தென்அமெரிக்காவில் பச்சை பசேலென்று அடர்ந்திருக்கும் மலைக் காடுகளுக்குள் பல நாடுகள் மறைந்திருக்கின்றன. வருத்தம் தோய்ந்த அந்த பச்சை வனங்கள் வெளியாட்களுக்கு நிரந்தரமான புதிராகவே இருக்கும். உயரமாக வளர்ந்திருக்கும் மரங்கள் பள்ளத்தாக்குகளை மறைத்திருக்கும். கண்ணுக்குத் தெரியக்கூடிய எல்லா பொருட்களும் அடர்ந்த இருளில் வேறுபாடே இல்லாமல் மறைக்கப்பட்டிருக்கும். அந்த இருளை கிழிக்கிற வகையில் அவ்வப்போது திடீரென்று பிரகாசமான ஔி வெடித்து சிதறும். கண்ணைக் கூசச்செய்யும் ஒரு வெளிச்சம் ஒரு அற்பன் மீதோ, ஒரு நாயகன் மீதோ விழும். அன்பையும், வெறுப்பையும் வெளிக்காட்டும்.
1926 முதல் 1929 வரையிலான ஆண்டுகள், அத்தகைய வெளிச்சக் கீற்றுகள் ஸாண்டினோ மீது விழுந்தன. அவர் தலைமையிலான சின்னஞ்சிறிய ராணுவம், தனது பல்வேறு வேடிக்கையான சாகசத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையே பீதியடையச் செய்தது. சாண்டினோ நிச்சயமாக பிடல் காஸ்ட்ரோவின் நேரடியான முன்னோடி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த நேரத்தில் அவரை மீட்க யாரும் வரவில்லை. புதிய சோசலிச உலகம், தனது சொந்த, சிக்கல் நிறைந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. லத்தீன் அமெரிக்காவின் மக்கள் திரள், அவரது போராட்டத்தின் முக்கியத்துவத்தை தொடக்கத்தில் இருந்தே புரிந்து கொண்டிருந்தாலும், அந்த கதாநாயகனுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்த இயலாத நிலையில் இருந்தனர். மலைப்பகுதியில் எதிரிகளின் குண்டு பாய்ந்து அவர் கொல்லப்பட்டார்.
கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிகரகுவா, நீண்டகாலமாக சமோசா குடும்பத்தால் ஆளப்பட்டது. அவர்கள், அமெரிக்க எஜமானர்களின் நம்பிக்கைக்குரிய வேலையாட்கள். நிகரகுவா மக்கள் படும் துயரங்களையும், அந்த நாட்டில் நடக்கும் கொடுங்கோன்மையையும் இந்த உலகம் அறியும் நாள் வரும். கவிஞர் நிகோ பெரிடோ லோபஸ் பெரெஸின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு, அந்த அற்பன் சமோசாவின் வாழ்வை முடித்தது.
ரத்தவெறியோடு, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிகரகுவாவை ஆட்டிப்படைத்த சமோசாவின் கதை முடிந்தது. லோபஸ் பெரெஸிக்குத் தெரியும் தான் கொல்லப்படுவது உறுதி என்று. தன்னுடைய வெற்றிகரமான நடவடிக்கைக்கு பின்னர் அவர் கொல்லப்பட்டார். அந்தச் சர்வாதிகாரியின் மரணத்திற்குப் பின்னர், மற்றுமொரு சமோசா அதிகாரத்திற்கு வந்தான். இது, அவரது மகன். பின்னர், மீண்டும் ஏற்கனவே இருந்தது போலவே தொடர்ந்தது.
நிகரகுவாவில் இன்று, மிகவும் கடுமையான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். நாட்டின், புரட்சிகரமான அந்தக் கவிஞன், இருளை உடைத்தெறிந்தான். நான் தற்போதுதான், தலைமறைவாக உள்ள நிகரகுவா அரசு எதிர்ப்புக்காரர்களின் கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்தேன்.
அந்த சிறிய நூல் என்னை உலுக்கியது. அந்த நாட்டைச் சூழ்ந்த இருள், ஒரு அதிரடி வெளிச்சத்தால் உடைத்தெறியப்பட்டதை நான் கண்டேன்.
அந்த நூல் 60 சிறிய கவிதைகளைக் கொண்டது. முகம் தெரியாத கவிஞர்களாலும், புகழ்மிக்க எழுத்தாளர்களான எட்வின் காஸ்ட்ரோ, அல்போன்சா ஜோர்டெஸ், ஜோவாகின் பசோஸ், அசாரியஸ் பாலியன்ஸ், மனோலா குவாத்ரா மற்றும் சாலமோன் டி லா சில்வா ஆகியோராலும் எழுதப்பட்டவை அவை.
மெக்ஸிகோவில் புலம் பெயர்ந்தவர்களாக வாழ்ந்த போது, சாலமோன் டி லா சில்வாவுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அறிவிற் சிறந்த அந்த மனிதர், சாகசங்கள், பயணம் மற்றும் பொழுது போக்கு அம்சங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்தார். எங்களது கண்டத்தில் அச்சிடப்பட்ட அற்புதமான நூல்களில் ஒன்று சாலமோன் டி லா சில்வாவினுடையது. முதலாம் உலகப்போருக்குப் பின்னர் அவர் எழுதி வெளியிடப்பட்ட கவிதைத் தொகுப்பான அந்த நூலின் பெயர் “ஒரு அறியப்படாத வீரன்.” அந்த நூல் மிகவும் அற்புதமானது! அதனுள் பொதிந்துள்ள பொருள்களுக்காக! அதன் வரிகள், பழங்காலக் கற்களால் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இதுதான், உலக அமைதி என்ற நோக்கத்திற்காக, உருவாக்கப்பட்ட முதல் பெரிய கவிதாப்பூர்வமான பங்களிப்பு. அறிவுப்பூர்வமான, புத்தம் புதிய, ஆழம் மிகக் கவிதைகள் அதில் இடம்பெற்று இருந்தன.
ஆனால் ஆசிரியர் குறிப்பில் மிகவும் முக்கிய கவிஞராக, அறியப்படாத கவிஞரே இடம்பெற்றிருந்தார். 50 சதவீதத்திற்கும் அதிகமான கவிதைகளை அவர்தான் எழுதியிருந்தார்.
குறிப்பிட்டுச் சொன்னால் ஒரேயொரு கவிஞர் மட்டுமல்ல, பல இளம் கவிஞர்கள் இருக்கிறார்கள். பேர் தெரியாத அந்தக் கவிஞன் உயிரோடு இருக்கிறார். மற்றவர்கள் இறந்திருக்கக் கூடும். நிகரகுவாவில் பல கவிஞர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவர்கள் பழங்கால மற்றும் நிகழ்கால கவிதையின் சாரமாக இருக்கிறார்கள்.
அவர்களது கவிதைகளில் வார்த்தை ஜாலங்கள் இல்லை. வார்த்தை விளையாட்டுக்கள் இல்லை. ரத்தத்தின் வடுக்களும் புனிதமான உணர்வின் தீயுமே அடங்கியிருந்தது. அவர்கள் சித்ரவதைக் கூடத்தில் நிற்பவர்களைப் போல இருந்தார்கள். பெயர் தெரியாத அந்தக் கவிஞர்களில் ஒருவர் எழுதுகிறார்…
சிறை நாய்கள் மீண்டும் ஒரு முறை குரைக்கின்றன
அந்த இரும்புக்கதவு உனக்குப் பின்னால் மூடப்படுகிறது
மீண்டும் ஒரு முறை நீ விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறாய்
சதி செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறாய்.
விரிவான விளக்கங்கள் அளிக்கிறாய்,
அதன் பின்னர் உனது சிறை அறைக்கு அனுப்பப்படுகிறாய்,
உனது மனைவியின் புகைப்படத்தை உற்று நோக்குகிறாய்,
அந்த இரவு துக்கங்களால் நிரப்பப்படுகிறது.
அமைதி நிலவுகிறது,
மயான அமைதி...
மற்றொரு பெயர் குறிப்பிடாத கவிஞரின் வார்த்தைகள் அவர் தனது நாட்டின் மீது வைத்துள்ள நேசத்தை வெளிப்படுத்துகிறது. தனது நாட்டின் மிகப்பெரும் சமவெளிகளை அவர் குறிப்பிடுகிறார். தனது நாட்டின் பணக்காரர்கள் அமெரிக்க பெரும் நிறுவனங்களின் அடிமைகளாக இருப்பதை அவர் கோபத்துடன் வெளிப்படுத்துகிறார்…
எனது நாடே!
பள்ளத்தாக்குகளின் தேசமே!
நான் உனது பைன்மர வெளிகளை
எவ்வளவு நேசிக்கிறேன்...
ஆனால் அந்த நதி
கருப்பு பட்டைகளை சுமந்து செல்கிறது
நிகரகுவா பைன்மர கம்பெனியின்
லாபத்தை அதிகரிப்பதற்காக செல்கிறது
செத்துப் போன மரத்தின் வேர்களும்
கற்களும் தவிர மிக உயர்ந்து நிற்கும்
பைன்மரத்தின் அடியில் வேறு எதுவுமில்லை
கருவூலத்துறையானது எங்களது தங்கத்தை
வெட்டி எடுக்கிறது, தனது நீண்ட கொடும் கரங்களால்...
இது போன்ற கவிதைகளைக் கொடுத்த கவிஞர்களைப் பற்றி நமக்கு சிறிதளவே தெரியும். ஜோவாக்கின் பசோஸ் எழுதிய கவிதைகளின் மூலம் இந்தக் கவிஞர்களின் நம்பிக்கையையும் இலக்கையும் தெரிந்து கொள்ள முடியும். அவரது கவிதை உணர்வுப்பூர்வமானது. மிகவும் விபரங்கள் நிறைந்தது. அதே நேரத்தில் அவரது கவிதைகள் எதிர்த்துப் போராடுகிற ஒரு ஆயுதத்திற்கு இணையான அனைத்து மதிப்பீடுகளையும் பெற்றது. அவரது கவிதைகள் வீரர்களைப் போல அணிவகுக்கிறது…
யாங்கீகளே, வெளியேறுங்கள்!
யாங்கீகளே, உங்கள் நாட்டுக்குச் செல்லுங்கள்!
உங்களை இங்கே நாங்கள் விரும்பவில்லை!
வெளியேறுங்கள்...!
எத்தனை நூற்றாண்டுகள் எங்களை
அடிமைப்படுத்துவீர்கள்!
எங்களது தோட்டங்களெல்லாம்
உங்களது கைகளில்...
எனது இதயத்தில்
இது மிகவும் ஆழமாக பதிந்து விட்டது.
பறவைகள் எனக்காக பாடுகின்றன.
இந்த நாடு எனது நேசத்திற்கு மட்டுமே உரியது
எனது மகிழ்ச்சிக்கு மட்டுமே உரியது இல்லையா?
இன்னும் சில கவிஞர்கள், குறிப்பாக எட்வின் காஸ்ட்ரோ (1960 மே 18-ம்தேதி சிறையில் கொல்லப்பட்டவர்) நம்மிடம் பெரும் போராட்டத்தையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் விட்டுச் சென்றிருக்கிறார். அவற்றை வாசிக்கும் போது, ஒருவர் தனது இதயம் வேகமாக துடிப்பதை உணர முடியும்…
நாளை எல்லாமே மாறியிருக்கும், எனது மகனே!
நமது துன்பங்களும் துயரங்களும் மறைந்து விடும்,
நம்பிக்கை புதிய வாய்ப்புகளை அளிக்கும்,
மக்களின் பலத்தை அதிகரிக்கும்
அவர்களுக்குப் பின்னால் கதவு உறுதியாக மூடப்படும்
ஆம்! நாளை எல்லாமே மாறியிருக்கும் எனது மகனே!
நாம் ஏராளமான துப்பாக்கி குண்டுகளையும் கைத்தடிகளையும் சந்தித்து விட்டோம்.
உங்களது குழந்தைகளை கைகளில் தூக்கிச் செல்லுங்கள்.
ஒவ்வொரு நகரத்தின் தெருக்களின் வாயிலாகவும் நடந்து செல்வீர்கள்
நான் உங்களோடு சேர்ந்து நடப்பேன்!
ஒரு மோசமான பாதையில்
எவரும் உங்களது இளமையை தொலைத்து விட முடியாது!
அவர்கள் எனது வழியை தூக்கி எறிந்தார்கள்.
நீங்கள் நாடு கடத்தப்பட்டு உயிரிழக்கமாட்டீர்கள்.
உங்கள் நாட்டுக்கு வெளியே இது நடக்காது
உங்களது தாத்தாவைப் போலவோ அல்லது அப்பாவைப் போலவோ...
ஆம்! நாளை எல்லாமே மாறியிருக்கும் எனது மகனே!
இன்னொரு கவிஞரான அல்போன்சா கார்ட்டஸின் கவிதையையும் மறக்க முடியாது…
மே மாதத்தில் அவற்றில் மூன்று கவிதைகள் வந்தன
ஆனால், கருப்பு மனிதர்கள் மூச்சுத் திணறி கொல்லப்பட்டார்கள்
ஒவ்வொரு மாதமும் சிலர் இறக்கிறார்கள்.
ஏனென்றால் சிலர், அவனது மரணத்தை விரும்புகிறார்கள்...
அந்த இருவரில் இன்றிரவு சாகப்போவது யார்?
அவனது கண்களில் பைத்தியம் பிடித்து விட்டது,
அல்லது அவனது சக சிறைவாசி கழுத்தில் காயத்துடன் கிடக்கிறான்?
அவர்கள் வலியின் சின்னங்கள், பளுவில்லாத நூல்களால் கட்டப்பட்டிருந்தார்கள்.
ஓ! நிகரகுவா தாய்மார்களே!,
நீங்கள் நசுக்கப்பட்ட காட்டுப்பூக்கள்!
ஓ! எனது நிகரகுவா!
நீ ஒரு ரத்தக் குளத்தில் நீந்துகிற கொடுமையை அனுபவிக்கிறாய்!
அல்போன்சா கார்ட்டஸ் சிறைக்குள் பைத்தியமானார். அவரது கவிதை, பைத்திய உணர்வின் வைலட் நிற வெளிச்சத்தால் நிரப்பப்பட்டிருந்தது. அது அமெரிக்க கொள்கையின் கொடூரத்தை பற்றி குற்றம் சாட்டியது. அவரது கவிதை பாதிக்கப்பட்ட நிகரகுவாவின் வேதனையை வெளிப்படுத்தியது. அங்கே நிகழ்ந்த அளவிட முடியாத மனிதத் துயரத்தையும், தனது சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் தீர்மானிக்கப் போராடிய மனிதனின் தாகத்தை வெளிப்படுத்தியது.
கம்சமோல்ஸ்கயா பிராவ்தா, ஆகஸ்ட் 25, 1963.
முந்தைய பகுதி:
அனைத்து நாடுகளின் தோழன்! - ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 19