திருமணத்தை மீறிய உறவினால் வந்த சிக்கல் பற்றிய வழக்கை பற்றி நம்மிடையே வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.
வல்லரசு என்பவரைப் பற்றிய வழக்கு இது. எளிய குடும்ப பிண்ணனியிலிருந்து மீடியா கனவுகளோடு சென்னை வந்தவர். அது சார்ந்த வேலைகளில் முன்னேறிக் கொண்டு வந்தவர், ஏழ்மையான குடும்பத்திலிருக்கிற பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அந்த பெண்ணுக்கு இருக்கிற கவிதை எழுதுகிற திறமை, நன்றாக மேடைகளில் பேசுவது போன்றவற்றை இவருக்கு தெரிந்த நட்புகளின் மூலமாக வளர்த்து எடுக்கிறார். நிறைய மேடைகளையும் பேச அமைத்துக் கொடுக்கிறார்.
குழந்தை பிறந்ததும் அவளுடைய நடவடிக்கைகளில் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. குழந்தையை கவனிக்காமல் தொடர்ச்சியாக மீட்டிங் என்று முக்கியத்துவம் தந்து வெளியே செல்கிறார். அடிக்கடி வீட்டிற்கு போன் அழைப்பு வந்தால், வெகு நேரம் தனியே சென்று பேசுகிறாள். உடன் வாழ்கிறவளின் செயல்பாடுகளில் வித்தியாசத்தை உணர்ந்த வல்லரசு அந்த பெண்ணிடம் விசாரிக்கிறார். பட்டிமன்றப் பேச்சுக்காக நிறைய விவாதிப்பதாக பொய் சொல்கிறாள்.
இவளுடைய போனை ஒருமுறை பரிசோதித்த போது தொடர்ச்சியாக ஒரே எண்ணிலிருந்து அதிக முறை அழைப்பு வந்திருக்கிறது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டபோது, எதிர்முனையிலோ அதிகார தொனியோடு, மிரட்டும் பாவனையில் பேசுகிறார்கள். சிலநாட்கள் கழித்து மூன்று நாட்கள் மீட்டிங் செல்வதாக சென்றவள் வீடு திரும்பவே இல்லை
வீட்டை பரிசோதித்த போது வீட்டிலிருந்த நகை, பட்டு சேலைகள் அனைத்தும் எடுத்துக் கொண்டு சென்று விட்டாள். வெகுநாட்களாக தேடியதும் கிடைத்தவள், சென்னைக்கு வர மறுக்கிறாள். அதனால் அவனுடைய ஊரில் தன் அம்மாவோடு கொஞ்ச நாள் விட்டு வருகிறான். ஆனால் அங்கேயும் சண்டையிட்டு எங்கேயோ சென்று விடுகிறாள்.
மறுபடியும் தேடி அலைந்து கண்டறிந்து குழந்தையைப் பார்க்க போன போது, அக்கம் பக்கத்தினர் அவளைப் பற்றிய சில விசயங்களை சொல்கிறார்கள். அவளுடைய வீட்டிற்கு இரவு ஒரு கார் வரும். அதிலிருந்து இறங்குகிறவர் இரவு அங்கே தங்குவார், காலையில் கிளம்பி விடுவார். அந்த நேரத்தில் குழந்தைக்கு மயக்க மருந்தோ அல்லது தூக்க மாத்திரையோ கொடுத்து தூங்க வைத்துவிடுகிறாள் என்று விவரிக்கிறார்கள். இதனால் மனமுடைந்த வல்லரசு, காவல்துறையில் தன்னுடைய மகளை மீட்டுத்தருமாறு வழக்கு தொடுக்கிறார். அத்தோடு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெறுகிறார்.