தமிழ்நாட்டையே உலுக்கிய ஹாசினி என்கிற 7 வயது சிறுமியைக் கொலை செய்த தஷ்வந்த் என்கிற இளைஞனின் வழக்கில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
பெயில் வாங்கி வீட்டில் இருந்த தஷ்வந்த் ஒருநாள் அவனுடைய அம்மாவிடம் நிறைய பணம் கேட்டான். அவர் கொடுக்க மறுத்தபோது அருகிலிருந்த கடப்பாரையை எடுத்து அவரைத் தாக்கினான். அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவனுடைய அம்மா கதறிய சத்தம் கேட்டு அருகிலிருப்பவர்கள் வந்து விசாரித்தபோது, ஒன்றுமில்லை எனக் கூறி அவர்களை அனுப்பினான். அதன் பிறகு அவனுடைய தாயின் தாலியை அறுத்தான். வீட்டிலிருந்த பணம் முழுவதையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான். விஷயம் அவனுடைய தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
அவனோடு சிறையில் இருந்த ஒருவனிடம் தான் மும்பைக்கு செல்லப்போவதாக அவன் சொன்னது போலீசுக்கு தெரிந்தது. மும்பையில் சூதாட்டம் நடக்கும் ஒரு இடத்தில் அவனைக் கண்டுபிடித்து கைது செய்தனர். அப்போது அவர்களிடமிருந்து அவன் தப்பித்தான். அப்போது மும்பையில் இருந்த உதவி கமிஷனர் ஒருவரிடம் நடந்தவற்றை தமிழ்நாடு போலீசார் கூறினர். மும்பை போலீசும் அவனைத் தேட ஆரம்பித்தது. பாலியல் தொழிலாளியின் வீட்டில் பதுங்கியிருந்த அவனை மீண்டும் கைது செய்தனர். அவனை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இவனை பெயிலில் எடுத்ததுதான் தன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்று அவனுடைய தந்தை கதறினார். தான் செய்த காரியங்களுக்காக அவன் சிறையில் கூட வருந்தவில்லை. குழந்தையைத் தான் கொன்றதைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை என்று அவன் வாதாடினான். அவனுடைய தாயையும் அவன் கொலை செய்யவில்லை என்றான். இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதிகள் அவனுக்கு 46 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, அதன்பிறகு தூக்கு தண்டனை என்று தீர்ப்பளித்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்துக்கு வந்தபோது, சமூகத்தின் எதிர்கால நலன் கருதி இவனுக்கு தூக்கு தண்டனை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இப்போது அவன் சிறையில் இருக்கிறான். அளவற்ற அன்பும் பாசமும் தான் அவனைக் கெடுத்தது. தான் செய்தது தவறு என்பதை அவன் உணரவே இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக இந்த வழக்கு காத்திருக்கிறது.