தன்னுடைய அனுபவத்தில் தான் சந்தித்த வித்தியாசமான ஒரு வழக்கு குறித்து துப்பறிவாளர் யாஸ்மின் நம்மிடம் விவரிக்கிறார்.
ஒரு பெண் நம்மிடம் வந்து வழக்கு கொடுத்தார். அவரை ஒரு பணக்காரக் குடும்பத்தில் உள்ள பையனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். அவருடைய வேலை உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் மாப்பிள்ளை வீட்டார் பொய் சொன்னது தெரிந்ததால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற அந்தப் பெண், தன் மகனோடு தனியாக வாழ்ந்து வந்தார். ஆனால் எங்கு சென்றாலும் தன்னை யாரோ பின்தொடர்வது போல் தோன்றுவதாக நம்மிடம் கூறினார். அது உண்மையாகவே நடக்கிறது என்பதையும் அறிந்தார்.
குறிப்பிட்ட ஒரு நபர் அந்தப் பெண்ணின் மகனை அடிக்கடி பின்தொடர்ந்து வந்தார். இதை அந்தப் பெண்ணிடம் தெரிவித்தோம். அது தன்னுடைய கணவர் தான் என்று அவர் கூறினார். ஆனால் அவர் எதற்காக தன்னுடைய மகனைப் பின்தொடர்கிறார் என்பது தெரியவில்லை. விவாகரத்து பெற்ற நேரத்தில் இந்தப் பெண் கர்ப்பமாக இருந்தார். ஆனால் இது கணவருக்குத் தெரியாது. இருந்தாலும் இது தன்னுடைய குழந்தை தான் என்பது அவருக்குத் தெரிந்தது. குழந்தையை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக்கூடாது என்பதற்காக மகனை அடிக்கடி பின்தொடர ஆரம்பித்தார்.
தன்னுடைய குழந்தையை அவரிடம் கொடுக்க முடியாது என்று பிடிவாதமாக இருந்தார் தாய். இப்போது அவர்களுடைய நிலைமை என்ன என்பது தெரியவில்லை. வழக்கு தொடுத்தது அந்தப் பெண் தான் என்பதால், அவருடைய கணவரிடம் நாங்கள் எந்த விசாரணையும் நடத்தவில்லை. தன்னுடைய குழந்தை தான் தனக்கு மிகவும் முக்கியம் என்று அந்தப் பெண் இறுதி வரை உறுதியாக இருந்தார்.