதிரி என் கை ஒடிஞ்சி போச்சு” என்று அவர்களிடம் புலம்பினாள் தனம்மா .

 

கண்ணுசாமிக்கு  செய்தி போக, அவரும் வந்துவிட்டார். தனம்மா பாட்டிக்கு வலி குறைந்த மாதிரி தெரியவில்லை. வயக்காட்டில்  வேலைக்கு ஆட்கள் வந்துவிட்டார்கள். அதனால் சங்கவியை வயலுக்கு அனுப்பிவிட்டு, வண்டி கட்டிக்கொண்டு போய், பொலம்பாக்கம்  நாட்டு மருத்துவரிடம் பாட்டிக்கு கட்டுப் போட்டுக் கொண்டு வந்தார்கள். சங்கவிக்கு வேலைப்பளு இன்னும் அதிகமானது.

 

கண்ணுசாமி குடும்பம், இந்த சாக்கில்  மீண்டும் இங்கேயே வந்து தங்கி விட்டது.

"அக்கப்போர் பிடிச்ச நாய், தானும் திங்காம வந்ததையும் திங்கவிடாம, வைக்கப்போரில் படுத்து உருண்டு தாங்குற கதையாக’ தனம்மா பாட்டிக்கு பணிவிடை செய்த  சங்கவியை, தான் வேலை செய்யாவிட்டாலும் குறை சொல்லிக்கொண்டே இருந்தது கண்ணுசாமி குடும்பம்.

 

பெரிய மருமகள் மல்லிகா, கண்ணுசாமி மாமா மகள் புவனாவுடன்  நெருங்கிப் பழக ஆரம்பித்தாள். சங்கவி வேண்டாத மருமகள் என்பதால் அந்த வீட்டைப் பொறுத்தவரை தாலி கட்டி அழைத்து வரப்பட்ட கொத்தடிமையாக இருந்தாள்.

 

இரவு நேரத்தில், வயக்காட்டில் தண்ணீர் இறைப்பதற்காக அசோக்கை  வயலுக்கு அனுப்புவதும் வாடிக்கை ஆனது. சங்கவியோ கூடத்தில் மாமியாருடன் படுத்துக்கொள்வாள். தனம்மா, புவனா, புவனா அம்மா, தங்கம் அனைவரும் நடு இரவு வரை தொண தொணவென்று  பேசியபடியே இருப்பார்கள்.

 

சங்கவி உழைத்த களைப்பில், படுத்தவுடன் தூங்கிவிடுவாள்.  அவள்  நன்றாக உறங்கும் போதுதான், தனம்மா பாட்டி சங்கவியை எழுப்பித் தண்ணீர் கேட்பாள். சங்கவியின் கஷ்டங்களை எல்லாம் பார்க்கும் போது அசோக்கிற்கு மனது  வலிக்கும். ஏன்? சங்கவி இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு இந்த வீட்டில் அடிமையாக இருக்கிறாள். வேறு பெண்ணாக இருந்தால் தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று கொடிபிடித்து இருப்பாள். ஆனால் சங்கவி அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே என்று நினைப்பான்.

 

தனம்மா பாட்டிக்கு வலது கைதான் கட்டுப்போட்டு இருக்கிறது. ஆனால் சங்கவி, அவளுக்கு அவளது இரண்டு கைகளாகவும் மாறினாள். எல்லா வேலைகளையும் அவளே  செய்து கொடுத்தாள். தலைக்குத் தேய்த்து குளிப்பாட்டுவதில்  இருந்து, சாப்பாடு ஊட்டி விடுவது வரை அனைத்தும் சங்கவி தான் பார்த்து பார்த்து செய்கிறாள். 

 

விளையாட்டுப் போல ஒரு மாதம் ஓடி விட்டது. ஆரம்பத்தில் வெறுப்பு காட்டிய தனம்மாவிற்கு, மெல்ல மெல்ல சங்கவி மீது வெறுப்பு குறைய ஆரம்பித்தது. குத்தல் பேச்சும் நக்கல் பேச்சும் குறைந்தது. தன் சொந்த பேத்தி புவனாவிடம் ஏதாவது உதவி கேட்டால், சிலுசிலுவென்று சலிப்புடன் பேசுவாள். ஆனால் சங்கவியோ புன்னகை மாறாமல் செய்வாள்.

 

வாழ்க்கையில் காலத்தை விடவும் சிறந்த ஆசான் வேறொன்றும் இல்லை. சங்கவியின் அருமை பெருமைகளை தனம்மா பாட்டி உணர ஆரம்பித்தாள். அவள் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது என்கிற நிலைக்கு பாட்டி வந்திருந்தாள். அதனால் அன்பு காட்டிப் பேசவும் ஆரம்பித்திருந்தாள்.

 

சங்கவிக்கு கஷ்டம் கொடுத்துக் கொடுத்து, இறைவனுக்கு போரடித்து விட்டது போல. அதனால்   பரமபத ஏணி மாதிரி சின்னதாக ஒரு சம்பவத்தை நிகழ்த்துவதற்கு அவன் தயாராகிவிட்டான் போலிருக்கிறது. அதற்கு அடையாளமாக அன்று சங்கவி வீட்டிற்கு அவர்கள் வந்தனர்.

 

(சிறகுகள் படபடக்கும்)