வங்கியில் நடந்த கொள்ளை ஒன்று குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் “சொல்ல மறந்த கதை” என்னும் தொடரின் வழியாக நமக்கு விவரிக்கிறார்.
கேரள மாநிலத்தில் நடந்த சம்பவம் இது. கேரளாவில் மணப்புரம் பகுதியில் கேரளா கிராமின் வங்கி இருக்கிறது. மக்கள் பலர் அதில் முதலீடு செய்திருந்தனர். அங்கு விரைவில் உணவகமும் திறக்கப்படும் என்று சிலர் அறிவித்தனர். ஒரு நாள் பேங்க் லாக்கரில் இருந்த அனைத்தும் மாயமானது. 80 கிலோ நகை, 50 லட்ச ரூபாய் பணம் காணாமல் போனது. இதுபோன்ற ஒரு வழக்கை கேரளா போலீஸ் சந்தித்தது கிடையாது. காணாமல் போனவற்றைக் கண்டுபிடிக்க படைகள் அமைக்கப்பட்டன.
போலீசை டைவர்ட் செய்ய திருடர்கள் கம்யூனிச வாசகம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றனர். அதனால் முதலில் இது நக்சலைட்டுகள் செய்த குற்றமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் அது நக்சலைட்டுகளின் வேலையாக இருக்காது என்று ஒரு அதிகாரி கூறினார். குற்றவாளிகள் ஹைதராபாத்தில் இருக்கின்றனர் என்று ஒரு ஃபோன் கால் வந்தது. அங்கு சென்று பார்த்தபோது ஒரு அறையில் ஒரு கிலோ நகையும் கொஞ்சம் பணமும் இருந்தது. குற்றவாளியை ஹைதராபாத்தில் தேடினர். செல்போன் அறிமுகமான காலம் அது. எனவே மக்கள் பேசிய கால்களை வைத்து தேடுதல் வேட்டை தொடங்கியது.
வங்கி இருந்த கிராமத்திற்கு 5 கிலோமீட்டர் தொலைவில் தான் அந்த திருட்டு கும்பல் தங்கியிருந்தது என்பது தெரிந்தது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். கொள்ளையடிக்கப்பட்டதில் 98 சதவீத பொருட்கள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன. இந்தியில் வெளியான தூம் படத்தைப் பார்த்து தான் தாங்கள் இந்த திருட்டைச் செய்ததாக விசாரணையில் குற்றவாளிகள் தெரிவித்தனர். வங்கியில் திருட்டு நடந்ததால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கிய நாங்களும் திருடர்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டோம்.
இழப்பு ஏற்படக்கூடாது என்பது தான் எங்களுடைய நோக்கமாக இருக்கும். குற்றவாளிகள் அனைவருமே 35 வயதுக்குள் இருந்தவர்கள் தான். அவர்கள் ஏன் அந்தப் பகுதியை விட்டு செல்லாமல் இருந்தார்கள் என்பதை நான் அடிக்கடி யோசிப்பேன். அதன்பிறகு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. திருட்டு வழக்குகளுக்கு பெரும்பாலும் கடுங்காவல் தண்டனை மட்டுமே வழங்கப்படும். ஒருமுறை குற்ற வழக்குகளில் சிக்கினால் அவர்களை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வரும். அதற்கென்று சிறப்பு பிரிவுகள் இருக்கின்றன. ஒருமுறை ஜோய் ஆலுக்காஸ் கடையில் உள்ள அனைத்து நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால் நகைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஜிபிஎஸ் மூலம் குற்றவாளிகள் உடனடியாகப் பிடிபட்டனர்.