Skip to main content

நேசித்தான் என்று எழுதலாமா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 27

திருத்தமான ஒரு சொல்லைப் பிறழ்ச்சியாகப் பயன்படுத்துவதில் நானிலத்தில் நம்மை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. தூய தமிழ் வடிவம் ஒன்றாக இருக்கையில் பேச்சில் பயன்படுத்தப்பட்ட அதன் கொச்சை வடிவத்தையே எழுத்து வரைக்கும் எடுத்துச் சென்று பயன்படுத்துவோம். திரைப்பாடல்களில் இந்தப் போக்கு முதலில் தலை தூக்கிற்று. ஆயிற்று, போயிற்று என்று அவர்கள் எழுதவே இல்லை. ஆச்சு, போச்சு என்ற பேச்சு வழக்கினையே பாடல்களில் பயன்படுத்தினார்கள். பிற சொற்கள் அனைத்தையும் எழுத்து வழக்கப்படி எழுதிவிட்டு இடையிடையே ‘ஆச்சு, போச்சு’ என்று எழுதிச் செல்வார்கள். அதற்கும் ஒரு படி மேலே சென்று ஆச்சுது, போச்சுது என்றும் எழுதினார்கள்.

 

 

ss

 

 

எழுத்தின் திருத்தமான வழக்கு ஒன்றாக இருக்கையில் பேச்சில் அதனைச் சற்றே திரித்துச் சொல்வோம். பேச்சு முறையின் வழுக்கல் போக்கில் ஒரு சொல் அவ்வாறு அசை விடுபட்டோ, ஈற்றொலி விடுபட்டோ, இடையோசை மருவியோ ஒலிக்கும்தான். அந்தத் தன்மைகளால் ஏற்படும் நிலையைத்தான் கொச்சை என்கிறோம். ‘பாடடி’ என்பது தூய வழக்கானால் ‘பாடுறி’ என்பது கொச்சை வழக்கு. ‘வந்துவிட்டான் ஐயா” என்பது தூய வழக்கானால் “வந்துட்டான்யா” என்பது கொச்சை வழக்கு.

 

 

தமிழ் இலக்கணம் இத்தகைய சில நிலைமைகளைக் கருத்தில்கொண்டு கூறுகிறது. அவ்வாறு ஒரு சொல்லின் ஒலிப்பில் ஏற்படும் மாறுதலைப் ‘போலி’ என்று வகுத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஞகர வரிசை எழுத்துகள் ஒரு சொல்லின் முதலெழுத்தாக வருகையில் ஞகரம் நகரமாக ஒலிப்பது இலக்கணப்போலி ஆகும்.

 

ஞெகிழ்ந்தது என்பதுதான் தூய தமிழ்ச்சொல் வடிவம். அதனை நெகிழ்ந்தது என்று நாம் கூறுகிறோம். அவ்வாறே எழுதுகிறோம். இங்கே ஞெ என்ற எழுத்துக்குப் போலியாக நெ வந்தது. இது பிழையில்லை. ஆனால், ‘ஞாயிறு’ என்ற சொல்லை ‘நாயிறு’ என்று பேச்சு வழக்கில் கூறுவது அரிதுதான். பெரும்பாலானோர் ‘ஞாயிறு’ என்றே பேச்சிலும் கூறுகிறார்கள். அவ்வாறே எழுத்திலும் ஆள்கிறோம். 

 

‘பிளாஸ்டிக்’ என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லாக ‘ஞெகிழி’யைக் கூறினர். ஞெகிழி இல்லை, நெகிழிதான் சரியென்றனர் சிலர். இதுவும் ஞெகிழ்ந்தது, நெகிழ்ந்தது போன்ற வழக்குத்தான். ஞெகிழி என்பதே மூத்த தமிழ்ச்சொல். அதன் போலிப்பயன்பாடாக நெகிழ் வந்தது. இப்போது நெகிழ் நிலைத்துவிட்டது. ஞெகிழ் அரிதாகிவிட்டது. இவ்வொரு சொல் மட்டுமில்லை, ஞகரத்தில் இருந்த சொற்கள் பலவும்  போலியுருப்பெற்று நிலைத்துவிட்டன. ஞாண் என்பது நாண் ஆகியிற்று. ஞண்டுதான் நண்டு. ஞமன் என்பவன்தான் நமன். பின்பு அவன் எமன் ஆகிவிட்டான். நாடு என்பதற்கு ‘ஞாடு’ என்ற சொல்லும் பயின்றிருக்கிறது. ஞிமிர்தல் என்பதுதான் ‘நிமிர்தல்’ ஆகிவிட்டது.

 

 

ss

 

ஞேயம் என்ற சொல்லை நாம் கேள்வியுற்றிருக்க மாட்டோம். ஞேயம் என்றால் அன்பு. அந்தச் சொல்தான் பிற்காலத்தில் ‘நேயம்’ என்று ஆனது. நேயம் என்ற சொல்லினைக்கூட எல்லாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ‘நேசம்’ என்று கூறினால் அனைவர்க்கும் விளங்கிவிடும். இங்கே மேலும் ஓர் இலக்கணப்போலி எழுத்து உள்ளே வருகிறது. சொல்லுக்கு இடையில் வரும் யகர ஒலியானது சகர ஒலியாகத் திரியும். அதனால்தான் ‘தேயம்’ என்ற தூய தமிழ்ச்சொல் ‘தேசம்’ ஆனது.  

 

ஞகரத்துக்கு நகரம் பெற்று உருவான ‘நேயம்’ என்னும் சொல், யகரத்துக்குச் சகரம் பெற்று ‘நேசம்’ ஆகிவிட்டது. அடையாளமே தெரியவில்லை. வானொலி நிலையம் இருந்தவரைக்கும் ‘நேயர்கள்’ இருந்தார்கள். ஞேயம் நேயம் ஆனதற்கு இலக்கணத் துணை இருக்கிறது. அதற்கும் மேற்பட்டுத் திரிந்தபோது இலக்கணம் உடன்வருவதில்லை. நாம் பிழைப்பயன்பாடுகளைத் தூக்கிச் சுமக்கிறோம். ’தமிழ் நேயம்’ என்ற இதழைக் கோவை ஞானி வெளிக்கொணர்ந்தார். தமிழாய்வில் ஈடுபட்டிருந்த பெரியவர் பெயர் ‘தேவ நேயப் பாவாணர்’. 

 

நேயம் நேசம் ஆன பிறகு நேசித்தான் என்று எழுதினார்கள். ‘நேசி’ என்று கவிதையில் கெஞ்சினார்கள். நேசித்தான் என்ற சொல்லை அதன் தூய வடிவத்திற்கு மாற்றினால் ஞேயித்தான் என்று வருகிறது. நேசி என்ற ஏவல் வினையை ஆக்க முடிந்தமையால் அதனை ‘நேசிப்பு’ என்று தொழிற்பெயராக்க முனைந்தார்கள். நேசித்தான், வாசித்தான், பூஜித்தான், பிரகாசித்தது, ஜொலித்தது, தீர்மானித்தான் என எழுதுகிறீர்கள் என்றால் நீங்கள் பிற்காலத்தில் தோன்றிய பிழை வழக்குகளை அடியொற்றுகிறீர்கள் என்று பொருள். ஏனென்றால் ஒரு சொல்லின் வேர் வேறாக இருக்கையில் அதன் பிழை வழக்குகளை அறியாமல் எடுத்தாள்கிறோம். ஞேயம் என்பதனை நேயம் என்று பயன்படுத்துவதுதான் வரம்பு. அதனை நேசம், நேசித்தான், நேசிப்பு, நேசன் எனல் பிழை வழக்குகள் ஆகும். 

 

முந்தைய பகுதி:


பூ என்பதும் சொல்தான், கு என்பதும் சொல்தான் - அவற்றுக்கு என்னென்ன பொருள்கள் தெரியுமா...? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 26

 

அடுத்த பகுதி:

 ஒருநாளா ? ஒரு நாளா ? ஒருமுறையா ? ஒரு முறையா ? கவிஞர். மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 28

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

மிஸ் பண்ணிடாதீங்க

This block is broken or missing. You may be missing content or you might need to enable the original module.

சார்ந்த செய்திகள்