Skip to main content

டீன் ஏஜ் காதல் தவறா? மாணவனிடம் கடுமை காட்டிய பெற்றோர் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :20

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 parenting-counselor-asha-bhagyaraj-advice-20

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில முறைகளையும், பிள்ளைகள் செய்கிற தவறுகளின் தன்மைகளை உணர்ந்து,  அதை சரி செய்ய எடுக்கும் முயற்சிப் பற்றியும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை நிபுணர் ஆஷா பாக்யராஜ் நம்மிடையே விவரிக்கிறார்.

பத்தாம் வகுப்பு மாணவனின் பெற்றோர் என்னை பார்க்க வந்திருந்தார்கள். கூட படிக்கும் மாணவியை காதலிப்பதாகவும், அந்த பெண்ணுடன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டிருக்கிறான். பெற்றோர் அவனை நன்றாக கடிந்து அடித்திருக்கிறார்கள். என்னிடம் அழைத்து வந்து, என்ன செய்யலாம் என்று கேட்டனர். இது பதின் வயதில் இயல்பாக வரும் ஹார்மோனல் விளைவு தான். இது போல கவுன்சிலிங் வெளிநாட்டில் படிக்கும் நம் மாணவர்களுக்கே கொடுத்திருக்கிறேன். ஆனால் அவர்களது பெற்றோர்கள் நம் ஊர் பெற்றோர் போல அடிப்பது போன்று செய்கைகள் செய்வது இல்லை.

இந்த பெற்றோர் அவனை கடுமையாக அடித்து இருக்கிறார்கள். இந்த சிறுவன் விஷயத்தில், கூட படிக்கும் மாணவர்கள் தான் சும்மா இல்லாது இந்த பையனை  அந்த பொண்ணு உன்னை பார்க்கிறது அந்த மாதிரி பேசி பேசி ஏற்றி விட்டிருக்கிறார்கள். இதுவும் ஒருவகை புல்லியிங் தான். அதுவுமில்லாது, இந்த பையன் பொதுவாக அவ்வளவாக படிக்காத மாணவன் தான். ஆனால் அந்த சிறுமி நன்றாக படித்து வந்திருக்கிறாள். இந்த சிறுமி கூட சேர்ந்து இப்போது அவன் வகுப்பில் ஐந்து ரேங்க்குள் வருமளவிற்கு வந்திருக்கிறான். டீன்ஏஜ் காதல் என்பது சரி இல்லை தான். ஆனால் அதற்காக அடிப்பது என்பது தவறு. குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க வேண்டும். நாம் காட்டும் ரியாக்சஷன் சரியானதாக இருக்கவேண்டும்.

அப்படி கண்டுபிடித்தாலும், இரண்டு நாட்கள் பெற்றோர்கள் நேரம் எடுத்து, குழந்தையிடம் ஏதோ  நடந்துவிட்டது, சரி ஓகே, எனக்கு கொஞ்சம் நேரம் குடு நாம் பேசுவோம், என்று சொல்லிவிட்டு, யோசித்து பொறுமையாக அம்மா அப்பா இருவரும் ஒருமித்த கருத்தில் பேசவேண்டும். எடுத்தவுடன் அடிப்பது, தகாத வார்த்தைகள் கூறுவது முற்றிலும் தவறு. இந்த பையனிடம் இருக்கும் புகார், தன் பெற்றோர் காட்டிய ரியாக்சன் தான். இந்த மதிப்பெண் நான் யாரால் எடுத்தேன், அந்த பெண்ணால் தானே எடுத்தேன். அவர்களா என்னை எடுக்க வைத்தார்கள் என்று என்னிடமே கேட்கிறான். நான் அந்த பையனிடம் மெல்ல எடுத்து சொல்ல ஆரம்பித்தேன்.

உனக்கு இந்த மாதிரி ஹார்மோன்ஸ் வேலை செய்யும், சிறுமிகளுக்கு இந்த மாதிரி ஹார்மோன்ஸ் வேலை செய்யும். இதுபோன்ற வயதில் அதனால் எதிர் பாலுடன் கவரப்படுவீர்கள். ஆனால் நீ இப்பவே கமிட் ஆகிறாய் என்றால், உன்னுடைய எதிர்கால கனவு என்ன என்று கேட்டேன். அவன் தனக்கு உலகம் முழுக்க சுற்ற வேண்டும் என்றான். அதற்கு உனக்கு எவ்வளவு காசு வேண்டும், எவ்வளவு செலவு செய்ய வேண்டி இருக்கும் என்று வழக்கம் போல எழுதச் சொன்னேன். இதையெல்லாம் நீ அந்த பெண்ணுடன் தினசரி பேசிக்கொண்டிருந்தால் எப்படி உன்னால் அதை அடைய முடியும் என்றேன். ஆனால் ஆவலுடன் பேசி கொண்டிருப்பதால் தானே நான் இவ்வளவு மதிப்பெண் எடுக்க முடிந்தது என்றான். 

ஓகே நீ இன்று படிக்கிறாய். ஆனால் உனக்கு முன்பு வகுப்பில் மூன்றாவது ரேங்க் எடுத்து கொண்டிருந்த அந்த பெண்ணை பார். அவள் இப்போது பின்தங்கி பத்தாவது ரேங்க் போய்விட்டாள் என்றேன். அந்த பெண் வீட்டிற்கு இதெல்லாம் தெரியாது வேறு. நீங்கள் ரெண்டு பேருமே நன்றாக படிக்கவேண்டும். அதனால்,  நல்ல நண்பர்களாக இருங்கள். உனக்கு எப்போதெல்லாம் மனசுக்கு கஷ்டமாக இருந்தாலோ, ஏதாவது ஷேர் செய்யவேண்டும் என்றால் இருவரும் பேசி நல்ல நண்பர்களாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  போகப் போக பார்த்து கொள்ளலாம் என்றேன்.

ஆண்ட்டி நீங்கள் எவ்வளவு பொறுமையாக சொல்கிறீர்கள், நான் கேட்டுக்கொண்டு தானே இருக்கிறேன். ஆனால் அவர்கள் அடிக்கிறார்கள். பதிலுக்கு நான் அடித்தால் என்ன ஆகும் என்றான் அந்த சிறுவன். எனவே பெற்றோர்கள் காட்டும் முதல் ரியாக்சஷன் தான் எல்லாமே. இதே போல பதினெட்டு வயது பெண்ணுடைய தாய் என்னை பார்க்க வந்தார்கள். ஆனால் விஷயம் தெரிந்தவுடன் பதினைந்து நாட்கள் ரியாக்சன் கொடுக்காமல், பொறுமையாக இருந்து அப்புறம் என்னிடம் நான் செய்தது சரியா என்று தான் கேட்க வந்தார்கள். அதுதான் முறையாகும். நான் டீன் ஏஜ் காதலை என்கரேஜ் செய்யவில்லை. ஆனால் அந்த குழந்தை மனம் பாதிக்காதவாறு நாம் கையாள வேண்டும். நான் அந்த பெற்றோரிடம், அந்த மாணவியின் பெற்றோரிடமும் சொல்ல சொல்லி விட்டேன். அவர்களும் தெரிந்து அந்த பெண்ணின் மதிப்பெண் குறைவது போன்றவற்றில் கவனமாக இருக்கவேண்டும். 

இரண்டு செஷன்கள் மட்டுமே நான் அந்த பையனுக்கு கொடுத்தேன். அவனது பெற்றோரே நம்பிக்கை வராமல், தப்பு செய்துவிடுவானோ என்றே இருந்தார்கள். அந்த பையன் தற்போது எந்த கால்ஸ் பேசுவது இல்லை. தெளிவாக தனக்கு அளவுமுறை தெரிவதாக சொன்னான். மேலும் நாங்கள் ஒருவேளை நல்ல நட்பையே அப்படி புரிந்து கொண்டு விட்டோம் போலிருக்கிறது ஆண்ட்டி என்றான். நாம் அந்த வயதில் என்ன செய்தோம் இந்த மாதிரி சூழ்நிலையில் என்று யோசித்தாலே நம்மால் இது போன்ற நேரங்களில் குழந்தைகளை சரியாய் அணுகி அவர்களை நல்வழிப்படுத்தமுடியும்.