காவல்துறையினரின் பிரச்சனைகள் குறித்தும் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்த அனுபவம் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் விவரிக்கிறார்
காவல்துறையினருக்கும் கவுன்சிலிங் கொடுக்க நான் சென்றுள்ளேன். மன்னராட்சி முறையில் பின்பற்றப்பட்ட பல்வேறு விஷயங்கள் காவல்துறையில் இன்றும் இருக்கின்றன. அவையே அவர்களுடைய மன அழுத்தத்திற்கு காரணம். உயர் அதிகாரிகள் எப்போது அழைத்தாலும் உடனடியாக செல்ல வேண்டிய நிலை காவல்துறையில் இருக்கிறது. சம்பந்தமே இல்லாத விஷயங்களால் வேலை பறிபோகும் நிலை கூட ஏற்படும். உலகிலேயே பரிதாபமான ஆட்கள் போலீசார் தான்.
இந்த அழுத்தத்தையும் கோபத்தையும் தான் பொதுமக்களிடம் அவர்கள் காட்டுகிறார்கள். உயர் அதிகாரிகள், மக்கள், அரசியல்வாதிகள், சொந்தக்காரர்கள் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து அவர்களுக்கு அழுத்தம் வரும். அவர்களுடைய குரல் யாராலும் கேட்கப்படாத ஒன்று. அவர்களுக்கு ஒரே ஆறுதல் அவர்களுடைய அதிகாரம் மட்டும் தான். அதனால் வேலையை ராஜினாமா செய்ய அவர்கள் எப்போதும் முடிவெடுக்க மாட்டார்கள். மக்களிடம் கிடைக்கும் மரியாதை அவர்களுக்குப் பிடிக்கும்.
ஒருபக்கம் உயர் அதிகாரிகளிடம் பணிந்தும், இன்னொரு பக்கம் மக்களிடம் அதிகாரம் செலுத்தியும் அவர்கள் மாறி மாறி வாழ்வார்கள். இதனால் அவர்களுக்கு தங்களுடைய அடையாளம் எது என்பதே தெரியாமல் போய்விடும். ஒரு அதிகாரியின் இடத்தைப் பிடிக்க இன்னொரு அதிகாரியும் போட்டியில் இருப்பார். எனவே இவர் சறுக்குவதற்கான நேரத்திற்காக அவர் காத்திருப்பார். எனவே சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர்கள் என்பதை அறிவது கடினம். அவர்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாத பல விஷயங்களால் அவர்களுக்கு பிரச்சனை வரும்.
தாங்கள் நினைக்கும் எதையும் செய்ய முடியவில்லை என்பதே அவர்களுடைய பெரிய பிரச்சனையாக இருக்கும். சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்கிற எண்ணம் கூட அவர்களுக்கு ஏற்படும். முதலில் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களை அவர்கள் சரிசெய்து கொள்ளலாம். அதுதான் நம்மால் செய்ய முடிந்த விஷயம். போலீஸ் ஸ்டேஷனில் நூலகத்தை உருவாக்கலாம் என்கிற சிந்தனை கூட ஒரு அதிகாரிக்கு வந்தது. அந்த அதிகாரிக்கு இப்போது மன அழுத்தம் குறைந்துவிட்டது.
தன்னை உணர்தல் என்பது காவல்துறையினருக்கு மிக முக்கியமான ஒரு விஷயம். காவல்துறை என்று ஒன்று இல்லாவிட்டால் இந்த உலகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். இப்படிப்பட்ட துறையைச் சேர்ந்தவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்போது பாசிட்டிவான முன்னெடுப்புகள் மூலம் அதிலிருந்து அவர்கள் வெளிவர வேண்டும்.