Skip to main content

அரசுப் பொறுப்புகளும் இடசாரி அரசியலும்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா - #2

Published on 29/01/2019 | Edited on 05/02/2019

 

pablo neruda

 

ஜாவாவில் வேலை செய்யும்போதுதான் தனது முதல் மனைவியை நெருடா சந்தித்தார். வங்கி ஊழியரான அவருடைய பெயர் மருகா அண்டோனீடா. அவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  ஜாவாவில் அவர் அரசுப்பணியில் இருக்கும்போது பல வேறுபட்ட கவிதை வடிவங்களை முயற்சித்தார். “ரெஸிடென்ஸ் ஆன் எர்த்” அல்லது “பூமியின் மீது வசிப்பிடம்” என்ற தலைப்பிலான முதல் இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். அந்தத் தொகுதிகளில்தான் சர்ரியலிஸக் கவிதையின் மாதிரிகள் இடம்பெற்றிருந்தன. 

 

வெளிநாடுகளில் வேலைசெய்து சிலி திரும்பிய நெருடாவுக்கு அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸ், ஸ்பெயின் நகரமான பார்சிலோனா ஆகிய நகரங்களில் தூதரகப் பணிகள் வழங்கப்பட்டன. பின்னாளில் அவருடைய குருவான கேப்ரியெலா மிஸ்ட்ரல் ஸ்பெயின் தலைநகரில் வகித்த தூதர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அவரைச் சுற்றிலும் உயிரோட்டமிக்க இலக்கிய வட்டம் உருவாகியது. ரஃபேல் ஆல்பெர்ட்டி, ஃபெடெரிக்கோ கார்சியா லோர்கா போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களும், பெரு நாட்டு கவிஞர் செஸர் வல்லேஜோ ஆகியோர் அந்த இலக்கிய வட்டத்தில் இருந்தார்கள். 

 

pp
 நெருடா மற்றும் மருகா அண்டோனீடா

 

 

மாட்ரிட் நகரில்தான் 1934 ஆம் ஆண்டு நெருடாவுக்கும் அவருடைய முதல் மனைவி மருகாவுக்கும் பெண் குழந்தை பிறந்தாள். மால்வா மரினா என்ற பெயருடைய அந்தக் குழந்தை ஹைட்ரோசெபாலஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். மூளையைத் தாக்கும் இந்த வியாதி காரணமாக அந்தக் குழந்தையின் தலை பெரிதாகிக் கொண்டே இருந்தது.  தொடர்ந்து உயிருக்கு போராடினாள். இதற்கிடையே 1936 ஆம் ஆண்டு தனது மனைவி மருவாவை விவாகரத்து செய்தார் நெருடா. அதன்பிறகு 1942 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது. 

 

மாட்ரிட் நகரில் பணியில் இருந்தபோது அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த டெலியா டெல் கேர்ரில் என்ற பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. நெருடாவை விட இந்த பெண்ணுக்கு 20 வயது அதிகம். திறமைவாய்ந்த ஓவியரான இவருடன் 20 ஆண்டுகள் நெருடா வாழ்க்கை நடத்தினார். இருவரும் 1943 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.  ஓவியக்கலையில் எக்பிரஸனிஷம், மெக்ஸிகன் முரலிஸம் ஆகிய பிரிவுகளில் திறமை பெற்றிருந்தார் டெலியா.

 

pp
 நெருடா மற்றும் டெலியா டெல்

 

ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் வெடித்த சமயத்தில் நெருடா முதன்முறையாக தீவிர அரசியலில் ஈடுபட்டார். அதுவரை தனித்தே  வாழ்ந்த நெருடா ஸ்பெயின் உள்நாட்டு போரில் கிடைத்த அனுபவம் காரணமாக கூட்டு லட்சியத்தை நோக்கி தனது பார்வையை திருப்பினார். அதன்பிறகு, தனது எஞ்சிய வாழ்க்கை முழுவதும் தீவிரமான கம்யூனிஸ்ட்டாக மாறினார். தனது இரண்டாவது மனைவி டெல் கேர்ரில் உள்ளிட்ட இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்ட நண்பர்கள் நெருடாவுக்கு ஏராளமான விஷயங்களை கொடுத்தார்கள். 

 

புகழ்பெற்ற எழுத்தாளரும் நெருடாவின் நண்பருமான கார்சியா லோர்காவுக்கு ஸ்பெயின் சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிரான்கோ மரணதண்டனை விதித்தது நெருடாவை மிகவும் பாதித்தது. அதன்விளைவாக ஸ்பெயின் குடியரசுக்கு ஆதரவாக நெருடா பேசவும் எழுதவும் செய்தார். அவருடைய அந்த பேச்சுகளும் எழுத்துகளும் “ஸ்பெயின் இன் அவர் ஹார்ட்” என்ற தலைப்பில் 1938 ஆம் ஆண்டு தொகுப்பாக வெளியிடப்பட்டது. அவருடைய இடதுசாரி அரசியல் காரணமாக அவர் வகித்துவந்த தூதர் பதவி பறிக்கப்பட்டது.

 

1938 ஆம் ஆண்டு சிலி நாட்டில் நடந்த தேர்தலில் நெருடா ஆதரித்த பெட்ரோ அகுய்ரா செர்டா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து பாரீஸ் நகரில் உள்ள ஸ்பெயின் குடியேற்றவாசிகளுக்கான சிறப்புத் தூதராக சிலி அரசு நெருடாவை நியமித்தது. பாரீஸ் நகரில் ஸ்குவாலிட் முகாம்கள் என்ற அகதிகள் முகாம்களில் உள்நாட்டுப் போர் காரணமாக வெளியேறி வந்த ஸ்பெயின் மக்களை பிரான்ஸ் அரசு தங்க வைத்திருந்தது. அந்த மக்களுடைய பிரச்சனைகளை கேட்டு தீர்வு காண்பதே பாப்லோ நெருடாவின் வேலை. தனது வாழ்க்கையில் ஏற்றுக்கொண்ட புனிதமான வேலை இதுதான் என்று நெருடா பெருமையாக கூறுவார். 

 

பாரீஸ் நகரில் இப்படிப்பட்ட முகாம்களில் தங்கியிருந்த 2 ஆயிரம் பேரை அவர்களுடைய விருப்பத்தின்பேரில் வின்னிபெக் என்ற பழைய கப்பல் மூலம் சிலி நாட்டுக்கு அனுப்பி வைத்தார் நெருடா. இந்தப் பணியில்கூட சிலி நாட்டுக்கு அனுப்ப கம்யூனிஸ்ட்டுகளையே தேர்வு செய்தார் என்று நெருடாவுக்கு எதிரானவர்கள் கூறினார்கள். ஆனால், பிரான்ஸ் அரசு உருவாக்கிய குழுவே ஆட்களைத் தேர்வு செய்தது என்று நெருடாவின் ஆதரவாளர்கள் மறுத்தார்கள்.

 

பிரான்ஸிலிருந்து மெக்சிகோ தலைநகர் மெக்ஸிகோ சிட்டிக்கு சிலி தூதராக நெருடா நியமிக்கப்பட்டார். அங்கு 1940 முதல் 1943 ஆம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தார். அங்கு பணியாற்றிய சமயத்தில்தான் ஸ்பெயினில் சந்தித்து சேர்ந்து வாழ்ந்த டெல் கேர்ரிலை திருமணம் செய்துகொண்டார். தனது எட்டுவயது மகள் மால்வா இறந்ததையும் அப்போதுதான் அறிந்தார். நெருடா விவாகரத்து செய்த முதல் மனைவி மருவாவும் அவருடைய மகள் மால்வாவும் நாஜிகளின் பிடியில் இருந்த ஹாலந்தில் அப்போது வாழ்ந்தனர்.

 

pp

 

1940 ஆம் ஆண்டு இவர் மெக்சிகோவில் பொறுப்பேற்ற சமயத்தில் அங்கு லியோன் ட்ராட்ஸ்கி தஞ்சம் புகுந்திருந்தார். ஸ்டாலினை எதிர்த்ததால் அவர் பல நாடுகளுக்கும் மாறி மாறி குடியேறிய சமயம் அது. மெக்சிகோவில் வைத்து அவரை கொலைசெய்ய ஒரு முயற்சி நடந்தது. இந்த முயற்சியில் அவர் உயிர்தப்பினார். ஆனால், கொலை முயற்சியில் ஈடுபட்டு கைதானவர்களில் மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும், ஸ்டாலின் ஆதரவாளருமான டேவிட் ஆல்ஃபரோ சிகொயரோஸ் என்பவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மெக்ஸிகன் முரலிஸம் என்ற ஓவியக் கலையில் வல்லவர். மெக்ஸிகோ ஜனாதிபதி மேனுவல் அவிலா கேமசோ வேண்டுகோளை ஏற்று, சிலி நாட்டுக்கு அவரை அனுப்பி வைத்தார் நெருடா. இது அந்தச் சமயத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நன்றிக்கடனாக, சிலி பள்ளிக்கூடம் ஒன்றில் ஒரு வருடம் செலவழித்து முரல் ஓவியத்தை வரைந்து கொடுத்தார் டேவிட்.

 

 

முந்தைய பகுதி:
 

பிஞ்சிலே பழுத்த கவிஞன்! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா - #1

 

அடுத்த பகுதி:


சிலியை விட்டுத் தப்பித் தலைமறைவான நெருடா...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி - #3