மனநல ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், மருமகளை ஏமாற்றிய குடும்பத்திற்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
ஒரு திருமணமான நபர் என்னிடம் வந்து, மாதம் ரூ.50,000 சம்பாதிக்கின்றேன் ஆனால் தான் சொன்ன பொய்யினால் மனைவி தற்போது பிரிந்து வாழ்வதாக வருத்தத்துடன் கூறினார். என்னவென்று விசாரித்தபோது திருமணத்தின்போது தனக்கு இருந்த ரூ.17 லட்சம் கடனை மறைத்திருந்தாக கூறினார். அதனால் தன் மனைவி போடா இனிமேல் உன்னுடன் வாழ முடியாது என்று சொல்லிட்டாள் என்றார். கடனை மறைத்தது தனது பெற்றோருக்கும் தெரியும் அதை மறைத்து தான் தனக்கு திருமணம் செய்து வைத்தார்கள் என்றார். அவர் பேசியபோது மனைவியுடன் வாழ்ந்த நாட்களை மறக்க முடியாமல் வேதனையுடன் நடந்ததைச் சொன்னார்.
அதன் பிறகு நான், கடனை அடைப்பதற்கு எதாவது வழி இருக்கிறாதா என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் தனது பெற்றோர் ஒரு நிலத்தை தருவதாக கூறினர். ஆனால் இப்போது தர மறுக்கின்றனர் என்றார். பின்பு அந்த நபரின் பெற்றோரை அழைத்து பேசியபோது, அந்த நபரின் அப்பா இதற்கு முன்பு தனது மகனுக்கு செய்த எல்லாவற்றையும் கூறி தனக்கு வேண்டும் என்று மறுத்தார். அதேபோல் அந்த நபரின் அம்மா, முன்பு நிலத்தை தருவதாக சொன்னபோது ரூ.2 லட்சத்திற்கு மேலாக அந்த நிலத்தின் மதிப்பு இருந்தது. இப்போது அந்நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதனால் முன்பு இருந்த நிலத்தின் மதிப்பளவில் உள்ள தொகையை கொடுத்து விடுகிறோம் என்று கூறினார். மேலும் அந்த பெற்றோர், அந்த பெண் தான் வேண்டும் என்று இருக்கும் தனது மகனை வேறொரு திருமணம் செய்துகொள்ளச் சொல்லுங்கள் என்றனர்.
அந்த குடும்பத்தினர் பேசியதை கேட்ட பிறகு, கலி காலம் எங்கு தொடங்கியது என்ற கதையைச் சொன்னேன் அந்த கதையில், அண்ணன் தனக்கு கிடைத்த செல்வத்தில் பாதியை தம்பிக்கு தருவதாக கூறினான். ஆனால் தம்பி, செல்வத்தை வேண்டாம் என்று மறுத்து அண்ணனே வைத்துக்கொள்ளட்டும் என்று சொல்லியிருக்கின்றான். பின்பு அடுத்த நாள் காலையில் வந்த தம்பி அண்ணா எனக்கு தருவதாக சொன்ன செல்வத்தை கொடுங்கள் என்று கூற நான் எப்போது அப்படி சொன்னேன் என்று அண்ணன் செல்வத்தை தர மறுத்திருக்கிறான். பின்பு இருவரும் சண்டையிட்டு கொண்டனர் அங்குதான் கலி காலம் தொடங்கியது என்று கூறி அந்த பெற்றோரை போகச் சொன்னேன். ஆனால் அந்த குடும்பம், என்னிடம் கொடுத்த பணத்திற்கு நான் எதாவது தீர்வு சொல்லுவேன் என்று நினைத்து போகாமல் அடம்பிடித்தனர். வலுக்கட்டாயமாக அவர்களை அனுப்பி வைத்தேன்.
அடுத்த நாள் அந்த குடும்பம் என்னை சந்திக்க வந்தது. அப்போது அந்த நபரின் தந்தை, மகன் மீது கோபம் இருக்கிறது. அவனுடைய கடனை அவன் தான் அடைக்க வேண்டும். இருந்தாலும் ஒரு தந்தையாக அவனுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும் என்றார். அதே போல் அந்த நபரின் அம்மாவும், நிலத்தை தருவதாக ஒப்புக்கொண்டார். ஒருபடி மேலாக அவர்களின் மகன் மற்றொரு திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறினார். நான் சொன்ன கதை அந்த குடும்பத்தை தூங்க விடாமல் யோசிக்க வைத்துள்ளது. அந்த நபரின் தந்தை என்னிடம், ஒரு நாள் இரவு தூங்கி எழுந்ததும் ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது என்றார். அந்தளவிற்கு கலிகாலம் என்ற கதையில் சிறப்பாக வாழ்ந்த அண்ணன், தம்பி இருவரும் தூங்கி எழுந்து வருவதற்குள் வேறொரு முகத்தை காட்டியிருப்பார்கள். இந்த கதையை வைத்து நல்ல மனிதனாக ஒருவர் இருந்தால் கலிகாலத்திற்கு முன்பு இருந்த மனிதத்தை பிடித்துக்கொள்வார். செல்வம்தான் முக்கியமென்றால் அந்த குடும்பம் அடுத்தநாள் என்னை சந்திக்க வந்திருக்க மாட்டார்கள். அவர்கள் வந்ததால் அந்த நபரின் பெற்றோரிடம் நீங்கள் செய்ததும் தவறுதான். ஏமாற்றி திருமணம் செய்ததாக உங்கள் மீது சம்பந்தம் செய்தவர்கள் போலீசாரிடம் புகார் தெரிவிப்பதற்குள் மருகளிடம் சென்று மன்னிப்பு கேளுங்கள் என்றேன். மன்னிப்பு கேட்ட பிறகு அவர்களிடம் எந்த பேச்சு வார்த்தையும் இருக்க கூடாது என்றேன்.
அதன் பிறகு அந்த பெற்றோர் தங்களின் நிலத்தை மகனுக்கு கொடுத்தனர். அந்த நிலம் எதிர்பார்த்த அளவைவிட நல்ல விலைக்கு போனது. இப்போது அந்த பெற்றோரின் மகன் அடுத்ததாக அவர் இருக்கும் வேலையில் என்ன படித்தால் அதிக சம்பளம் பெறலாம் என்று நினைத்து அதற்காக கோச்சிங் பெற்று வருகிறார். அந்த பெற்றோரும் தங்கள் மருமகளிடம் சென்று மன்னிப்பு கோரி மகன் தற்போது கடனை அடைத்து வேலை செய்து வருவதாக கூறியிருக்கின்றனர். அதே போல் அவர்களின் மகனும் தனது மனைவியிடம் சென்று கவுன்சிலிங் வந்ததை கூறி இப்போது கடனை அடைத்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருக்கிறார். பின்பு அந்த பெண் என்னிடம் வந்து, எப்படி சார் அநியாயத்துக்கு தனது கணவரின் குடும்பம் நல்லவர்களாக மாறினார்கள்! திரும்பி கணவருடன் நம்பி வாழலாமா? என்று சந்தேகத்துடன் கேட்டார். அதற்கு நான், உங்கள் கணவர் ஏன் தன் தவறை திருத்திக்கொண்டார் தெரியுமா? கண்டிப்பாக உங்களுடன் வாழ்வதற்கு இல்லை. அவரின் தவறை அவர் திருத்திக்கொண்டு வாழ்கிறார். அதற்காக மன்னித்து அவரை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை தன் தவறை திருத்திக்கொண்டு வாழுபவருக்கு மரியாதை கொடுப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது என்று சொல்லி அனுப்பி வைத்தேன். சில நாட்கள் கழித்து அந்த பெண் தனது மாமனாருக்கு கால் செய்து, தன் கணவருடன் ஒன்றாக வாழ ஆசைப்படுகிறேன். வீட்டிற்கு வந்து தன்னை அழைத்து செல்லுமாறு கேட்டிருக்கிறார். இப்போது கணவன் மனைவியாக சந்தோஷமாக இருவரும் வாழ்கின்றனர்.