Skip to main content

லிப்ட் கேட்ட பெண் போலீஸ்; கடத்திச் சென்று திருடன் செய்த சம்பவம் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 33

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

thilagavathi-ips-rtd-thadayam-33

 

காணாமல் போன பெண் போலீஸ் குறித்த வழக்கு பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்.

 

2009 ஆம் ஆண்டு ஈரோடு பெருமாநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாரியம்மாள் என்கிற வயதான பெண் வந்தார். பெண் காவலராகப் பணிபுரிந்து வரும் ஜெயமணி என்கிற தன்னுடைய மகள், முக்கிய பிரமுகரின் பந்தோபஸ்துக்காக சென்றிருந்ததாகவும் அதன் பிறகு அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார். ஒருவாரமாக அவரை எங்கு தேடியும் காணவில்லை. ஜெயமணியின் வயது 39. அவருக்குத் திருமணமாகி 5 வயதில் ஆண் குழந்தை இருந்தது. வாரக்கணக்கில் போலீசாரின் தீவிரமான தேடுதல் வேட்டை நடந்தது. 

 

நீண்ட தேடுதலுக்குப் பிறகு அவருடைய உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய கை கால்களைக் காணவில்லை. உடலில் பல்வேறு வெட்டுக் காயங்கள் இருந்தன. மூளைப் பகுதி கூட கடுமையாக தாக்கப்பட்டிருந்தது. தலையில் தாக்கப்பட்டதால் உயிர் பிரிந்திருக்கக்கூடும் என்று போஸ்ட்மார்ட்டம் அறிக்கை கூறியது. இந்த கொடூரத்தைச் செய்தது யார்? அவருக்கு விரோதி என்று யாரும் கிடையாது. வழக்கு விசாரணை தொடங்கியது. அனைவராலும் இது பரபரப்பாக பேசப்பட்டது. அவிநாசி டிஎஸ்பியிடம் இந்த வழக்கை ஒப்படைத்தார் அப்போது ஐஜியாக இருந்த சைலேந்திரபாபு. விசாரணைக்காக சிறப்பு படைகள் அமைக்கப்பட்டன. 

 

விசாரணை தொடங்கி ஒரு மாதம் கடந்தது. ஒருநாள் இயல்பான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சிக்கிய ஒருவரிடம் சரியான டாக்குமென்ட்கள் இல்லை. அவரை அழைத்து விசாரித்தனர். அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அவருடைய பெயர் ஜெய்சங்கர். எடப்பாடி என்கிற ஊரைச் சேர்ந்தவர் அவர். அவருடைய குடும்பம் ஒரு விவசாய குடும்பம். டிரைவிங் கற்றுக்கொண்ட அவர் அனைத்து வகையான வண்டிகளையும் ஓட்ட ஆரம்பித்தார். இயல்பாகவே வக்கிர குணம் கொண்ட அவர், இளம் வயதிலேயே பஞ்சாயத்து பிரசிடெண்ட் மனைவியின் கையைப் பிடித்து இழுத்தார். 

 

அவருக்கு 25 வயதானபோது 15 வயது பெண் ஒருவரை அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. அவர் லாரி ஓட்டி சம்பாதித்தார். நீண்ட தூரம் லாரி ஓட்டும்போது அவருக்கு போதை, விபச்சாரம் போன்ற தவறான பழக்கங்கள் ஏற்பட்டன. ஒருமுறை அப்படி ஒரு பெண்ணிடம் போய் வந்த பிறகு பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு அவர் அழைத்தபோது அந்தப் பெண் வரவில்லை. இதனால் கோபமடைந்த அவர் அந்தப் பெண்ணைக் கொலை செய்தார். அதன் பிறகு இதுவே அவருடைய வாழ்க்கை முறை வேறு மாதிரி மாறியது.

 

தனியாக இருக்கும் பெண்களை அவர் குறிவைக்க ஆரம்பித்தார். பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்து, கொலை செய்து, அவர்களிடம் இருக்கும் நகைகளைப் பறிப்பதே அவருடைய வேலை. ஒருமுறை செல்போன் மூலம் சிக்கிய அவர், சிறை சென்று ஜாமீன் பெற்றார். அதன் பிறகும் அவருடைய குற்றங்கள் தொடர்ந்தன. இன்னொரு கூட்டாளியையும் தன்னுடன் சேர்த்துக்கொண்ட அவர், பக்கத்து மாநிலங்களிலும் இந்த குற்றங்களைச் செய்ய ஆரம்பித்தார். ஒருமுறை இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரை வழிமறித்து, ஆணைக் கத்தியால் குத்தினார். அந்த வண்டியை எடுத்து வந்து இவர் பயன்படுத்தி வந்தார்.

 

ஒருநாள் பணியை முடித்துவிட்டு வந்த ஜெயமணி, இவரிடம் லிஃப்ட் கேட்டார். அவரும் ஏற்றிக்கொண்டார். அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிடச் சொன்னார். ஆனால் இவர் இறக்கிவிடவில்லை. சுடுகாட்டுப் பகுதிக்கு வண்டி சென்றவுடன் ஜெயமணி வண்டியிலிருந்து குதித்தார். பின்தொடர்ந்த ஜெய்சங்கர் அவரைக் கடுமையாகத் தாக்கினார். பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு அவரைக் கொன்றார். இந்த வழக்கின் விசாரணையின் போது, தான் செய்த பல்வேறு குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார். பல்வேறு ஊர்களில் இவர் மீது குற்ற வழக்குகள் இருந்தன. ஒருமுறை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது அவர் லாவகமாக தப்பித்தார். இதனால் விரக்தியடைந்த காவலர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 

தப்பித்த கொலைக் குற்றவாளி பிடிபட்டாரா? அடுத்த தொடரில் காண்போம்...

 

- தொடரும்