கவுன்சிலிங் கொடுப்பது என்பது மனச்சிக்கலோடு நம்மிடம் வருபவர்களுக்கு நாம் மனநலத்திற்கான ஆலோசனை வழங்குவது தான். சில சமயம் நாமும் பலரிடமிருந்து ஆலோசனையை அனுபவங்களாகப் பெற்றுக் கொள்வோம். அப்படி பெற்றுக்கொண்ட ஒரு கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
நண்பரின் அப்பாவுக்கு விபத்து ஏற்பட்டு விட்டதாக தகவல் கிடைக்கிறது. விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்த்தால் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று விட்டார்கள் என்றும், அங்கே சென்றால் இறந்துவிட்டார் பிணவறையில் வைத்திருக்கிறோம் என தகவல் கிடைக்கப்பட்டு அங்கே சென்று பார்த்தால் பல வகையில் மரணமடைந்த பிணங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
அந்த பிணங்களிடையே இருந்து ஒருவர் எழுந்து வருகிறார். நியாயமாகப் பார்த்தால் இந்த இடத்தில் பயந்திருக்க வேண்டும். ஆனாலும் பயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பார்த்தால் பிணவறை நிர்வாகியாக இருப்பவர் அங்கிருந்து வருகிறார். அவரிடம் விவரத்தைச் சொல்லி கேட்டதும், அவரும் விவரத்தை உறுதி செய்து கொண்டு காத்திருக்கச் சொன்னார். அப்பாவின் பிணத்தை வாங்க நண்பர் வரும் வரை காத்திருந்த நேரத்தில் அந்த பிணவறை நிர்வாகி என்னிடம் பேச்சு கொடுத்தார்.
நீங்க இறந்தவருக்கு யார் என்றதும், நண்பனின் அப்பா என்று சொன்னேன். என்ன வேலை பாக்குறீங்க என்றதும், பெரிய நிறுவனங்களுக்குச் சென்று திறமையை வளர்த்தெடுக்கும் பயிற்சி கொடுப்பது மற்றும் மனநிலை சிக்கலை சரி செய்வது குறித்து மனப்பயிற்சி கொடுப்பது போன்றவைகளை செய்கிறேன் என்றேன். அவரோ ‘நீங்க சொன்னா கேட்டுக்கிறாய்ங்களா’? என்று கேட்டார். கேட்டுக்குறாங்களா இல்லையான்னு தெரியலை, ஆனால் என் பயிற்சிக்கு பிறகு நிறைய மாற்றம் வந்ததாக நினைக்கிறார்கள். அதனால் தான் திரும்ப என்னை கூப்பிடுகிறார்கள் என்றேன். அவரோ அதெல்லாம் சும்மா நடிப்பானுங்க, நீங்க சொல்றதை எவனும் உள் வாங்கியிருக்க மாட்டான் என்றார்.
அவருடைய பேச்சில் இருந்த ஒரு ஈர்ப்பில் மேற்கொண்டு கவனித்தேன். அவரே தொடர்ந்தார், வாழ்க்கையில் ரொம்ப ஆட்டம் போடுறவய்ங்க பலரை இந்த பிணவறையை காலையும், மாலையும் ஒரு தடவை பார்க்க சொல்லுங்க, தானாக அடங்கிடுவானுங்க. ஏனெனில், இங்கே இறப்பு குறித்த பயம் எல்லாருக்கும் போயிடுச்சு அதனால் தான் நிறைய ஆட்டம் ஆடுறாங்க என்றார். இங்க வந்து தொடர்ச்சியாக பார்த்தால் வாழ்க்கை குறித்த பயம் வந்து பொறுப்பு அதிகரித்து எல்லாரையும் நன்றாக பார்த்துக் கொள்வார்கள். ஆட்டம் போடாமல் அடங்கி இருப்பார்கள் என்றார்.
மேலும், சாவை உணர்ந்த மனிதன் சரியான மனிதனா இருப்பான். அதை உணராதவன் தான் நிறைய சிக்கலோடு இருப்பான். அவனுக்கு வாழ்கிற காலத்திலேயே நன்மைகளை செய்து விட வேண்டும் என்பதை இதுபோன்ற பிணக்குவியல்களை அடிக்கடி பார்த்தால் தான் உணர முடியும். இதைச் சொல்ல எதற்கு ஒரு பயிற்சி வகுப்பு, வாத்தியார், போதனை எல்லாம் என்று சொன்னார். பெரிய தத்துவங்கள், புத்தகங்கள் இவையெல்லாம் சொல்லாத ஒரு விசயத்தை ஒரு சாமானிய மனிதர் சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டார். இதை இன்றும் நான் எனக்கு கொடுக்கப்பட்ட, என்னுடைய சிந்தனையை மேம்படுத்திக்கொள்ள ஒரு கவுன்சிலிங்காகத் தான் எடுத்துக் கொள்கிறேன்.