நடிகை ராணி பத்மினியின் கொலை வழக்கு விசாரணை குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்
ராணி பத்மினி மற்றும் அவருடைய தாயைக் கொன்றுவிட்டு அவர்களின் வீட்டில் வேலை செய்த மூவரும் தப்பித்தனர். காவல்துறையினருக்கு இதுகுறித்த தகவல்கள் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. கதவில் ஒரு கைரேகை மட்டும் கிடைத்தது. அக்கம் பக்கத்தினருக்கும் விவரம் எதுவும் தெரியவில்லை. இந்த வழக்கு பெரிய விவாதப் பொருளாக மாறியது. கொலை நடந்த அன்று ராணி பத்மினியின் காரைக் காணவில்லை. கார் நம்பரை வைத்து விசாரித்தபோது டிரைவர் ஜெபராஜ் சிக்கினான். அதன்பிறகு 10 நாட்கள் கழித்து வாட்ச்மேன் சிக்கினான்.
சமையல்காரனை மட்டும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. இரண்டு வருடங்கள் கழித்து அவனும் கைது செய்யப்பட்டான். குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தில் மூன்று பேருக்குமே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் ஜெபராஜூக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
நகைகளை அவர்கள் அடமானம் வைத்தது உட்பட குற்றத்தை அவர்கள் தான் செய்தார்கள் என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தன. அவை அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. உச்சநீதிமன்றம் அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த வழக்கு முடிவதற்கு முன்பே சிறையில் ஜெபராஜ் இறந்து போனான். சமையல்கார கணேசன் சிறையிலிருந்து தப்பினான். இன்று வரை அவன் கிடைக்கவில்லை. வாட்ச்மேன் மட்டும் 15 ஆண்டுகள் சிறையில் கழித்தான்.
அவனுடைய மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் அவன் விடுதலை செய்யப்பட்டான். இந்தக் கொலையால் தமிழ் சினிமா ஒரு நல்ல, அழகான நடிகையை இழந்துவிட்டது. நன்றாக வந்திருக்க வேண்டிய ஒருவர், தன்னுடைய 24 வயதில் கொலை செய்யப்பட்டார். அவரோடு நடித்த பெரிய நடிகர்கள் யாரும் அவருடைய மரணத்திற்கு கூட வரவில்லை. வீட்டின் பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ராணி பத்மினிக்கு சகோதர சகோதரிகள் இருக்கின்றனர் என்கிற பேச்சு கூட அடிபட்டது. ஆனால் அவர்கள் குறித்த எந்த செய்தியும் வெளிவரவில்லை.