காவலர்களிடம் இருக்கும் மன அழுத்தம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார்
டிஐஜி விஜயகுமாரின் மரணம் குறித்து சமூகவலைத்தளங்களில் பல்வேறு தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. கற்பனையில் பேசுவது தவறு. காவலர்களுக்கு நிச்சயமாக மன அழுத்தம் இருக்கிறது. காலத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் மனநிலையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை. வெளிமாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளிடம் வேலை செய்வதில் மொழி உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருக்கின்றன. ஏதாவது சொன்னால் நம்மைத் திட்டி விடுவாரோ, மாற்றி விடுவாரோ என்கிற பயம் அவருக்குக் கீழே உள்ளவர்களிடம் இருக்கிறது.
போனை எடுக்கவில்லை என்றால் கூட உயரதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியும். ஒருகாலத்தில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக பேசப்பட்ட தமிழக போலீஸ், இப்போது இந்தியாவிலேயே ஐந்தாவது இடத்துக்கு சென்றுவிட்டது. உயரதிகாரிகளிடம் பயம் இருப்பதால் மற்றவர்களால் உண்மைகளை அவர்களிடம் சொல்ல முடிவதில்லை. காவல்துறையில் சாதி, மத அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கும் போக்கும் நீண்டகாலமாக இருக்கிறது. இங்கு போலீசாருக்கு சங்கம் உருவாகிவிடக் கூடாது என்பதில் சிலர் உறுதியாக இருக்கின்றனர். கேரளாவில் கூட போலீசுக்கு சங்கம் இருக்கிறது.
காவல்துறையினருக்கு பட்ஜெட்டில் நிறைய பணம் ஒதுக்குகின்றனர். ஆனால் அவை சரியாக அவர்களுக்குப் பயன்படுவதில்லை. ஒருகாலத்தில் போலீசாரை நன்றாகவே அரசாங்கம் கவனித்து வந்தது. சமீபகாலமாகத் தான் இதில் மாற்றம் தெரிகிறது. ஒரு போக்குவரத்துக் காவலரோ, சட்டம் ஒழுங்கு காவலரோ மெத்தனமாக செயல்பட்டால் அது நாட்டுக்கு ஆபத்தானது. சமீபத்தில் ஒரு பெண் காவலர் ஒரு ரவுடியை சுட்டுப் பிடித்துள்ளார். இது மிகவும் பாராட்ட வேண்டிய ஒரு விஷயம். காவல்துறையினரின் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்றால் அவர்களுக்கென கமிட்டி அமைத்து அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டும்.
அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை மன்னிக்கலாம். நேர்மையாக வேலை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அனைவரும் பணியில் சேர்கின்றனர். சாதாரண பதவியில் இருக்கும் காவலர்களை அவர்களுடைய உயரதிகாரிகள் வீட்டு வேலை, தோட்ட வேலை எல்லாம் செய்யச் சொல்கிறார்கள். இதுவும் அவர்களுடைய மன அழுத்தத்துக்கு ஒரு காரணம். களத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவர்களுடைய தன்மானத்தை யாரும் சீண்டிப் பார்க்கக்கூடாது. அவர்களையும் மனிதர்களாக மதிக்க வேண்டும்.