எழுநூறு ஆண்டுகாலம் வியட்நாம் தலைநகர் ஹனாய்யில் இயங்கிவந்த ஒரு பல்கலைக்கழகம் பிரெஞ்ச் ஆட்சிக் காலத்தில் நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டது என கடந்த பகுதியில் சொல்லியிருந்தேன் அல்லவா.. இன்னும் அதனைப் பற்றி பார்ப்போம் வாங்க.
5.80 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த பல்கலைக் கழகத்துக்குள் வருவதற்கு மூன்று வழிகள் உள்ளன. அதில் பிரதான வாயில் வழியாக நுழையும்போது வழியில் வெண்கலத்தால் செய்யப்பட்ட பிரமாண்ட மணி ஒன்று உள்ளது. இந்த மணி முக்கிய தகவல்களை மன்னருக்கு அறிவிக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த மணியை துறவிகள் மட்டுமே அடித்து தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
நம்மவூரில் துளசி மாடம் என நாம் அழைப்பது இங்கும் உள்ளது. கற்பூரம், விளக்கு ஏற்றும் வழக்கம் இல்லை என்பதால் இங்கு ஊதுவத்தி ஏற்றி வணங்குகின்றனர். வியட்நாமின் நான்கு புனித சின்னங்கள் ட்ராகன், ஃபீனிக்ஸ், ஆமை, யூனிகார்ன் போன்றவையாகும். இதில், ட்ராகன், ஃபீனிக்ஸ் பறவையும் பலயிடங்களில் செதுக்கியும், வரைந்தும் வைக்கப்பட்டுள்ளன.
வீரத்தை அடையாளப்படுத்தும் டிராகன் அரசரின் சின்னமாகவும், அழகியலையும், போராடும், உயிர் பெறும் தன்மையை கொண்ட ஃபினிக்ஸ் பறவை ராணியின் சின்னமாகவும், ஆமை நீண்ட ஆண்டுக்காலம் உயிர் வாழக்கூடியது மற்றும் நீர்வழி ஞானம் உள்ளது என்பதாலும் மற்றும் யூனிகார்ன் உருவம் இந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு மக்கள் இப்போதும் மரியாதை தருகின்றனர்.
இப்பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் போர்களால் சிதலமடைந்தது போக மீதி 82 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அதனை பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். அதில் அரசர்களின் வீரம், புகழ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பல்கலைக் கழகத்தில் 1442 முதல் 1779 வரை நடைபெற்ற முப்பெரு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 1307 நபர்களின் பெயர் மற்றும் அவர்களின் ஊர் போன்றவை அதில் செதுக்கிவைக்கப்பட்டுள்ளன. லீ வம்சத்தால் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இங்கு கல்வி என்பது மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை கற்பிக்கப்பட்டுள்ளது. வியட்நாமின் கலாச்சாரம், கல்வி, வரலாறு, சமூகம் குறித்து தெரிந்துக்கொள்ள இன்றளவும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு இங்குள்ள குறிப்புகள் ஆவணமாக உள்ளது.
இப்படியான வியட்நாம் கல்வி முறை இன்று எப்படி இருக்கிறது?
வியட்நாம் மக்கள் பண்டைய காலம் முதல் இப்போதுவரை கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நாட்டில் 95 சதவித மக்கள் படித்தவர்கள். கல்வியை பள்ளி முதல் கல்லூரி வரை பல அடுக்குகளாக பிரித்து வைத்துள்ளனர். அதன்படி மழைலையர் கல்வி என்பது 3 வயதில் தொடங்குகிறது. 1 முதல் 5வது வரையிலான தொடக்ககல்வி 11 வயதில் முடிகிறது. நடுநிலைப்பள்ளி என்பது 6 முதல் 9வது வரையிலும், மேல்நிலைப்பள்ளி என்பது 10 முதல் 12 வது வரை வைக்கப்பட்டுள்ளன. அதன்பின் கல்லூரியில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு என வைத்துள்ளனர். மேல்நிலைப்பள்ளி வரை கல்வி அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு தனியார் இணைந்து நடத்தும் பள்ளிகள், அமைப்புகள் நடத்தும் பள்ளிகள் என உள்ளன. கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகள் கூட கட்டிடங்களாக அழகிய வடிவில் இருந்ததை பார்க்க முடிந்தது. தொடக்ககல்வி கட்டாயப்பட்டியலில் உள்ளது.
‘வியட்சாம் தேசிய பல்கலைக்கழகம்’ ஹனாய், ஹோசிமின் என இரண்டு நகரங்களில் உள்ளன. இதன் கீழே கல்லூரிகள் வருகின்றன. சுமார் 50க்கும் அதிகமான பல்கலைகழகங்கள் உள்ளன. மருத்துவம், பொறியியல், கட்டிடவியல், சட்டம், ராணுவம், காவல்துறை, விவசாயம், பொருளாதாரம், கலை, இலக்கியம், கடலியல், துணித்துறை, போக்குவரத்து என தனித்தனியாக பல்கலைக் கழகங்கள் உள்ளன. நாட்டில் 237 பல்கலைக்கழகங்கள் உள்ளனவாம். அதோடு ஆஸ்த்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டு பல்கலைக் கழகங்கள் 6 வியட்நாமில் கல்வி கற்பித்து வருகின்றன.
இன்று பண்டைய கல்வி முறை வரலாற்று சுவடாக உள்ள இந்த வளாகத்தை சுற்றி வந்தபோது செல்போனும் கையுமாக பலரும் சுற்றிக்கொண்டு இருந்தனர். உற்று நோக்கியபோது யூடியூபர்கள் என்பது தெரிந்தது. அழகிய இரண்டு யுவதிகளில் ஒருவர் வீடியோ எடுக்க மற்றொரு யுவதி பல்கலைக் கழகத்தின் வரலாற்றை விவரித்துக்கொண்டு இருந்தார்.
பயணம் தொடரும்...
நிறம் மாறும் செங்கொடி தேசம் – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 5