Skip to main content

என் மகனை சேர்த்துக்கொள்ள மறுத்த மணிரத்னம்! - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #11 

Published on 30/09/2018 | Edited on 13/08/2020

 

ramesh kanna sobha old


'செக்கச் சிவந்த வானம்' படம் வெளிவந்தப்போ, 'மணிரத்னம் இஸ் பேக்', 'மணி சார்' கலக்கிட்டார்... இப்படி இப்போ உள்ள இளைஞர்கள் எல்லாம் மணிரத்னம் சாரை கொண்டாடுனாங்க. இத்தனைக்கும் இவர்கள் மணிரத்னத்தின் கோல்டன் பீரியடைப் பார்த்து அனுபவிக்காதவர்கள். யூ-ட்யூபிலும் டிவிடிக்களிலும் பார்த்தவர்கள். நாங்க திரைத்துறையினரா அவரை இருபத்தஞ்சு வருஷமா கவனித்து வருபவர்கள். சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்ல சினிமாவுக்குள்ளும் கூட இளைஞர்கள் பலருக்கு மணிரத்னம்தான் ஆதர்சம், முன்னோடி, மோட்டிவேஷன், இன்ஸபிரேஷன் எல்லாம். என் பையனுக்கும் அப்படித்தான். சொல்லவே இல்லைல? எனக்கு ரெண்டு பசங்க... மூத்த பையன் ஜஸ்வந்த் கண்ணன், இளையவன் பிரஜீஷ் திவாகரன். இதில் பிரஜீஷுக்கு மணிரத்னம்தான் இன்ஸ்பிரேஷன்.

 

நான், சினிமாவை கனவாகக் கொண்டு, அதைத் துரத்திக் கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. இதோ வந்துருச்சு, இதோ வந்துருச்சுன்னு ஏமாற்றி சிறுவனான மகனை நடக்க வச்சு வீட்டுக்குக் கூட்டிப் போற ஏழைத் தந்தை போல என்னைக் கூட்டிப் போனது சினிமா. உண்மையிலேயே ரொம்ப தூரம் அது. அதைக் கடந்துதான் வந்தேன். கடந்த பின்னர் எல்லா வலியும் காமெடி ஆகிடும். இப்போ அப்படித்தான் எனக்கும். நான் ஸ்கூல் படிக்கும்போதிருந்தே நாடகம், நடிப்பு, பாட்டுலதான் என் கவனமே இருந்தது. ஆனால், என் மகன்கள் இருவரையும் நல்லா படிக்க வைக்கணும்னு நானும் என் மனைவி ஷோபாவும் முடிவு பண்ணியிருந்தோம்.

 

ஏவிஎம் ஸ்கூலில் படிச்சாங்க, முடிச்சுட்டு ரெண்டு பேருமே என்ஜினியரிங் படிச்சாங்க. இன்னொரு பக்கம் நான் நடிப்பில் பிசியாகி ஓடிக்கிட்டே இருந்தேன். அப்பப்போ நினைச்சுக்குவேன், 'பசங்க படிச்சு முடிச்சு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்குப் போய் வெளிநாடு போய்ட்டா, நாமளும் வயசானதுக்கு அப்புறம் ரெண்டு பசங்க வீட்டுக்கும் போய் மாற்றி மாற்றி இருக்கலாம்'னு. அமெரிக்காவா ஆஸ்திரேலியாவான்னுதான் யோசிப்பேன். அதுக்கேத்த மாதிரியே ரெண்டு பசங்களும் படிச்சு முடிச்சு 'விப்ரோ' நிறுவனத்தில் சேர்ந்தாங்க. பெரியவனுக்கு அமெரிக்கா வாய்ப்பும் வந்தது. ஆனால், இந்த இடத்தில் நாம் ஒன்றை  மறக்கலாமா? வாழ்க்கையில இதுவரைக்கும் எனக்கு ஏதாவது ஒன்னு நினைத்தது போல எதிர்பார்த்த நேரத்தில் நடந்திருக்கா? இல்லைல? அப்புறம் இதை எப்படி எதிர்பார்க்கலாம்?



 

ramesh kanna family


 

மூத்த மகன் ஜஸ்வந்த் கண்ணன் வந்தான். "அப்பா நான் வேலையை ரிசைன் பண்றேன்"னு சொன்னான். "ரிசைன் பண்ணிட்டு?"னு கேட்டேன். "சினிமாவுக்கு வர்றேன்"னான். "நடிகன் ஆவதெல்லாம் ஈஸின்னு நினைக்கிறியா? அதுக்கெல்லாம் பல விஷயங்கள் ஒத்து வரணும்"னு சொன்னேன். நான் பழசை மறக்க முடியுமா?  "பதினஞ்சு வருஷம் ஆச்சுடா நான் ஸ்க்ரீன்ல தலை காட்ட", எப்படியாவது அவன் முடிவை மாற்ற முயன்றேன். "நான் நடிக்கல, டைரக்டர் ஆகணும். அஸிஸ்டண்ட்டா சேர்த்துவிடுங்க" என்றான். எனக்கு ஒன்னும் புரியவில்லை. நான் பட்டதையேதான் இவனும் படணுமான்னு ஒரு பக்கம் கேள்வி. இன்னொரு பக்கம் நமக்கு இல்லாத பல வசதிகள் அவனுக்கு இருக்கு. நாம வெற்றிகரமா படம் இயக்கணும்னு நினைச்சோம். ஒரு படத்துடன் அந்தப் பயணம் திசை மாறிடுச்சு. ஆனால், அவனுக்கு உதவ நாம இருக்கோமே? நினைச்சதை பண்ணட்டும் என்று இன்னொரு பக்கம் பதில். பையன் அவுங்க அம்மாகிட்ட ரொம்ப பிடிவாதமா சொல்லி வேலையையும் கூட விட்டுட்டான்.



 

rk family

பிரஜீஷ் திவாகரன் - ஷோபா - ரமேஷ் கண்ணா - ஜஸ்வந்த் கண்ணன்


 

"சரி வா"னு நேரா ஏ.ஆர்.முருகதாஸ்கிட்ட கூட்டிட்டுப் போனேன். அவனை அறிமுகப்படுத்தி அவனது விருப்பத்தை சொன்னேன். "உங்களுக்கு பண்ணாமலா" என்று ஆவலாக ஏற்றுக்கொண்டார் முருகதாஸ். அதே நேரம் அவர் படம் ஏற்கனவே தொடங்கிடுச்சு. அதுனால தனது உதவி இயக்குனராக இருந்து இயக்குனராகி 'மான் கராத்தே' படம் ஹிட் கொடுத்திருந்த திருகுமரனின் இரண்டாவது படமான 'கெத்து' படத்துல வேலை பார்க்கும் வாய்ப்பை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். அந்தப் படம் முடிந்து முருகதாஸே இயக்கிய ஸ்பைடர் படத்தில் தன் உதவி இயக்குனராகப் பணிபுரிய அழைத்துக்கொண்டார்.

 

அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது என் மகன் ஜஸ்வந்த்துக்கு பிறந்த நாள் வந்தது. ஃபேஸ்புக்ல ஒரு ஃபோட்டோ... என்னனு பார்த்தா மகேஷ் பாபு அவனுக்கு கேக் ஊட்டுறார். நான் அவரை நேரில் பார்த்ததே இல்லை. சரி, மகன் ஓரளவு பாதுகாப்பான பாதையில் முன்னோக்கிதான் போறான் என்ற நம்பிக்கை வந்தது. 'சர்கார்' படத்திலும் வேலை பார்த்தான். கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யத் தொடங்கினோம். 'சர்க்கார்' முடிஞ்சாதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டான். நான் முதல் படம் இயக்கிவிட்டுதான் கல்யாணம் பண்ணுவேன் என்று இருந்தேன். ஆனா, அப்படி எதுவும் நடக்கல. சரி, இதையாவது நடத்துவோமேன்னு குடும்ப வாழ்க்கையில் நுழைந்தேன். நம்ம பையனும் நம்மைப் போலத்தான் சிந்திக்கிறான். சர்க்கார் ஷூட்டிங்கெல்லாம் முடிஞ்சது. திருமணமும் நடந்தது. திருமணம் ட்விட்டரில் ட்ரெண்டானது. எப்படி தெரியுமா? திருமணத்துக்கு தளபதி விஜய் வந்தார். ஆமா... அந்த அளவுக்கு அவரோட அன்பைப் பெற்றுவிட்டான் பையன். ரொம்ப சந்தோஷமா இருந்தது.



 

sarkar team

 

             சர்க்கார் டீமில் ஜஸ்வந்த்


 

பெரிய பையனின் வழி சரியாக இருக்குன்னு சந்தோஷப்படும்போதே, சின்ன மகன் பிரஜீஷ் திவாகரனும் 'நான் வேலையை விடுறேன்'ன்னு சொன்னான். என்னடா இதுன்னு கொஞ்சம் டென்சன் ஆயிடுச்சு. ஆனாலும் அவுங்க பிடிவாதம் உறுதியானது. அண்ணனைப் பார்த்து வந்த வெற்றுப் பிடிவாதமல்ல அது என்று பின்னாடி தெரிஞ்சுகிட்டேன். "என்னை மணி சார்கிட்ட சேர்த்துவிடுங்க"னு சொன்னான். "என்னது மணிரத்னமா? அப்படியெல்லாம் உடனே சேர்க்க மாட்டார், எனக்கெல்லாம் தெரியாது" என்றேன். எங்கள் படங்களைப் போலவே கே.எஸ்.ரவிக்குமார் - மணிரத்னம் டீம்களின் வேலை பாணி, அணுகுமுறை எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனாலும் மணிரத்னம் என் நண்பர்.

 

ஃபெஃப்ஸி தொழிலாளர்கள் போராட்டத்தின் போது இயக்குனர்கள் எல்லாம் ஒன்னாதான் இருந்தோம். நான் அங்க எல்லா ஏற்பாடுகளிலும் முன்னாடி நிப்பேன். இயக்குனரா என் முதல் படம் அந்த ஸ்ட்ரைக்கால் நின்றது. ஆனாலும் ஸ்ட்ரைக்ல முழுமையா இறங்கி வேலை செய்தேன். ஷூட்டிங் நடக்காததால் நாங்க எல்லோரும், டெய்லி போராட்டம் நடக்கும் இடத்துக்குப் போய் பேசுவோம், பேசுவோம், பேசிக்கிட்டே இருப்போம். பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர்னு எல்லோரும் அங்கதான். என் கூட இருக்கவங்க சிரிச்சுகிட்டே இருப்பாங்க. மணிரத்னம் அதிகம் பேசமாட்டார். ஆனா, நான் பேசப் பேச சிரிச்சுகிட்டே இருப்பார். அங்கதான் அவர்கள் எல்லோர்கிட்டயும் பழகும் வாய்ப்பு கிடைச்சது. பாரதிராஜா சார் என்னை தனது தளபதி என்னும் அளவுக்கு சொன்னார், பாலச்சந்தர் சார் என்னை தன் படத்தில் வேலை செய்ய அழைத்தார். இப்படி பல விஷயங்கள் அந்தப் போராட்டத்தால் நடந்தது.


 

arm with prajeesh

 

பிரஜீஷின் குறும்படத்தைப் பாராட்டிய முருகதாஸ்


 

என் மகன் முடிவிலிருந்து மாறுவது போலத் தெரியவில்லை. உறுதியா நின்றான். 'சரி நமக்கு அமெரிக்கா இல்லை'னு மனசை செட் பண்ணிக்கிட்டு மணிரத்னம்கிட்ட அவனை அழைத்துப் போனேன். அவர் அவனைப் பார்த்தார். "ரமேஷ் கண்ணா வழியெல்லாம் ஃபாலோ பண்ணாத, இப்போல்லாம் ட்ரெண்டே மாறிடுச்சு. இப்போ போய் அசிஸ்டென்ட்டா  சேர்ந்து, வேலை பார்த்து எப்போ டைரக்டர் ஆகுறது? கோ... மேக் ஸம் ஷார்ட் ஃப்லிம்ஸ் நோ... நானெல்லாம் அசிஸ்டென்ட்டாவா இருந்தேன்? கோ அஹெட் மேன்" என்று சொல்லி அனுப்பிட்டார். வெளியே வந்து அவன் என்னையே பார்த்தான். "அதான் சொல்லிடார்ல சேர்த்துக்க முடியாதுன்னு? போ, அவர் சொன்ன மாதிரி ஷார்ட் ஃப்லிம் எடு"ன்னு சொன்னேன். அதுக்கும் என்னையே பார்த்தான். அர்த்தத்தோடுதான் பார்த்தான், பணம் வேணும்ல? 

 


 

ccv shoot


 

அவனுக்காகத் தயாரிப்பாளர் ஆனேன். 'தி காட்ஃபாதர்'னு ஒரு குறும்படம் எடுத்தான். கேங்ஸ்டர் படமில்லை... ஒரு முதிய தந்தை, அவரது மகன் இடையிலான ஒரு தருணம்தான் படம். அந்தக் குறும்படம் சீக்கிரமாகவே ஃபேமஸ் ஆச்சு. ஷங்கர் அதை பாராட்டி ட்வீட் போட்டார், முருகதாஸ் அழைத்து பரிசு கொடுத்தார். அவர்கள் நம்ம முகத்துக்காக செய்றாங்கன்னு கூட நினைச்சேன். திடீர்னு ஒரு நாள் சன் டிவியில் இருந்து ஃபோன். "நீங்கதான அந்த குறும்படத்தின் தயாரிப்பாளர்? அதை சன் நியூஸ் தொலைக்காட்சியில் போட அனுமதி வேணும். எங்க எம்.டிக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"னு சொல்றாங்க. அப்போதான் எனக்கு நம்பிக்கை வந்தது, நம்ம பையன் நல்ல ஒரு படம்தான் எடுத்துருக்கிறான் என்று. சன் டிவிக்கு நன்றி.

 

அந்தக் குறும்படம் மணிரத்னத்தையும் சென்றடைந்தது. சீக்கிரமே மெட்ராஸ் டாக்கீஸிலிருந்து அழைப்பு வந்து அவரிடம் உதவி இயக்குனராகி, 'காற்று வெளியிடை', 'செக்கச் சிவந்த வானம்' படங்களில் வேலை பார்த்துவிட்டான் பிரஜீஷ். ரெண்டு பேரும் என் அமெரிக்கா ஆசையைத்தான் நிறைவேற்றல. இயக்குனர் ஆசையை டபுளாக நிறைவேற்றுவாங்கன்னு நம்புறேன், என்னை விட சீக்கிரமா...    

முந்தைய பகுதி:

இளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு! - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10                                                                                                                           

             

 

 

Next Story

ஆசிய திரைப்பட விருது; 4 பிரிவுகளில் 'பாரடைஸ்'!

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
 Asian Film Award; 'Paradise' in 4 sections!

நியூட்டன் சினிமா தயாரிப்பில் வெளியான பாரடைஸ் படம் ஆசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த எடிட்டர் ஆகிய 4 பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

நியூட்டன் சினிமாவின் பாரடைஸ் படம் மிகவும் மதிப்புமிக்க 17வது ஆசிய திரைப்பட விருதுகளில் நான்கு பிரிவுகளில் பரிந்துரைகளுடன் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் பிரசன்ன விதானகே, சிறந்த திரைக்கதை பிரசன்னா விதானகே மற்றும் அனுஷ்கா சேனநாயக்க மற்றும் சிறந்த எடிட்டிங் ஏ. ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  சினிமா சாதனைகள், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் திறமைகளை சிறப்பித்துக் காட்டும் வகையில் புகழ்பெற்ற ஆசிய திரைப்பட விருதுகள் அகாடமியால் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆசிய திரைப்பட விருதுக்கு ஒரு படம் பரிந்துரைக்கப்படுவது ஒரு படத்தின் வெற்றி மற்றும் தரத்தின் முக்கிய குறிகாட்டியாக கருதப்படுகிறது. முக்கிய பிரிவுகளில் பாரடைஸ் படம் பல விருதுகளுக்கு ஆசிய திரைப்பட விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டது படத்தின் தரம் மற்றும் தகுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த நான்கு பரிந்துரைகளும் பாரடைஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை, இது சர்வதேசத் திரைப்பட சமூகத்தில் படத்தின் தாக்கத்தையும் அதிர்வலையையும் நிரூபிக்கிறது. பாரடைஸ் படம் அக்டோபர் 2023ல் பூசன் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் (கிம் ஜிசோக்) விருதை வென்றது. நியூட்டன் சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்கு, சிறந்த திரைப்படத்திற்கான பரிந்துரை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நியமனம், உலகளாவிய பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் சினிமாவை ஆதரிப்பதற்கும் தயாரிப்பதற்கும் நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் பிரசன்ன விதானகே தனது அதீத திறமைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ஐந்து NETPAC விருதுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். இது அவரது அசாத்திய திறமைக்கு மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகும்.

பிரசன்ன விதானகே மற்றும் அனுஷ்கா சேனாநாயக்க ஆகியோருக்கான சிறந்த திரைக்கதைக்கான பரிந்துரையானது, பாரடைஸ் திரைப்படத்தின் திரைக்கதைக்கு ஒரு சான்றாகும். இது படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.  பொன்னியின் செல்வன் மற்றும் RRR போன்ற குறிப்பிடத்தக்க படங்கள் உட்பட 600 படங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த எடிட்டரான A. ஸ்ரீகர் பிரசாத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவரது பங்களிப்பு அதன் கதை மற்றும் காட்சி கதைச்சொல்லலை வடிவமைப்பு முக்கியமானது.

மணிரத்னம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும், பாரடைஸ் படத்தில் ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன், ஷியாம் பெர்னாண்டோ மற்றும் மகேந்திர பெரேரா ஆகியோரின் சிறந்த நடிப்பைக் கொண்டுள்ளது. ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு, கே இன் இசை, தபஸ் நாயக்கின் ஒலி வடிவமைப்பு ஆகியவற்றால் படத்தின் கலை ஆழம் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.   நியூட்டன் சினிமாவின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆன்டோ சிட்டிலப்பில்லி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்: "இந்த பரிந்துரைகள் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பெருமை மற்றும் மகிழ்ச்சியின் தருணம். இது எங்கள் படத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, எங்கள் குழுவின் கூட்டு மனப்பான்மை மற்றும் கடின உழைப்பின் கொண்டாட்டம்" என்று கூறினார். நியூட்டன் சினிமா, அதன் விநியோக பங்குதாரரான செஞ்சுரி ஃபிலிம்ஸுடன் இணைந்து, தயாரித்த இரண்டு படங்களை உலகளவில் திரையரங்குகளில் கொண்டு வருகிறது. பாரடைஸ் மார்ச் 2024ல் வெளியிடப்படும் மற்றும் பேமிலி பிப்ரவரி 2024ல் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

Next Story

பிரமாண்டமாக ரீ ரிலீஸாகும் கமல் படம்

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

kamal nayagan re release update

 

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் படம், இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கபட்டு வருகிறது. மேலும் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் படங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது. இதில் கமலுக்கு ஜோடியாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்க இளையராஜா இசையமைத்திருந்தார். முக்தா ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் 3 தேசிய விருதுகளை வாங்கியது. மேலும் 60வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்திய சார்பில் அனுப்பப்பட்டது. 

 

இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகளை கடக்கிறது. இதையொட்டி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 3 ஆம் தேதி இப்படம் மீண்டும் திரையரங்கில் ரீ ரிலீசாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 120 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவிலும் கணிசமான திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான புதிய ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே கன்னடத்தில் மட்டும் டப் செய்து படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

சமீபத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படம் ரீ ரிலீசானது. கிட்டத்தட்ட 3 வாரங்கள் ஓடியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெளியாகவுள்ள நாயகன் படத்திற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 36 ஆண்டுகள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் கமலின் 234வது படத்திற்கு கூட்டணி அமைத்துள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.