அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் மூன்றாவது நாளான நேற்று, பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், யுகேந்திர சாஹல் தன்னுடைய சுழற்பந்து வீச்சு மூலம் போட்டியின் முடிவை மாற்றினார்.
121 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவாக நின்று கொண்டிருந்த ஹைதராபாத் அணி, பெங்களூரு அணி வீரர்களின் பந்துவீச்சில் சிக்கி 153 ரன்களில் ஆட்டமிழந்தது. கடைசி 32 ரன்களை எடுப்பதற்குள் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய யுகேந்திர சாஹல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
வெற்றி குறித்து சாஹல் பேசும் போது, "என்னுடைய முதல் ஓவரை வீசும் போது இவ்வாறு நாம் பந்து வீச வேண்டும் என்று நினைத்தேன். அவர்கள் அதை சமாளித்து விளையாடும்போது, பந்து வீசும் முறையை மாற்றினேன். அது அவர்களை சற்று தடுமாற செய்தது. விஜய் ஷங்கர் களத்திற்கு வரும்போது, விராட் கோலியும், டிவில்லியர்ஸும் 'கூக்ளி' முறையில் பந்து வீசக் கூறினார்கள். பனியின் தாக்கம் கையில் இருக்கக்கூடாது என்பதற்காக கையில் களிமண்ணைப் பூசிவிட்டு அவருக்கு பந்து வீசினேன்" எனக் கூறினார்.