Skip to main content

குழந்தை பெற மறுத்த பெண்; கண்ணீர் விட்ட கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 32

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

 advocate-santhakumaris-valakku-en-32

 

கணவனை கண்ணீர் விட வைத்த பெண் குறித்த வழக்கு பற்றி குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.

 

மணவாளன் என்கிற பையனுடைய கதை இது. அவன் மிகவும் அப்பாவியான ஒருவன். பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் அவனுக்கு நடைபெற்றது. அவன் குள்ளமாகவும் கருப்பாகவும் இருந்தான். அதனால் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவனுக்கு பெண் கிடைத்து திருமணம் நடைபெற்றது. பெண்ணுக்கு அவனைப் பிடிக்கவில்லை. ஆனாலும் வீட்டில் அவன் ஒரே பையன் என்பதால் அதைச் சொல்லி அவளை சம்மதிக்க வைத்தனர் பெற்றோர். திருமணம் நடைபெற்றது. 

 

அவள் ஆடை உடுத்தும் விதமே வித்தியாசமாக இருந்தது. அதுபற்றி அவன் கேட்டபோது அவளுடைய தாயிடம் அதை அவள் தெரிவித்தாள். அவளுடைய தாய் மாப்பிள்ளைக்கு கால் செய்து கோபமாகப் பேசினார். அவன் சமாதானமானான். தன்னுடைய தாய்க்கு அவள் எந்த உதவியும் செய்வதில்லை என்பதை அவன் கவனித்தான். தன்னால் அப்படி செய்ய முடியாது என்று அவள் கூறினாள். இங்கு இவன் என்ன சொன்னாலும் பதிலுக்கு அவளுடைய தாயிடமிருந்து போன் மூலம் மிரட்டல் வந்தது. அவனிடம் அவனுடைய மாமியார் மரியாதை இல்லாமல் பேசினார்.

 

மாமனாரிடம் இதுகுறித்து புகார் கொடுத்தாலும் எந்தப் பயனும் இல்லை. அவளுக்கு அருகில் கூட அவனால் நெருங்க முடியவில்லை. வீட்டில் உள்ள அனைவரிடமும் மரியாதை குறைவாக அவள் நடந்துகொண்டாள். கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று கூட மிரட்டினாள். போலீசிடம் சென்று அவன் புகார் கொடுத்தான். விசாரணைக்கு வந்த அவனுடைய மனைவியும், மாமியாரும் அவன் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர். அவளை சமாதானப்படுத்தி, அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

 

அதன் பிறகும் அவன் மீதான வன்மம் அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது. குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் அவள் தயாராக இல்லை. தன்னுடைய அழகு கெட்டுவிடும் என்று அவள் நினைத்தாள். எந்த வகையிலும் அவனுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் நிம்மதி கிடைக்கவில்லை. அதன் பிறகு அவன் நம்மை வந்து சந்தித்தான். அவனுடைய பெற்றோர் கதறி அழுதனர். தன்னுடைய வாழ்க்கைக்கு அவள் சரியானவள் அல்ல என்று அவன் கூறினான். விவாகரத்து பெற வேண்டும் என்று விரும்பினான். நாங்கள் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தோம்.அவனுடைய வீட்டைத் தன் பெயரில் எழுதி வைக்க வேண்டும், அவனுடைய சொத்துக்கள் தனக்கு வேண்டும் என்று அவள் கேட்டாள். தான் கொடுக்க வேண்டிய ஜீவனாம்சத்தை மட்டும் அந்தப் பையன் அவளுக்கு வழங்கினான். இந்தப் பெண்ணிடமிருந்து தனக்கு விடுதலை வேண்டும் என்று நினைத்த அவனுக்கு நீதிமன்றம் மூலம் விவாகரத்து எனும் விடுதலை கிடைத்தது.