குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
அன்வர் என்பவருடைய வழக்கு இது. ரொம்ப தங்கமான பையன், தன்னுடைய மதத்தின் ஒழுக்கங்களையெல்லாம் பின்பற்றி வாழுகிற சாதாரணமானவர். மிடில் கிளாஸ் வாழ்க்கையில், சந்தோஷமாக தன் குடும்பந்துடன் வாழ்ந்து வந்தார். அவர் வேலை செய்யும் அலுவலகத்தில், ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு இவரை ரொம்ப பிடித்துபோக தன் காதலை பலமுறை அன்வரிடம் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் இதை அன்வர் விளையாட்டாக கடந்து சென்றுள்ளார். ஆனால், அவள் தன் காதலை தீவிரமாக வெளிப்படுத்தியதன் காரணமாக அன்வருக்கு, அந்த பெண்ணை ஒரு கட்டத்தில் பிடித்துப் போகிறது. இருப்பினும், வேறு வேறு மதம் என்பதால், இந்த திருமணம் சரிபட்டு வருமா? என்ற கேள்வியும் அன்வருக்கு இருந்திருக்கிறது. ஆனால் அந்த பெண் அன்வர் மீது பாசம் காட்டி, வெவ்வேறு மதத்தை சேர்தவர்கள் கல்யாணம் பன்ணி சந்தோஷமா இருந்தது இல்லையா என்று சில முன்னுதாரணங்களை கூற, அன்வரும் இந்த மாதிரி பெண் மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று அந்த பெண்ணின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார்.
இதையடுத்து இருவரது காதலையும் தங்களின் வீடுகளில் சொல்ல முயற்சி செய்கிறார்கள். அந்த பெண் வீட்டில் அப்பாவும் அம்மாவும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், அம்மா வீட்டில் இந்த பெண் வசித்து வந்தாள். அப்போது தன்னுடைய அம்மாவை சந்திக்க அன்வரை வீட்டிற்கு அழைக்க, அங்கு அந்த பெண்ணின் அம்மா அதிகார தோணியில் பேசியுள்ளார். இது ஒத்துவராது என்று அங்கிருந்து அன்வர் கிளம்ப அந்த பெண், அன்வரை சமாதானப்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, அன்வர் வீட்டிற்கு அந்த பெண் வந்து அன்வர் அம்மாவிடம், அன்வருடனான தனது காதலை கூறியுள்ளார். இதற்கு அன்வர் அம்மா மதங்களை காரணம் காட்டி மறுத்துள்ளார். தன் பிடியில் இருந்த விலகாத அந்த பெண் காதலுக்காக மதம் மாறுவதில் எனக்கும் சந்தோஷம்தான் என்று கூறியுள்ளார். இதையடுத்து அன்வரின் உறவினர்கள் அந்த பெண்ணை மதத் தலைவர்கள் சிலரிடம் அழைத்து சென்று பேச வைத்துள்ளனர். அப்போதும், இந்த பெண் காதலுக்காக மதம் மாற தயார் என்று பிடிவாதமாக சொல்லிவிடுகிறாள்.
அதன் பிறகு, அந்த பெண் தன் அம்மாவிடம் நடந்ததை கூற, தனது மகளை திட்டி அனுப்பி விடுகிறார். பின்பு, அந்த பெண் அன்வர் வீட்டில் வந்து தங்கி விடுகிறார். கல்யாணத்திற்கு முன்பு இப்படி வீட்டில் தங்குவது தவறு என்று அந்த பெண்ணின் அப்பாவிடம் அன்வரின் குடும்பத்தார் சொல்லி அந்த பெண்ணை அவளது அப்பா வீட்டில் தங்க வைத்துள்ளனர். இதையடுத்து, அந்த பெண் மதம் மாறி ஒரு நல்ல நாளில் அன்வரை திருமணம் செய்துகொள்கிறார். பின்பு சந்தோஷமாக இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். சில மாதங்களுக்கு பிறகு அந்த பெண்ணின் நடவடிக்கை மாற ஆரம்பித்தது. மாமியார் அதிக வேலை வாங்குவதாகவும், பிடித்த ஆடையை அணிய விடாமல் தடுத்ததாகவும் அன்வரிடம் குறை கூறிக்கொண்டே இருந்தாள். அதற்கு, அன்வர் அந்த நேரத்தில் மனைவியை சமாதானப்படுத்தியுள்ளார்.
இப்படியே நாட்கள் செல்ல செல்ல, ஒரு நாள் அந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறி தனது அம்மா வீட்டிற்கு சென்றிருப்பதை அவளுடைய அப்பா மூலம் அன்வருக்கு தெரியவருகிறது. இதையடுத்து, அன்வர் தனது மாமனாருடன் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியுடன் சமாதானம் பேசினாலும் அவள் வர மறுக்கிறாள். அதனால், அன்வர் கூறியதன் பேரில், அவள் தனது அப்பா வீட்டில் சில நாட்கள் தங்கி வருகிறாள். சில நாட்களுக்கு பிறகு அன்வரின் மனைவி விவாகரத்து கொடு இல்லையென்றால் தனியாக வந்து என்கூட வாழு என்று அன்வரிடம் கூறியுள்ளார். இதை புரிந்துகொண்ட அன்வரின் வீட்டார் தனிக்குடித்தனத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். இருந்தும் மனைவியையும் பிரிய மனமில்லாமல், அப்பா அம்மாவையும் பிரிய மனமில்லாமல் வருத்தத்துடன் அன்வர் ஒப்புக்கொள்கிறார். அதன் பிறகு, அன்வர் தன்னுடைய வீடு இருக்கும் தெருவிலேயே வாடகை வீடு பார்க்க ஆரம்பித்துள்ளார். இது அவரது மனைவிக்கு பிடிக்காமல் விவாகரத்து வேண்டும் என்று அவள் உறுதியாக சொல்லி விடுகிறாள்.
இந்த சூழலில்தான் அன்வர், மனைவியும் வேண்டும் குடும்பமும் வேண்டுமென்று என்னிடம் வருகிறார். அவர் சொன்னதை ஆவணப்படுத்தி ஒரு பெட்டீசன் போட்டு அவரது மனைவிக்கு சேர்ந்து வாழ நோட்டீஸ் அனுப்பினோம். நோட்டீஸை பார்த்த பிறகு அன்வரிடம் வந்து, தன்னை கட்டாயமாக மதமாற்றி திருமணம் செய்துவிட்டதாக வாக்குவாதம் செய்து விவாகரத்து கேட்கிறாள். அதன் பின்பு அன்வர் தன் மனைவியிடம் பேச முற்பட்டது எல்லாமே ரகளையில் முடிந்தது. இருப்பினும் தன் மனைவியிடம் சேர முயற்சி செய்த அன்வருக்கு ஏமாற்றம்தான் வந்தது. இதை அன்வர் தன் அப்பாவிடம் சொல்லி அழுக, இதை கேட்டு அவரின் அம்மா படுத்தபடுக்கையாக ஆகிவிடுகிறார். அதன் பிறகு விவாகரத்துக்கு நாங்களே பெட்டீசன் போட்டு விவாகரத்து ஏற்பாடு செய்தோம். அந்த வழக்கு முடிவதற்குள் ஒரு நாள் அன்வர் என்னிடம் வந்து அம்மா இறந்துவிட்டார் என்று சொன்னார். இருவரும் சேர்ந்து வாழ வேண்டும்மென்று அன்வரின் அம்மாவும் ஆசைபட்டார். ஆனால், அந்த பெண் உறுதியாக இருந்ததால், இஸ்லாமிய மதமுறைப்படியும், சட்டப்படியும் இருவருக்கும் மியூட்ச்சுவல் கன்செண்டில் விவாகரத்து ஆனது.