Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; “பேங்க்ல இப்படிலாம் கேட்க மாட்டாங்களே சுதாரித்த நபர்” பகுதி - 24

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

Digital cheating 24

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் அது. “சார் போஸ்ட்” என தபால்காரர் வீட்டு வாசலில் இருந்து கத்தினார். உள்ளிருந்து வந்தார் அரசுத் துறையில் பணியாற்றும் 55 வயதாகும் நபர். “இதுல ஒரு கையெழுத்துப் போடுங்க.” கையெழுத்துப் போட்டதும் இந்தாங்க என ஒரு கவரை தந்துவிட்டுச் சென்றார் தபால்காரர்.

 

பிரபலமான பொதுத்துறை வங்கியில் இருந்து வந்த அந்த கவரை பிரித்த போது உள்ளே, துரைசாமி அர்ஜுனன் என அவரின் பெயர் இருந்த புதிய ஏ.டி.எம் கார்டு பளபளத்தது. தனது பழைய ஏ.டி.எம் கார்டு எக்ஸ்பயரி ஆனதால் புதிய கார்டு அனுப்பியிருக்கிறார்கள் போல. பரவாயில்லை பொதுத்துறை வங்கிகூட நல்லா வேகமாக வேலை செய்றாங்களே என மகிழ்ச்சி அடைந்தார்.

 

ஏ.டி.எம் கார்டு ஆக்டிவேட் செய்ய இந்த எண்ணுக்கு கால் செய்யுங்கள் என அதில் ஒரு மொபைல் எண் இருந்தது. இவர் தனது மொபைலை எடுத்து  அந்த நம்பரை தொடர்புகொண்டார். எதிர்முனையில் பேசிய குரல் அழகான பெண் குரல். “நீங்கள்தானா என உறுதி செய்துகொள்ள சில கேள்விகள்” எனச்சொல்லி, “உங்க அட்ரஸ் பின்கோட் நம்பர் சொல்லுங்க? அப்படியே வங்கியில் தந்துள்ள உங்க நாமினி பெயர் சொல்லுங்க” என்கிற கேள்வியை கேட்டு பதிலை வாங்கிக்கொண்டதும், “உங்க பழைய ஏ.டி.எம் கார்டு டேட் முடியவுள்ளது, அதனால் புதிய கார்டு வங்கி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய கார்டு அப்டேட் செய்ய வேண்டுமானால் பழைய கார்டை டீஆக்டிவேட் செய்யவேண்டும். அதனால் முதலில் பழைய கார்டு எண் சொல்லுங்கள், பிறகு புதிய கார்டு எண் சொல்லுங்கள்” என இரண்டு கார்டு எண்களும் கேட்க இவரும் தந்துள்ளார். 

 

“இப்போது நீங்கள் வங்கியில் பதிவு செய்த உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி வரும் அதைச்சொல்லுங்கள்” என்று கேட்டுள்ளார் அந்தப் பெண். ஓடிபி சொல்ல முயன்றவர் டக்கென சுதாரித்துக்கொண்டு, “ஓடிபி எல்லாம் வங்கியில் இருந்து யாரும் கேட்கமாட்டாங்கன்னு அடிக்கடி மெசேஜ் வருது, நீங்க ஓடிபி கேட்கறிங்க” என்று கேட்டுள்ளார். “இது டெபிட்கார்டு ஆக்டிவேட் சர்விஸ், அதனால் பயப்படாம சொல்லுங்க பிரச்சனையில்லை” என்றிருக்கிறார் அந்தப் பெண். “இல்லை, நான் என்னோட வங்கி கிளையில் நேரடியாகப்போய் ஆக்டிவேட் செய்துகொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். “உங்களுக்கு எதுக்கு சிரமம், நானே செய்து தந்துடுறேன்” என்றார் அந்தப் பெண். “சிரமம் ஒன்னுமில்லை” என்றார் அவர். “வெய்யில் காலத்தில் நீங்க அலையாதிங்க. கார்டு உடனே ஆக்டிவேட் செய்யலன்னா அக்கவுண்ட் லாக் ஆகிவிடும்” என்றிருக்கிறார் அந்தப் பெண். “யாரு?” என இவர் கேட்டதும், “சிஸ்டம், ஆட்டோமேட்டிக்கா லாக் செய்துடும்” என்றிருக்கிறார் அந்தப் பெண். “நான் இப்பவே பேங்க்குக்கு போய் பார்த்துக்கிறேன்” எனச் சொல்லியபடி போன் லைனை கட் செய்துள்ளார்.

 

உடனே புறப்பட்டு வங்கியில் போய் அவர் இதனை கூறியபோது, அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் அந்த கார்டு, கவர் வாங்கி பார்த்தபோது, அப்படியே வங்கி அனுப்புவது போல் அனுப்பியிருந்தனர். அவர் உடனே தனது வங்கி மேலாளரிடம் தகவல் சொல்லியுள்ளார். அவர்கள் தொடர்பு கொள்ளச்சொல்லி அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண் போலியாக இருந்தது.

 

முகநூல், வாட்ஸ்அப் போல் இந்தியாவில் கோடிக்கணக்காணோர் டெலகிராம் ஆப் பயன்படுத்த துவங்கியுள்ளனர். அதற்கு காரணம் இலவசமாக கோலிவுட், பாலிவுட் மட்டுமல்ல ஹாலிவுட் படங்களும், வெப்சீரியஸ்களும் இலவசமாக கிடைப்பதால் பொதுமக்கள் அதில் குந்தவைத்து அமர்ந்துள்ளனர். டவுன்லோட் செய்து படமாக பார்க்கின்றனர்.

 

டெலகிராமில் ஒரு குரூப் உள்ளது என்றால் அதில் நாம் இணைந்தால் அதில் மொபைல் எண் காட்டாது. டெக்னாலஜி கில்லாடிகள் அதன் வழியாகவும் மோசடி செய்யத் துவங்கியுள்ளனர். சென்னையைச் சேர்ந்த நெட்டிஸன் அவர். இணையத்திலேயே புழங்கிக்கொண்டு இருக்கும் அவர் சினிமா குறித்தும், உணவுக் குறித்தும், தான் போய்வந்த சுற்றுலா தலங்கள், அரசியல் என எதுகுறித்தாவது சமூக ஊடகத்தில் எழுதிக்கொண்டே இருப்பார். இவருக்கு டெலகிராம் வழியாக அறிமுகமானவர், “நான் சங்கரநாராயணன்” (இது உண்மையான பெயரா என நெட்டிஸனுக்கும் தெரியாது) எனச் சொல்லிக்கொண்டு அறிமுகமாகியுள்ளார்.

 

“நான் ஒரு சோசியல் மீடியா கன்சல்டிங் நிறுவனம் வைத்துள்ளேன். சோசியல் மீடியாக்கள் மூலம் ஹோட்டல்கள், சினிமா, உணவு போன்றவற்றை பப்ளிசிட்டி செய்வது எங்களது வேலை. நாங்கள் ஹோட்டல்கள் குறித்து பட்டியல் தருவோம் அதற்கு நீங்கள் ரிவ்யூ எழுத வேண்டும் அப்படி எழுதினால் ஒரு ரிவ்யூவுக்கு 500 ரூபாய் சார்ஜ் தருவோம்” என்றுள்ளார்.

 

ஆஹா, அதற்கென்ன எழுதிடுவோம் என களம் இறங்கியுள்ளார். முதலில் ஒரு பத்து ஹோட்டல் குறித்து ரிவ்யூ எழுதியுள்ளார். இவரது வங்கி கணக்குக்கு 5 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளனர். எவ்வளவு நேர்மையா இருக்காங்க, வீட்ல இருந்தபடியே லட்சம் லட்சமா சம்பாதிக்க வழி தெரிஞ்சிடுச்சி என இறக்கை இல்லாமலே வானில் பறக்கத் துவங்கினார். அவர்கள் பட்டியல் தருவதும், இவர் அந்த பட்டியலில் உள்ள ஹோட்டல்கள் குறித்து பதிவு எழுதுவது, சினிமாக்கள் குறித்து ஆஹா ஓஹோ என எழுதுவது என இருந்துள்ளார். ஒருநாள், “நீங்க எங்க கம்பெனிக்கு டெப்பாசிட் கட்டனும், அப்பத்தான் உங்களை மெம்பராக்குவோம்” என்றுள்ளார். “ப்ரீமியம் எவ்வளவு” என்று இவர் கேட்க, “நார்மல் மெம்பர்னா 50 ஆயிரம், கோல்டன் ப்ரீமியம் எடுத்துக்கிட்ட 1 லட்சம், டைமண்ட் மெம்பராகனும்னா 2 லட்சம். நார்மல் மெம்பர்னா மாதம் 100 பெயர் கொண்ட பட்டியல் தருவோம். கோல்டன் மெம்பர்னா மாதம் 1000, டைமண்ட் மெம்பர்னா ஹோட்டல், சினிமா மட்டுமில்லாம, அரசியல் பதிவுகள் போடவும் கன்டெண்ட் தருவோம்” என்றுள்ளார். இவர் டைமண்ட் மெம்பராக 2 லட்சம் பணம் தந்துள்ளார். 

 

அவர்கள் பட்டியல் தருவதும், இவர் ரிவ்யூ எழுதுவதும், கமெண்ட் போடுவதும் என வாழ்ந்துள்ளார். “உங்களுக்கு வருமானம் வருதில்ல; எங்களுக்கு முன்கூட்டியே பணம் தாங்க என நைச்சியமாக பேசிபேசி சுமார் 30 லட்ச ரூபாயை ஆட்டயப்போட்டுள்ளார் அந்த நபர். அதன்பின் ரிவ்யூ எழுதுவதற்கான பட்டியல் வரத்தும், பணம் வரத்தும் குறைந்தது. இவரிடமிருந்து டெலகிராம் வழியாக பேசியவர் 30 லட்ச ரூபாய் பணம் வாங்கியிருந்தார். இவர் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து பணம் தந்துள்ளார். இப்போது 30 லட்ச ரூபாய் கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறார். என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார். அவரின் வீட்டுக்கு செல்லலாம், போலீசில் புகார் தந்து அவரது மொபைல் எண்ணை வைத்து ஆளை பிடிக்கலாமே?

 

தொடரும்…