தான் சந்தித்த வித்தியாசமான குடும்ப நல சிக்கல்கள் குறித்தும் அதைக் கையாண்ட விதம் குறித்தும் ‘வழக்கு எண்’ தொடர் வழியாக நமக்கு சொல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு வழக்கு குறித்த விவரங்களை வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
பாஸ்கர் என்பவருடைய வழக்கு இது. நல்ல வேலை, சமூகத்தில் பொறுப்பான இளைஞராகவும், குடும்பத்திற்கு சிறந்த பிள்ளையாகவும் இருந்து வருபவர். நிட்சய திருமணம்தான் நடக்கிறது. கல்யாணமானதிலிருந்தே கணவன் மீதான அதிகப்படியான அன்பினை எல்லோரின் முன்னிலும் தெரிய வைக்கிற பெண்ணாக இருக்கிறாள். அதாவது எல்லோரின் முன்னிலும் கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது அவளது வழக்கமாக இருந்திருக்கிறது.
ஆனால் பாஸ்கருக்கோ படுக்கையறை தவிர மற்ற இடங்களிலோ, பெற்றோரின் முன்னிலையிலோ கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பதெல்லாம் அவருக்கு பிடிக்கவில்லை. இதை அவளிடம் எடுத்துச் சொன்னால் “என்னை பிடிக்கவில்லையா? என் மீது காதல் இல்லையா?” என்றெல்லாம் அழுது அடம்பிடிப்பவளாகவும், அறைக்கதவை சாத்திக்கொண்டு நீண்ட நேரமாகியும் கதவை திறக்காமலும் இருப்பவளாக இருந்திருக்கிறாள்.
இந்த நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக பாஸ்கரின் அம்மா பெண்ணின் அக்காவிடம், உங்க வீட்டு பிள்ளை இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று ஒரு புகாரை சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த அக்காவும் தங்கையை அழைத்து கண்டித்திருக்கிறாள். இதற்கு பழிவாங்கும் விதமாக மாமியாரை பூரிக் கட்டையைக் கொண்டு அந்த பெண் ஒரு நாள் பலமாகத் தாக்கியிருக்கிறாள்.
அலுவலகம் சென்ற பாஸ்கர் பதறிப்போய் வீட்டிற்கு வந்து அம்மாவை மருத்துவமனை அழைத்து சென்றிருக்கிறார். மனைவியும் கொஞ்ச நாளைக்கு அவளது அம்மா வீட்டிலேயே இருக்கட்டும் என்று விட்டு வந்திருக்கிறார். அந்த பெண்ணின் தம்பி ஒருவர் அக்காவிற்காக பரிந்து பேசி பாஸ்கர் வீட்டில் விட்டுச் சென்றிருக்கிறார்.
அம்மாவை அடித்ததால் சில நாட்களாக வீட்டில் இருந்த மனைவியிடம் பேசாமல் இருந்திருக்கிறார் பாஸ்கர். ஆனால் அவரை கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு அழைத்திருக்கிறாள். ஆனால் அதற்கு விருப்பம் தெரிவிக்காத பாஸ்கரை மிரட்டும் விதமாக மொட்டை மாடிக்குச் சென்று கீழே குதித்து விடுவதாக கொலை மிரட்டலும் விட்டிருக்கிறாள்.
அக்காவை அழைத்து வந்த தம்பியிடம் சொல்லி சிறிது நாளைக்கு பிரிந்து இருக்கலாம் என்று முடிவெடுத்த பாஸ்கருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பெண், தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்திருக்கிறாள். தன்னுடைய அம்மாவை பூரிக்கட்டையால் தாக்கினாள் என்று பாஸ்கர் தன் பங்கிற்கு சொல்ல, அவளோ பாஸ்கரின் அம்மா தானே தாக்கிக்கொண்டு பழியை தன் மீது போடுவதாக காவல்நிலையத்தில் சொல்லி இருக்கிறாள்.
இனிமேல் இவளோடு வாழ முடியாது என்று முடிவெடுத்த பாஸ்கர். டைவர்ஸ்க்கு அப்ளை செய்தார். ஆனால் இவள் செய்த எந்த குற்றத்தையும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை, நல்வாய்ப்பாக இவள் தற்கொலை முயற்சி செய்ததை பாஸ்கரின் அம்மா வீடியோ எடுத்து வைத்திருந்திருக்கிறார்கள். அதை ஆதாரமாகக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதும் ஒரு வகை குற்றச்செயல் தான் என்று பாஸ்கருக்கு அந்த பெண்ணிடமிருந்து டைவர்ஸ் வாங்கி கொடுக்கப்பட்டது.
திருமண வாழ்க்கை பல சமயம் ஆண்களால் பெண்களுக்கு கொடுமை நிகழ்த்தப்பட்டு நரக வாழ்க்கை ஆகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறோம், பார்த்திருப்போம். ஆனால் இப்பொழுதெல்லாம் பெண்களால்தான் சில ஆண்களின் வாழ்க்கை நரகமாக்கப்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.