மகளின் விருப்பத்திற்கு மாறாக திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய பெற்றோருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
எம்.என்.சி. நிறுவனத்தில் வேலை பார்க்கக்கூடிய 27 வயதுடைய பெண் ஒருவர் எனக்கு கால் செய்து, தன்னுடைய திருமண விவகாரத்தில் பெற்றோர் முரணான கருத்துகளை கூறுவதாக சொன்னார். அந்த பெண்ணை நேரில் அழைத்து விசாரித்தபோது, பெற்றோரைத் தாண்டி வேறு விதமாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்காமல் தான் கல்லூரியில் படித்தபோது ஒரு பையன் தனக்கு காதலை கூறியதாகவும் அதற்கு அப்போது பதில் தெரிவிக்காமல் இருந்துள்ளதாகவும் கூறினாள். சமீபத்தில் தனது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தபோது அந்த பையனை பற்றியும் அவனது வேலையைப் பற்றியும் அந்த பெண் தெரிவித்திருக்கிறாள். மேலும் அந்த பையன் தன்னை நன்றாக புரிந்து நடந்துகொள்வான் அதனால் அந்த பையனின் வீட்டில் திருமண வரன் பேசுங்கள் என்று சொல்லியிருக்கிறாள்.
இது குறித்து அந்த பெண்ணின் அப்பாவிடம் பேசும்போது, தனது மகளுக்கு நல்ல வரன் பார்த்திருப்பதாகவும் குடும்ப தலைவராக அவர் எடுக்கும் முடிவுதான் சரி என்றும் கூறினார். மேலும் இவ்வளவு நாட்கள் தனது மகள் விருப்பத்திற்கேற்ப அனைத்து விஷயங்களை செய்த தனக்கு அவளது திருமண முடிவை எடுக்கத் தெரியாதா? என்று கோபமாக பேசினார். அருகிலிருந்த அந்த பெண்ணின் அம்மாவும் தனது கணவரின் பேச்சுக்கு ஆமா சாமி என்று தலையாட்டிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அந்த பெண் ஒரு வேளை நீங்கள் பார்த்த பையன் எனக்கு பிடிக்காமல் அங்கிருந்து நான் வந்துவிட்டாள் என்ன செய்வீர்கள்? என்று பெற்றோரிடம் கேட்க அதற்கு அவர்கள் அதெல்லாம் போகப் போகப் பிடித்துவிடும் என்று வாக்குவாதம் செய்யத்தொடங்கினர்.
அதன் பிறகு அந்த பெற்றோரிடம், இவ்வளவு நாள் உங்கள் மகளுக்கு நல்லது செய்தீர்கள். ஆனால் திருமணம் என்பது பெரிய முடிவு. நீங்கள் பார்த்த மாப்பிள்ளையைவிட உங்கள் மகளுக்கு தன்னை காதலித்த பையனை பிடித்துள்ளது. இவ்வளவு நாட்கள் அந்த பையனிடமே காதலை சொல்லாமல் உங்களிடம் வந்து மகள் நிற்கிறாள் என்றால் அதற்கு நல்ல காரணம் இருக்கலாம். அதனால் உங்கள் மகள் திருமணம் பற்றிய சிந்தனையை ஓரமாக வைத்துவிட்டு அவள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அவளது எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுங்கள். மற்றவர்களைப் பார்த்து உங்களின் குழந்தையின் வாழ்க்கையில் எந்த தவறான முடிவையும் நீங்கள் எடுக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் உங்கள் மகள்தான் எடுக்க வேண்டும் என்று பெற்றோரிடம் கூறினேன்.
அந்த குடும்பத்தினரிடம் பேசியதில் அந்த பெண்ணிற்கு பெற்றோர்களைவிடவும் நல்ல தெளிவான சிந்தனை இருந்ததால் அந்த பெற்றோரிடம், உங்களின் மகளை காதலித்த பையன் நீங்கள் பார்த்த பையனைவிட நல்ல பையனாக இருக்க வாய்பிருக்கிறது அதனால் அந்த பையனின் வீட்டில் பேசிப்பாருங்கள். வயதில் மூத்தவர்களுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் குழந்தைபோல் அவர்களை பராமரிப்போம். ஆனால் ஏதோ ஒரு இடத்தில் அவர்களை திட்டி தவறாக வார்த்தைகளை பயன்படுத்தினால் இத்தனை நாட்களாக அவர்களை பராமரித்தது அவர்கள் மனதில் தங்காமல் திட்டியது மட்டுமே அந்த பெரியவர்களுக்கு மனதில் தங்கிவிடும். மனிதனுடைய இயல்பே இதுபோலதான். கடந்த காலத்தில் உங்கள் மகளுக்கு நல்லது செய்திருக்கலாம். இதெல்லாம் பெற்றோராக குழந்தைக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைதான். ஆனால் திருமணம் என்று வரும்போது குறைந்தபட்சம் உங்கள் மகள் சொல்வதையாவது நீங்கள் கேட்க வேண்டும் என்று அந்த பெற்றோர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன்.