மகளுக்கு செக்ஸ் எஜுகேஷன் அதிகமாக கொடுத்ததால், படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளிய அப்பாவுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
கணவர், மகளிடம் செக்ஸ் எஜுகேஷன் பற்றியும், பியூபர்டி எஜுகேஷன் பற்றியும் பேசுவது தனக்கு பிடிக்கவில்லை என்று அம்மா என்னிடம் வந்து சொன்னார். அப்பாவுக்கு இதை பற்றி தெரிந்திருப்பதால் மகளிடம் அந்த எஜுகேஷன் பற்றி பேசுவது தவறு ஒன்றும் கிடையாது என்று புரியவைத்து சொன்னேன். அம்மாவின் கோரிக்கை வைத்ததன் பேரில், அந்த குழந்தையிடம் பேச ஆரம்பித்தேன். அந்த பெண் 12ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறாள்.
அப்பா தனக்கு எல்லாவிதமாக எஜுகேஷனும் சொல்லி கொடுத்ததாக அந்த பெண் சொன்னார். பியூபர்ட்டி நேரத்தில் தன்னை விட அதிக வயதுடைய ஆணை பார்க்கும்போது ஒரு ஈர்ப்பு வந்ததை தன் அப்பாவிடம் சொல்லியதாகவும், அதற்கு அவர் தகுந்த எஜுகேஷனும் கொடுத்தார் என்று சொன்னார். இப்படியே நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே, அப்பா பேசுவது இப்போது எல்லாம் தனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னாள். ஏனென்று கேட்டதற்கு, 24 மணி நேரமும் அப்பா அதை பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டிருக்கிறார். தம்பி, தாத்தா, பக்கத்து வீட்டு பையன் என யாரிடம் பேசினாலும் அதை பற்றி மட்டுமே அப்பா பேசிக்கொண்டிருக்கிறார். பெண் குழந்தையை பெற்றதால் அப்பாவுக்கு இருக்கும் அந்த பயம், ஒரு கட்டத்தில் அதீத பயமாக அவருக்கு வந்திருக்கிறது. இந்த எஜுகேஷன் எல்லாம், வயதிற்கேற்றார் போல் சொல்ல வேண்டும். அதே சமயம், அதை பற்றி அதிக அளவிலும் சொல்லக்கூடாது. இதை பற்றி அப்பா அதிகம் பேசிக்கொண்டிருப்பதால், அப்பா தன் கூட இல்லை என்றாலும் பரவாயில்லை, படிப்பில் தன்னால் கவனம் செலுத்த முடியவில்லை என்று சொன்னாள்.
இதையடுத்து, அப்பாவிடம் பேசினேன். ஒரு அப்பாவாக இதை பற்றியெல்லாம் மகளுக்கு எஜுகேஷன் கொடுத்ததற்கு அவரை பாராட்டினேன். ஆனால், அதை பற்றியே ஓவராக பேசக்கூடாது என்றேன். அந்த சிறுமி, என்னிடம் சொன்னதை அவரிடம் எடுத்துக் கூறினேன். செக்ஸ் எஜுகேஷன் பற்றியே அடிக்கடி பேசுவதால், மகளுக்கு எப்போதும் அது பற்றியே தான் தோன்றக்கூடும். படிக்க ஆரம்பித்தால் கூட அப்பா பேசுவது தான் அவளுக்கு நியாபகம் வருகிறது என்று சிறுமி சொன்னதை அவருக்கு சொல்லி புரியவைத்தேன். இந்த விஷயத்தில் குழந்தை சரியாக இருக்கிறாள். இனிமேல், அந்த பெண் தானாக வந்து கேள்வி கேட்டால் மட்டும் அதற்கு பதிலளியுங்கள் என்றேன்.