Skip to main content

88 வயதில் மகனைத் தேடிய தாய்; 15 வருடங்களுக்குப் பிறகு நடந்த ஆச்சரியம் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 24

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

detective-malathis-investigation-24

 

தன் மகனை வயதான காலத்தில் தேடிய தாய் குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.

 

88 வயதுடைய பாட்டி ஒருவரின் மகனை நாங்கள் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று அந்தப் பாட்டியின் உறவினரான பெண் (பையனுடைய சித்தி) எங்களிடம் வந்தார். அந்த பாட்டியின் மகனுக்கு வயது 50. கடைசியாக அவருடைய மகனை அவர் பார்த்தது 15 வருடங்களுக்கு முன்பு. நன்றாகப் படிக்கும் அந்தப் பையன், அவனுடைய தந்தையின் அதீதமான கண்டிப்பால் மன உளைச்சலுக்கு ஆளானான். அவனுடைய தந்தையின் இறப்புக்குப் பிறகும் அவனால் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. தன்னுடைய தாயோடு தான் அவன் வாழ்ந்து வந்திருக்கிறான்.

 

மத்திய அரசாங்க ஊழியரான அவனுடைய தாய், தன்னுடைய சொந்த வீட்டை மகன் பெயரில் எழுதி வைத்தார். அதன்பிறகு ஆதரவற்றோர் இல்லத்திற்கு அவர் சென்றார். அவ்வப்போது அனைவரும் சென்று அவரைப் பார்த்து வருவார்கள். மகனும் ஆரம்ப காலங்களில் அவ்வப்போது சென்று தன்னுடைய தாயைப் பார்த்து வந்தார். பிறகு எப்போதாவது வர ஆரம்பித்தார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் தாயைப் பார்க்க வரவே இல்லை. மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நிச்சயமாக தன்னுடைய மகனைக் கண்டுபிடித்து தர வேண்டும் என்று அவர் கேட்டார். 

 

நம்முடைய தேடலை நாம் தொடங்கினோம். மகன் குறித்த பல்வேறு தகவல்களை தாயிடமிருந்து நாம் பெற்றோம். மகனுக்காக அவர் எழுதி வைத்த வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. வாடகைப் பணம் எங்கே செல்கிறது என்பதை ஆராய்ந்தோம். அங்கு வாடகைக்கு இருந்தவர்களிடம் பேசினோம். அவருடைய வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை தாங்கள் செலுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களும் அவரை நீண்ட காலமாக நேரில் சந்திக்கவில்லை என்றனர். அவர் தொடர்பில் வந்தால் எங்களிடம் தெரிவிக்குமாறு கூறினோம். 

 

தான் இறப்பதற்கு முன்னர் ஒருமுறை தன்னுடைய மகனைப் பார்க்க வேண்டும் என்று அந்தத் தாய் விரும்பினார். சில நாட்கள் கழித்து அவருடைய நம்பர், வாடகைக்கு இருந்தவர்கள் மூலம் எங்களுக்கு கிடைத்தது. முதலில் அவர் எங்களுடைய அழைப்பை ஏற்கவில்லை. ஒருநாள் போனை எடுத்தார். அனைத்து விஷயங்களையும் அவரிடம் நாங்கள் கூறினோம். ஒருமுறை வந்து தாயைப் பார்த்துவிட்டுச் செல்லுமாறு கூறினோம். சில நாட்கள் கழித்து வருவதாகச் சொன்ன அவர், அதேபோல் வந்தார். தாய்க்கு மிகவும் மகிழ்ச்சி. இதில் நிறைய உதவிகள் செய்த அந்தப் பையனுடைய சித்திக்கும் இந்த இடத்தில் நன்றி சொல்ல வேண்டும்.