தான் சந்தித்த வழக்கில் ஒரு சைக்கோ போல நடந்து கொண்ட காதலன் குறித்த வழக்கு பற்றி நம்மிடம் முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.
முன்பெல்லாம் காதல் என்பது அனைத்து கடமைகளையும் முடித்த பிறகு செய்யும் ஒரு விஷயமாக இருந்தது. இப்போது வாழ்க்கையே என்னவென்று தெரியாத பிள்ளைகளுக்கும் காதல் வருகிறது. மூன்று நான்கு பேரைக் காதலித்த பிறகு தான் பலர் திருமணத்திற்கே வருகின்றனர். ஒரு தாய் நம்மிடம் வந்தார். தன்னுடைய மகளுக்கு ஒரு தொடர்பு இருக்கிறது என்றும் அதை நாங்கள் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்றும் கூறினார். ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னுடைய பெண்ணுக்கு ஒரு காதல் இருந்திருக்கிறது என்றும் அவளைத் தாங்கள் மீட்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அவருடைய பெண் தற்போது ஒரு ஆபீஸில் கடைநிலை ஊழியராக வேலை செய்து வரும் ஒரு பையனைக் காதலித்து வந்தார். பிளஸ்டூ படித்து வந்த அந்தப் பெண், தன்னுடைய பள்ளி சுற்றுலாவுக்கு சென்றார். அந்த நேரத்தில் அவளுடைய காதலன் அவளை யாருடனும் பேசக்கூடாது என்று சைக்கோ போல் அதிகம் டார்ச்சர் செய்ததால் அவனிடமிருந்து காப்பாற்றுமாறு தன்னுடைய தந்தையிடமே சென்று அந்தப் பெண் சொல்லிவிட்டாள். இப்போது அவளுடைய தந்தை மற்றும் தாய் புதிதாக என்னிடம் வருவது போல வந்தனர். போலீஸ் புகார் மூலம் இதை டீல் செய்யலாம் என்று நான் கூறினேன்.
அந்தப் பையனை நாங்கள் பின்தொடர ஆரம்பித்தோம். அவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுடைய உறவினர் ஒருவர் அதிகாரமிக்க இடத்தில் இருந்தார். போலீஸ் ஸ்டேஷனுக்கு நாங்கள் சென்ற போது அவரும் அங்கு வந்தார். அந்தப் பெண்ணுக்கு விருப்பமில்லை என்பதால் இனி அவளைத் தொடர்பு கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தினோம். அந்தப் பையனும் ஒப்புக்கொண்டு இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு அந்தப் பெண் நன்றாகப் படித்து, திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்.
சில பல காதல்களுக்குப் பிறகு தான் காதல் என்றால் என்னவென்றே அனைவரும் புரிந்துகொள்கின்றனர். பல காதல்கள் என்பது தான் இன்றைய டிரெண்டாக இருக்கிறது. பொதுவாகவே நாங்கள் பெற்றோர் மூலமாகத்தான் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்போம். எங்களுடைய காலத்தில் வருமானத்துக்கு தகுந்தது போல் வாழச் சொல்லிக் கொடுத்தனர். இன்று திருமணமான உடனேயே பணக்கார வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கு வந்துவிட்டது. அதனால் திருமணத்துக்கு முன்பே பல்வேறு கட்டளைகளை விதிக்கின்றனர்.