Skip to main content

காணாமல் போன வீட்டிலிருந்த மனைவி; காரணம் தெரிந்ததும் நொறுங்கிய கணவன்! - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 43

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Detective malathis investigation 43

வீட்டில் தனியாக இருந்த மனைவியைக் காணவில்லை என்று வந்தவரின் வழக்கு பற்றி முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.

இருபத்தி எட்டு வயது நபர் ஒருவர், என்னுடைய அலுவலகத்திற்கு வந்து தன் மனைவியை காணவில்லை என்றும், கண்டுபிடித்து தருமாறும் வழக்கு கொடுத்தார். வழக்கம் போல இருவரின் தகவல்களை வாங்கினோம். அவர்களது திருமணம் காதல் திருமணம். வீட்டில் சம்மதிக்கவில்லை. தனியாக வந்து பதிவு திருமணம் செய்து எட்டு மாதங்கள் ஆகி இருக்கிறது. வழக்கமாக இவர் அலுவலகம் சென்று வீடு திரும்புகையில், அங்கு மனைவியைக் காணவில்லை. சரி என்று அவர் மனைவியின் மொபைல் நம்பரைக் கேட்டோம். அந்தப் பெண்ணின் மொபைலை அவரது பெற்றோர் காதலித்த நாட்களிலே வாங்கி வைத்திருந்தனர். எனவே இவரின் பெயரில் மொபைல் வாங்கி இருந்ததால் நல்ல வேளையாக தேட வசதியாக இருந்தது.

இந்தப் பெண் காணாமல் போனதற்கு ஒன்று பெற்றோர் காரணம் அல்லது வேறு யாருடனும் தொடர்பு இருக்கிறதா? என்று இரு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தோம். நாங்கள் கால் ஹிஸ்டரியைப் பார்த்ததில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. திருமணத்திற்கு முன்னர், பெற்றோருடன் நிறைய வாக்குவாதங்கள் ஆகியிருக்கிறது என்று தெரிய வந்தது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சாதியினால் பிரச்சனை இல்லை என்று புரிந்து கொள்ள முடிந்தது. அடுத்து இருவரது வசதி பற்றி கேட்டதில், இந்த நபரை விட அவரது மனைவி வீட்டில் வசதி அதிகம் என்று தெரிந்தது.

இந்தப் பெண்ணின் மொபைல் கடைசியாக எங்கே சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்கிறது என்று ஐ.எம்.இ.ஐ. ஐ.டியை வைத்து பார்த்தால் அது ஒரு நெடுஞ்சாலையில் கடைசியாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரிடம்  சொந்த ஊர் மற்றும் சொந்தங்கள் பற்றிக் கேட்டு அங்கு சென்று பார்த்தோம். இவர்களது பெற்றோர் வீட்டில் இந்தப் பெண் இருப்பதற்கான அறிகுறி இல்லை என்று கண்காணித்ததில் தெரிந்தது. அடுத்ததாக அந்தப் பெண்ணின் அக்கா தான் பேசி மனதை மாற்றச் செய்து வேறொரு ஊரில்  தன்னுடன் வீட்டில் காவல் வைத்திருப்பது தெரிந்தது. உறுதி செய்தபின் அவரைக் கூப்பிட்டு, விஷயத்தைச் சொல்லி இதை ஹேபியஸ் கார்பஸ் மூலமாகத்  தீர்வு காணலாம் என்று ஆலோசனை கொடுக்கப்பட்டது.

அந்தப் பெண்ணை இவர் தொடர்பு கொண்ட போது வர மறுத்து விட்டாள். அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கு தங்களை விட வசதி குறைவான இடத்தில் அவர் வாழ்வது பிடிக்கவில்லை. பேசி மனதை மாற்றிக் கொண்டு போய் விட்டார்கள். இங்கு நாம் சமூகம் சார்ந்து வாழும் வாழ்வியலாக இருக்கிறது. வெளிநாடுகளில் பதினெட்டு வயது ஆனவுடன், பெண், ஆண் இருவரில் யாராக இருந்தாலும் சரி, சம்பாதித்து நீயே வாழ்ந்து கொள் என்று அனுப்பி விடுவார்கள். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு என்று சேர்த்து வைக்கமாட்டார்கள். ஆனால் நம் பக்கம் அப்படி இல்லை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கென்றே சொத்தை சேர்த்து வைக்கின்றனர். எனவே பிள்ளை தங்களை மீறி வேறொரு வாழ்க்கையை தேடிச் சென்றுவிட்டால், அவர்கள் பிள்ளைக்கென்று உழைத்த உழைப்பை எண்ணி, இத்தனை செய்தும் வெளியே சென்று விட்டார்களே என்று பொறுக்கமுடியவில்லை. ஒன்று தன் பிள்ளைக்கென்று என்ன செய்கிறோம், எவ்வளவு முக்கியம் என்று புரிய வைத்து வளர்க்க வேண்டும், இல்லை தனித்து போய்விட்டார்கள் என்றால் அவர்களை விட்டு விட வேண்டும்.