Skip to main content

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #03

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

iraval edhiri part 3

 

இரவல் எதிரி - முந்தைய பகுதிகள்

 

இதற்குமேல் வெளிச்சம் தர இயலாது என்று மஞ்சள் தடவி பல்பு சத்தியம் செய்யாத குறையாகக் கதறியது. வாசலின் ஓரம் நாய் ஒன்று யாரோ சாப்பிட்டுப் போட்ட எச்சிலையை ருசி பார்த்துக் கொண்டு இருந்தது. சில கான்ஸ்டபிள்கள் ட்யூட்டி மாறியதை நோட்டில் குறித்தபடி இருந்தார்கள். 

 

இன்ஸ்பெக்டர் அறையை ஒட்டிய பென்ஞ்சில், “என்னா கேஸூ ?”  புடவையின் மேற்பக்கம் சற்று சரிந்திருந்ததை லட்சியம் செய்யாமல், காவிப் பற்களுடன் இந்த இடம் ஒன்றும் எனக்குப் புதுசு இல்லை என்பதைபோல் அருகில் இருந்தவர்களை நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தாள் அந்த பெரிய உடம்புக்காரி.

“தே....! கொஞ்சம் அப்பாலே போ....!” “இந்தா ஏட்டு இவளை அந்தப் பக்கமாப் போகச் சொல்லு சொம்மா நசையாட்டம் ஒட்டிகினு ?”  போட்டிருந்த வெள்ளைக்கரை வேட்டி சட்டைக்கும், வாயிலிருந்து வரும் வார்த்தைக்கும் கொஞ்சமும் ஒட்டாமல் கத்தினான் அவன்.

“இந்தாம்மா போய் ஓரமா உட்காருறீயா இல்லை, செல்லுக்குள்ளே போட்டு லாடம் கட்டவா ?!”

“அட ஏன் ராசா நீ ?!” “ போனமுறை கட்டினதுக்கு கழண்டுபோச்சு எனக்கு....?!” அதற்கு மேல் அவள் பேசிய வார்த்தைகளை கேட்காமல் இருப்பதே நலம் நமக்கு.

“இன்ஸ்பெக்டர் சக்ரா ?!” உள்ளே நுழைந்ததும் அனைவரிடத்திலும் ஒருவித அமைதியும், குழைவும். “ என்ன ? ரஞ்சி மறுபடியும் வந்துட்டியா நல்லாதாப் போச்சு உடம்பு ரொம்ப சூடாகிப்போச்சு, தணிக்க தேவைதான். “  அவளைப் பார்த்து அசிங்கமாய் கண்ணடித்தவன். பக்கத்தில் அமர்ந்திருந்த வெள்ளை கரையைப் பார்த்தான் 

“என்னா வேணும் ?!”

“இந்தாங்க ! இந்த மாச கமிஷன் அய்யா கொடுத்துட்டு வரச் சொன்னாங்க ?!”

“ம்.....?!”  “தொழில் எல்லாம் எப்படிப் போவுது ?!”  பணத்தை பேண்ட் பாக்கெட்டுக்குள் சொருகியபடியே கேட்டான் சக்ரா.

“நீங்க இருக்கும்போது என்ன கஷ்டமுங்க அப்போ நான் கிளம்பட்டுங்களா ?” 

“ம்...ம்...!” “ ஏண்டா இப்போ நம்ம ஏரியாவில இரண்டு மூணு ஸ்கூல் பசங்களைக் காணோமே உங்க அய்யாவுக்கு அதிலே ஏதாவது தொடர்பு இருக்குதா ?!”

“அட இல்லீங்க அய்யா ? அந்த வேலைக்கு எல்லாம் எப்பவோ முழுக்கு போட்டுட்டார். இப்போ முழு நேர அரசியல்தான் !”.

“விசாரணையிலே அவரு பேரும் இருக்கு, நானா கண்டுபிடிக்கிறதுக்குள்ளே நீயா சொல்லிட்டா கமிஷன் கணிசமாத்தான் ஏறும் இல்லைன்னா.....!” 

“இல்லீங்க ?!”  அவன் தலையைச் சொறிந்தபடியே வெளியேறினான். எமகாதன் இவனை அய்யாகிட்டே சொல்லி கொஞ்சம் தட்டி வைக்கச் சொல்லணும்.

“சார்....?!”  “இன்னைக்கு கேஸ் சிபிஐக்கு மாறுவதா சர்க்குலர் வந்திருக்கு”. 

“CBI ஆபிஸர் மாறன் கிட்டே இந்த கேஸ் சம்பந்தப்பட்ட பைல்களை ஒப்படைக்கணும்.” எஸ்.ஐ. வேந்தன் பணிவாக சொன்னான்.

“நாலு பைலும் ரெடியா ?”

“ரெடி ஸார்.....?!” “ ஏற்கனவே பசங்க கடத்தலில் ஈடுபட்டு இருந்த பசங்களை கொண்டு வந்து வைச்சிருக்கிறேன். சொல்லிவைச்சா மாதிரி யாரும் இல்லைன்னு சாதிக்கிறாங்க. பசங்க காணாம போன நேரத்திலே இவனுங்க யாரும் ஊருக்குள்ளே இல்லையாம். எல்லாம் கடலுக்குள்ள இருந்திருக்கானுங்க?!”

“கடலுக்குள்ளேயா ?”

“உங்களுக்குத் தெரியுமே ஸார் ! நம்ம குப்பத்துலே இருக்கானே கடல் குமாரு அவனுக்கு அன்னைக்கு பொறந்தநாளுன்னு இவனுங்களுக்கு எல்லாம் பார்ட்டியாம். தண்ணி, மேற்படி சமாச்சாரங்கள்ன்னு கடலையே நாறடிச்சிட்டு வந்துருக்கானுங்க. இவனுங்க செல்போன் சிக்னலும் அந்த இடத்தைத்தான் காட்டுது !”.

“கேஸ்ல எந்த முன்னேற்றமும் இல்லைன்னு கமிஷனர் போட்டுத் தாளிக்கிறாரு ? இதுலே கேஸ் வேற சிபிஐ கண்ட்ரோல்ல போயிடுச்சு. வாசலில் ஒரே ஆரவாரம்....!”

“என்னாச்சு ?”

“பிரஸ் பீப்பிள் ?”

“இவனுங்களுக்கு வேற வேலையே இல்லைடா, மைக்கைப் பிடிச்சிட்டு அலையறாங்க. என்னவாம் அவனுங்களுக்கு ?!”

“கேஸ் சிபிஐக்கு மாறியதைப் பற்றி கேப்பாங்க ? கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணுங்க?!”  “இது குழந்தைங்க சம்பந்தப்பட்ட கேஸூ ?!” எஸ்.ஐ  அத்தனை சொல்லியும் சக்ரா விரைப்போடு நின்றான்.

 

அவனின் அதிக முறைப்போடு மைக்குகள் நீட்டப்பட்டன.

“ஏன் ஸார் ?” “உங்க ஸ்டேஷன் லிமிட்ல உள்ள ஸ்கூல்ல இருந்து குழந்தைங்க காணாம போயிருக்காங்க நீங்க என்ன ஆக்ஷன் எடுத்து இருக்கீங்க ?”

“விசாரிச்சிட்டு இருக்கோம்.?!”

“ஸார் பாதிக்கப்பட்ட பெற்றவர்களோட நிலைமையைப் பாருங்க ?!” “இதெல்லாம் தாண்டி குற்றம் நடந்து இரண்டு நாள் ஆச்சு இப்போவரைக்கும் எந்த அப்டேட்டும் இல்லை. மக்கள் தங்களோட பிள்ளைகளை வெளியே அனுப்பவே பயப்படறாங்க. இதுக்கு உங்க பதில் என்ன ?”

“உங்களால கண்டுபிடிக்க முடியலைன்னுதான் சிபிஐ மாறனை இதுலே இன்வால்வ் பண்ணியிருக்காங்களா ? “

 

ஆளாளுக்கு கேள்விகளை கேட்டார்கள். “பொறுமையை இழுத்துப் பிடித்தபடியே நீங்க கேட்குற எந்த கேள்விக்கும் என்னால இப்போ பதில் சொல்ல முடியாது. இது மேலிடத்தோட உத்தரவு. ஒரு கேஸ் சிபிஐக்கு மாறுவதால கேஸை இதுக்கு முன்னாடி நடத்தினவங்க திறமையில்லாதவங்கன்னு சொல்லிட முடியாது. சிபிஐ கிட்ட இந்த கேஸ் போனாலும் ஃபர்ஸ்ட் இன்வெஸ்டிகேஷன் தொடர்பான தகவல்கள், கேஸ்க்கு கூடிய ஒத்துழைப்பையும் நான் தருவேன். காணாம போனது எனக்கும் பிள்ளைகள் மாதிரிதான்!”

“இன்ஸ்பெக்டர் சக்ராவின் அலட்சியம் !” என்று பத்திரிகைகளில் செய்தி. ப்ளாஷ் நியூஸில் .....!”

“சென்னையில் ஒரே நாளில் காணாமல் போன நான்கு மாணவர்கள் இரண்டு நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் போலீஸ் சிபிஐ கரங்களில் வழக்கு; பெற்றோர்களுக்கு நியாயம் கிடைக்குமா ?” 

 

மாறன் வேறு சேனலை மாற்றினான். சின்த்தால் சோப்பின் சரும பாதுகாப்பை நம் நலமும் சமுதாய நலமும் என்ற பஞ்ச் டயலாக்கோடு வலியுறுத்திக் கொண்டு இருந்தது. “இந்தக் கடத்தலுக்கு காரணம் பணமா ? பழிவாங்கும் படலமா ?”  விதவிதமான தலைப்புகளில் செய்தி சேனல்களில் விவாதங்கள். 

 

மாறன் உதடுகளில் க்ரீன் டியின் சூட்டை ருசித்தபடியே சலித்துக் கொண்டான். எல்லாவற்றையும் மீடியா பேசு பொருளாக்கி விடுகிறார்கள். பிரச்சனையின் நிலவரம் என்ன என்பதை ஆராய்வதைத் தாண்டி இவர்களின் டி.ஆர்.பி மோகம்.

 

சில நேரங்களில் ரகசியமாக வைக்க வேண்டிய விசாரணைகள் கூட,  “குற்றம் நடந்தது என்ன?” என்று வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறார்கள். எல்லாவற்றையும் தோலுரித்துப் பார்க்கும் ஆர்வம். தானும் கெட்டு மற்றவர்களையும்,  ஒருவித பதட்டத்திலேயே வைத்துக் கொள்ளும் சைக்கோத்தனமான மனநிலையில் தற்போதைய மீடியாக்கள் வந்துவிட்டன. 

 

ரிஷப்ஷனுக்கு கால் செய்து, “ பிளைட்டுக்கு நேரமாச்சு, செக் அவுட் பண்றேன். பில்லை ரெடி பண்ணுங்க ?!”  என்று கையடக்க சூட்கேஸை எடுத்துக் கொண்டு லிப்டிற்கு வந்தான். மாறன் பதினைந்து வருட சர்வீஸ். இப்போது கூட ஒரு கேஸை வெற்றிகரமாக முடித்துவிட்டு டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறான். 

 

இதோ அடுத்த கேஸ் தயாராக....!  ரிசப்ஷன் இளைஞன் ஸ்நேகமாய் புன்னகைத்தான். “இப்போதான் டிவியில் உங்களைப் பார்த்தேன் ஸார் ஆல் தி பெஸ்ட் !” என்றான்.

“தேங்க்ஸ் ....!” அழுத்தமான சிரிப்புடன் சென்னையின் பயணத்திற்கு ஆயத்தமான மாறனைப் பற்றி சில வரிகள். 37- ன் தொடக்கத்தில் இருந்தான். காதல் திருமணம் செய்து அதே அவசரத்தில் விவாகாரத்தும் பெற்றவன். 

 

கடமை என்ற ஒன்றைத் தவிர பெரிதாக எதிலும் அக்கறை காட்டாத நேர்மையான அதிகாரி. சிபிஐயில் பத்துவருட அனுபவம். கைவைத்த அத்தனை கேஸிலும் வெற்றி. பிளைட்டில் இருந்து இறங்கி நேராக அவன் சென்ற இடம் சக்ராவின் இன்சார்ஜ்ஜில் உள்ள காவல் நிலையம். 

 

மாறன் தன் பெட்டியை டேக்ஸியிலேயே வைத்துவிட்டு ஸ்டேஷனில் நுழைந்தான். இரவு நேர ஆக்கிரமிப்பில் காவல் நிலையம் தள்ளாடிக் கொண்டு இருந்தது. உள்ளே நுழையும்போதே ஒரு வித சாராய நெடி. இரண்டு மூன்று பேர்களுடன் ஒருவித மெத்தனத்தில் இருந்தது ஸ்டேஷன். வெளியே வண்டியின் சப்தம். எஸ்.ஐ.வேந்தன் இரவு நேர ரோந்து சென்றுவிட்டு திரும்பி ஸ்டேஷனுக்குள் நுழைந்து மாறனைப் பார்த்ததும் அவசரமான ஒரு சல்யூட்டினை செலவழித்தான்.

“வாங்க ஸார்..!” “நான் எஸ்.ஐ.வேந்தன் ரோந்து போயிருந்தேன், வந்து ரொம்ப நேரமாச்சா ?!”

“இப்பத்தான் ஸ்டேஷன்லே....?!”

“இரண்டு பேர் லீவ், நைட் ட்யூட்டி பாக்கிறவங்க.....!”

“இட்ஸ் ஒ.கே……?!” “ எனக்கு கேஸ் பற்றியத் தகவல்கள் வேணும்!”. 

“ஒன் மினிட் ஸார்…..!”

 

இன்ஸ்பெக்டர் அறைக்குள் நுழைந்த கேசவன் இரு நிமிடங்களில் வெளிப்பட்டான். கூடவே சன்னமான ஒலியும்.  அவன் பின்னே தொத்திக் கொண்டு வந்தது. மாறன் முகச்சுழிப்புடன், வேந்தனை பார்க்க “ஸாரி ஸார். இன்ஸ்பெக்டர் ?” …” இதை உங்ககிட்டே கொடுக்கச் சொன்னார். !”

“அவர் எங்கே ?”  மாறனின் கேள்விக்கு வேந்தன் தலைகவிழ்ந்து கொள்ள அரைநொடியில் ஸ்டேஷன் இருளைப் பூசிக் கொண்டது. 

“ஜெனரேட்டர் இல்லையா ?”  மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு இருந்த ரைட்டரிடம் கேட்டான் மாறன்.

“ரிப்பேர் ஸார்.....! இது வழக்கம் இன்னும் பத்து பதினைந்து நிமிடங்களில் கரண்ட் வந்திடும்!”  ஆனால் ஏழாவது நிமிடத்தின் நொடியில் கரண்ட் வந்தது. மாறன் பைல்களைப் பெற்றுக் கொண்டு வெளியேறினான். 

“சார்......எஸ் ஐ சார் !” “இங்கே வந்து பாருங்களேன்” பின்பக்கத்தில் இருந்து இன்னொரு காக்கியின் பயம் கலந்த குரல் ! மாறனும் வேந்தனும் பின்பக்கம் ஓடினார்கள். வெளிச்சப் புள்ளியில் ஒரு ஆளுயர பெட்டி நின்றுகொண்டு இருந்தது. “ இதெப்படி இங்கே ?”

“தெரியலை ஸார் ?” “ அவசரத்துக்கு ஒதுங்கலான்னு வந்தேன் இங்கே இந்த பெட்டி கிடக்குது உள்ளேயிருந்து ஏதோ சப்தம் வருது ஸார் ?!” என்றார் திகிலுடன்.

 

மாறன் அந்தப் பெட்டியைத் திறக்கப் போக,  “இருங்க ஸார் உள்ளே இருந்து ஏதோ சப்தம் வருது எனக்கென்னவோ ? பாம் ஏதாவது ?!”

 

மாறன் தன் பாக்கெட்டில் இருந்து,  சிறிய மெட்டல் டிடெக்டர் போன்ற கருவியை எடுத்தான். பெட்டியை சுற்றிலும் ஆராய்ந்தவன்.  “ஒண்ணும் இல்லை திறக்கலாம்!” என்று அதையே கத்தியாக்கி திறக்க உள்ளிருந்தது ஒரு பள்ளிச்சீருடை அணிந்த சிறுவன். 

 

அவனின் கண்கள் அந்த வெளிச்சத்தில் மின்னின. அவன் மாறனைப் பார்த்தபடியே பெட்டியில் இருந்து வெளியே வந்தான். “உங்களை வரவேற்கிறேன்”  என்று சொல்லிவிட்டு ஒரு அதிர்வலைக்கு உட்பட்ட காகிதம் போல எம்பி மாறனின் மேல் சாய்ந்தான். 

“சார்....!”  “இந்தப் பையன் காணாமல் போனவர்களில் ஒருவன்!”  என்று தான் சற்று முன் மாறனிடம் தந்த பைலைப் புரட்டிக் காட்டினான். அசோக் என்று பெயரிடப்பட்டு இருந்த அந்த சிறுவனின் வாயின் கடையோரம் மெல்லிய ரத்தக்கோடு. 

 

ஸ்டேஷன் விழித்துக் கொண்டது. இன்ஸ்பெக்டர் மட்டும் இன்னுமும் வரவில்லை. அந்த பையனின் பாடியை பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவிட்டு பெட்டியை பாரன்சிக்கில் சேர்க்க சொல்லி தன் வீட்டிற்குத் திரும்பினான் மாறன். படுக்கையில் சரிந்தான். மனதிற்குள் சற்று நேரத்திற்கு முன் வெல்கம் சொல்லி மரித்துப் போன அசோக் தெரிந்தான்.

 

தலையை ஒருமுறை சிலுப்பிவிட்டு கொண்டு வந்த பைலைப் பிரித்தான். நான்கு சிறுவர்களின் புகைப்படம் அதில், “எங்களை காப்பாத்திட மாட்டீர்களா ?” என்று கேட்பதைப் போல இருந்தது. பைலை ஸ்டடி பண்ணுவதில் தூக்கத்தை தொலைத்தான் மாறன்.

 

- தொடரும் 

 

- லதா சரவணன்.