தான் சந்தித்த பல்வேறு வகையான வழக்குகள் குறித்தும், அதை நடத்திய விதம் குறித்தும் நம்மோடு பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து கொள்கிறார்.
சுந்தரமூர்த்தி என்பவருடைய வழக்கு இது. ஒரு நல்ல குணம் உள்ள, நல்ல வேலையில், குடும்பத்தில், இருக்கும் அந்த வாலிபனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கப்படுகிறது. கோவிலில் நடக்கும் முதல் சந்திப்பில் இருவரும் மனம் விட்டு பேசிக் கொள்கிறார்கள். எல்லாம் சரியாய் நடக்கிறது. அடுத்ததாக பெண் பார்க்கும் சம்பிரதாயத்திலும் இருவீட்டாரும் கலந்து பேசி சரியாக நடந்து, நிச்சயமும் உறுதி ஆகிறது. திருமணத்திற்கு முன்பும் சுந்தரமூர்த்தியும் அந்த பெண்ணும் நன்கு பழகுகிறார்கள். அனைவரும் இது காதல் திருமணமா என்று ஆச்சரியப்படுமாறு சந்தோஷமாக இருக்கிறார்கள். திருமண வேலைகள் நடக்கும்போது பெண் வீட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்படும்போது கூட சுந்தரமூர்த்தி பெண்ணின் தாய் மாமாவிடம் இரண்டரை லட்சம் பணம் கொடுத்து உதவுகிறார்.
தேனிலவுக்காக மாலத்தீவுக்கு வீட்டில் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறார்கள். மிகவும் சந்தோஷமாக எல்லாம் போய்க்கொண்டு இருப்பதாக சுந்தரமூர்த்தி நினைக்கிறார். அந்த பெண்ணும் அவருடன் மாலத்தீவில் வெளியில் சுற்றுவது, பிடித்த உணவை சாப்பிட்டு சிரித்து பேசுகிறாள். இரவு ரூமுக்கு திரும்பும்போது, அசதியாக இருப்பதாகக் கூறி, இப்போது வேண்டாமே என்று மறுக்கிறாள். சுந்தரமூர்த்தியும் இது இயல்புதானே, எல்லாமே அடுத்தடுத்து சடங்குகள் என்று அசதியாக இருக்கும் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார். ஆனால் இதுவே அடுத்த நாளும் தொடர சுந்தரமூர்த்தி. தன் அக்காவிடம் போன் செய்து நடந்ததை கூற, அக்காவும் இருக்கட்டும் பொறுமையாக பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு, அந்த பெண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.
இதனால் கோபமடைந்த அந்த பெண், சுந்தரமூர்த்தியிடம் இப்படி நமக்குள் நடக்கும் அந்தரங்க பேச்சை எப்படி நீங்கள் அக்காவிடம் சொல்லலாம் என்று கோபிக்கிறாள். இப்படியே பகலில் நன்றாக மனம் விட்டு சந்தோஷமாக பேசுவது என்று இருந்துவிட்டு இரவு ஆனால் அந்த பெண் நெருங்க மறுக்கிறாள். நான்கு நாட்கள் முடிந்து ஊருக்கு கிளம்பும் நாளன்று அந்த பெண் கடைசியாக சொல்கிறாள். தனக்கு ஏற்கனவே வேலை பார்க்கும் இடத்தில் காதல் இருந்தது என்றும், பெற்றோர்கள் வற்புறுத்தியதாலும், தன் தங்கை வாழ்க்கைக்காகவும் தான் சுந்தரமூர்த்தியை திருமணம் செய்ததாகக் கூறுகிறாள். இதை ஏற்கெனவே முதல் சந்திப்பில் தன் காதலனை விட்டு விட்டுதாகவும் அது முடிந்த கதை என்று உறுதி அளித்து தான் சுந்தரமூர்த்திக்கு சரி சொல்லி இருக்கிறாள். அப்படி இருக்க அவருக்கு ஒரே குழப்பம், முடிந்த கதைதானே பின் என்ன இப்போது என்று கேட்டதற்கு, இல்லை என்னால் உங்களுடன் தாம்பத்யம் வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ முடியாது என்று உறுதியாகக் கூற, உடைந்து போகிறார் சுந்தரமூர்த்தி.
மேலும் அந்தப் பெண், தான் இங்கே இருந்து பெங்களூருக்குச் செல்ல வேண்டும், முக்கியமான புராஜெக்ட் வேலை இருக்கிறது என்று கூற, சுந்தமூர்த்தி மறுத்து அவளுக்குத் தெரியாமல், அந்த பெண்ணின் தாய்மாமா, மற்றும் இரு குடும்பத்திடமும் நடந்ததைக் கூறிவிடுகிறார். அந்த பெண்ணிடமும், தன்னுடன் வீடு வரைக்கும் வந்துவிட்டு அதன் பின் நீ எங்கு வேண்டுமானாலும் போய்க் கொள் என்று கூறி அழைத்து வருகிறார். ஆனால் ஏர்போர்ட் வந்தவுடன் மொத்த குடும்பமும் அந்த பெண்ணை சூழ்ந்து கொள்கிறது. அந்த பெண்ணை அவளது பெற்றோர் அழைத்துச் செல்கின்றனர். பின்னர் சுந்தரமூர்த்தி தன் அம்மா, அப்பாவைக் கூட்டிகொண்டு அழைக்கச் சென்றபோது, அவரோடு வாழமாட்டேன் என்று மறுக்கிறாள். சுந்தரமூர்த்தியும் தன் மனதில் எந்த ஒரு கோவமும் இல்லை, நாங்கள் இன்னும் வாழ்க்கையையும் தொடங்கவில்லை, எனவே எல்லாம் விட்டுவிட்டு தன்னுடன் முழுமனதுடன் வாழ்வதாக இருந்தால் ஏற்றுக் கொள்வதாக கூறி பெற்றோருடன் திரும்ப வந்து விடுகிறார்.
ஆனால் அந்த பெண்ணும் என்ன ஆயினும் சுந்தரமூர்த்தியுடன் செல்ல பிடிவாதமாக மறுக்கிறாள். இதன்பிறகு தான் அவர் என்னை சந்திக்கிறார். தாம்பத்தியம் நடக்காதபோது அந்த திருமணம் செல்லுபடி ஆகாது என்பதால், நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம். அந்த பெண்ணிற்கு நோட்டீஸ் அனுப்பியும் வரவில்லை. திருமண செலவுக்கு பையன் வீட்டில் 17 லட்சம் ரூபாய் கொடுத்த ஆதாரங்களை வைத்து அந்த பணத்தை திருப்பி கேட்டு மனு கொடுத்தோம். அந்த பெண்ணின் தாய் மாமா தான் அந்த பணத்தை கேட்டு வாங்கித் தருகிறேன் என்று கூற, கடைசியாக பரஸ்பரமாக இரு குடும்பங்களும் பேசி இருவரும் ஒத்துப்போய் விவாகரத்து வாங்கி வழக்கை முடித்தோம்.