தன்னுடைய துப்பறியும் அனுபவங்கள் பலவற்றையும் துப்பறிவாளர் யாஸ்மின் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
தொழிலதிபர் ஒருவரும் அவருடைய மனைவியும் நம்மிடம் கேஸ் கொடுக்க வந்தனர். அவர்களுடைய பெண் நன்கு படிக்கக் கூடியவள். படிப்பதற்காக வெளியூர் சென்ற பெண் மீண்டும் ஊருக்கு வர மறுத்தாள். தான் ஒரு பையனைக் காதலிப்பதாகவும் அவன் ஒரு மருத்துவர் என்றும் பெற்றோரிடம் கூறினாள். அவள் பிடிவாதமாக இருந்ததால் அந்தப் பையன் குறித்து விசாரித்து சொல்லுமாறு அவளுடைய பெற்றோர் என்னிடம் வந்தனர். கிளினிக் சென்று விட்டு அதன் பிறகு வீட்டுக்குச் செல்லும் சாதாரண பையனாகத் தான் அவன் தெரிந்தான்.
இன்னும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினோம். எங்கள் டீமில் இருந்து ஒரு பெண்ணை அவனிடம் வேலைக்குச் சேர்த்து விட்டோம். அவன் ரெகுலராக செல்லும் வீட்டை கவனித்தபோது அங்கு வயதானவர்கள் யாரும் இருப்பது போல் தெரியவில்லை. அப்போது தான் தெரிந்தது அங்கு இருந்தது அவனுடைய மனைவி மற்றும் குழந்தை என்று. எங்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அதை அந்தப் பெற்றோரிடம் தெரிவித்தோம். ஒருநாள் நாங்கள் அனுப்பிய பெண்ணிடமே அவன் தவறாக நடக்க முயன்றான். அவன் கேரக்டரும் சரியில்லை என்பது தெரிந்தது.
நடந்தவற்றை அந்தப் பெண்ணிடம் சொன்னபோது அவள் நம்பவில்லை. தன்னுடைய காதலால் அவனை மாற்றி விட முடியும் என்று நம்பினாள். நாங்கள் கிளினிக்கில் வேலைக்கு அனுப்பிய பெண்ணை இந்தப் பெண்ணோடு பேச வைக்க முடிவு செய்தோம். தன்னிடம் அவன் அத்துமீறியது பற்றி அவளிடம் இந்தப் பெண் கூறினார். நடந்த அனைத்தும் தனக்குத் தெரியும் என்றும், உன்னை அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றும் இந்தப் பெண் பதில் கூறினாள். நாங்கள் அனுப்பிய பெண்ணுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
தாங்கள் இருவருமே தங்களுக்குப் பிடித்தவரோடு இருப்பதற்கு எப்போதும் பரஸ்பரம் சம்மதிப்போம் என்றும், இதைத் தாங்கள் தவறாக நினைத்ததில்லை என்றும் கூறினாள். அவனுக்குத் திருமணமானது கூட தனக்குத் தெரியும் என்று கூறினாள். இந்தப் பெண்ணுக்கு தலையே சுற்றியது. வெளிநாட்டு கலாச்சாரத்தில் கூட இப்படி இருக்குமா என்று தெரியவில்லை. இந்தியாவுக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. இருப்பது ஒரு வாழ்க்கை, அதை நமக்குப் பிடித்தது போல் வாழ வேண்டும் என்று அந்தப் பெண் முடிவு செய்தாள். யார் சொன்னாலும் அவள் கேட்கவில்லை. அதன் பிறகு அவள் தனியாக ஹாஸ்டலில் வாழத் தொடங்கினாள். அவனுடைய தொடர்பும் தொடர்ந்தது. நாங்களும் மேற்கொண்டு இந்த வழக்கை தொடராமல் விட்டுவிட்டோம்.