திருமண உறவை முறித்துக் கொண்ட பிறகும், உடன் வாழ்ந்தவர்களின் நினைவுகளை சுமந்து இருக்கிறவர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
நல்லபடியாக திருமணம் நடந்தது, பிரச்சனை வந்தது, சரி செய்ய முயற்சித்தோம், முடியவில்லை, பிரிந்துவிட்டோம் என்று சர்வசாதாரணமாக தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி விவரித்தார் அந்த பெண். ஆனால், பிரச்சனை வந்து பிரிந்தேன், பிரச்சனைக்கு முன்பு வாழ்ந்த அழகான வாழ்க்கையுடைய நினைவுகள் இப்போது மீண்டும் வரும்போது அது தருகிற வெறுமையான மனநிலையிலிருந்து மீள முடியவில்லை என்று பேசினார்.
குறிப்பாக தன்னுடைய கணவர் அடிக்கடி பாடுகிற பாடலை எங்கேயாவது கேட்டாலோ, அவருக்கு பிரியமான உணவை எங்கேயாவது சாப்பிட நேர்ந்தாலோ, இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலி சுற்றுலாத்தளம் பற்றி யாராவது பேசினாலோ இவர்களுக்கு மலரும் நினைவுகள் வந்து விடுகிறது. அந்த நினைவுகள் வலியாக மாறுகிறது என்றார்.
கவுன்சிலிங்க் ஆரம்பித்தபோது, அவர்களது நினைவுகளை வகைப்படுத்தி அதற்கு ஒரு பெயர் வைக்கச் சொன்னேன். அது நல்ல நினைவுகள் அதற்கென்ன பெயர் வைப்பது என்றார். நானோ ஏதாவது காமெடியாக வையுங்கள் என்றதற்கு ‘இங்கி பிங்கி பாங்கி’ என்று வைப்போமா என்று கிண்டலாக சிரித்துக் கொண்டே சொன்னார். நானும் அதையே வச்சுப்போமே என்று சொல்லி, ஒருவாரம் கழித்து வாருங்கள் என்று அனுப்பி வைத்தேன்.
ஒரு வாரத்திற்கு பிறகு திரும்ப வந்தவரிடம் கேட்டேன், இப்பொழுதும் பழைய நல்ல நினைவுகள் வருகிறதா? ஆம், எனில் அந்த நினைவுகள் இப்பொழுதும் வலியைத் தருகிறதா என்று கேட்டபோது, இல்லை என்பதுதான் பதிலாக இருந்தது. எப்படி வலியாக இல்லாமல் போனதென்றால் அந்த நினைவுகள் வரும்போது நாம் வைத்த காமெடியான பெயரும் நினைவோடு சேர்ந்து வருகிறது. அது சிரிக்க வைத்து விடுகிறது என்றார். அதற்காகத்தான் அந்த நினைவுகளுக்கு காமெடியாக பெயர் வைக்கச் சொன்னதன் அர்த்தத்தைச் சொன்னேன்.
நாமெல்லாம் கஷ்டம், வலி, சிக்கல், துன்பம் என்ற இருக்கையில் அமர்ந்துகொண்டே அதை சரி செய்ய முயற்சிக்கிறோம். ஆனால் மகிழ்ச்சி, புத்துணர்ச்சி, ஆரோக்கியம், என்ற இருக்கை நமக்கு அருகிலேயே இருக்கும். அதைப் பற்றிய புரிதல் இல்லாமலேயே இருப்போம். அதைப் புரிந்து கொண்டால் ஒரு இருக்கையிலிருந்து எழுந்து இன்னொரு இருக்கையில் அமர்ந்து விடலாம். அப்படித்தான் இனிமையான நினைவுகளை நமக்கு தந்தவர்கள் பிரிந்து விட்டால், அந்த நினைவுகள் வலியாக மாறும்போது அதை வேறு விதமாக பார்க்க பழகிக்கொண்டால் நாம் இயல்பாக இருக்க பழகி விடுவோம்.
பின் ஒரு நாளில் அந்த பெண்ணை பொதுவான ஒரு இடத்தில் சந்தித்த போது, இப்பொழுதெல்லாம் சில கோவமான நிகழ்வுகளுக்கு காமெடி பெயர் வைத்து சிரித்து விடுவதாகச் சொன்னார். நாம் சொன்ன டெக்னிக்கை புரிந்து கொண்டார் என்பது கவுன்சிலிங்க் கொடுத்த எனக்கும் திருப்தியாக அமைந்தது.