Skip to main content

வரலாற்றை மாற்றுமா சூப்பர் ஸ்டார்களின் ஆர்.சி.பி. அணி...?

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

ஐ.பி.எல். தொடரில் இன்னும் டெல்லி, பஞ்சாப், பெங்களூரு அணிகள் கோப்பையை வெல்லவில்லை. இந்தநிலையில் சமூக வலைத்தளங்களில் அதிகம் கலாய்க்கப்படும் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. அதற்கு காரணம் பல சூப்பர் ஸ்டார்கள் ஆர்.சி.பி. அணியில் இருந்தும் அணி வெற்றி பெறாததுதான். கோலி, கெயில், டி வில்லியர்ஸ் என பல சூப்பர் ஸ்டார்களை கொண்டிருந்தும் பெரிய வெற்றிகளை பெறவில்லை என்ற குறையை கொண்டுள்ளது ஆர்.சி.பி. இந்த ஆண்டு புதுப் பொலிவுடன் களமிறங்கவுள்ளது. 

 

rcb

 

விமர்சனங்களை வீழ்த்தி இந்த ஆண்டு கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது பெங்களூர் அணி. கோலி - டி வில்லியர்ஸ் இணையும், சக்ஸஸ்ஃபுல் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன்னும் வரலாற்றை மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் ஆர்.சி.பி. ரசிகர்கள் உள்ளனர். 
 

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த கோலி எனும் அசைக்க முடியாத ஆளுமை பெற்றது பெங்களூர் அணி. ஆட்டத்தின் போக்கை மாற்றி தனது பக்கம் ஆட்டத்தை கொண்டு வருவதில் கோலிக்கு ஈடு அவரே. எந்த நாட்டிற்கு சென்றாலும் "ஏ.பி.டி., ஏ.பி.டி." என்று ரசிகர்கள் உற்சாகப்படுத்தும் அளவிற்கு உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர் பட்டாளம் கொண்டவர் டி வில்லியர்ஸ். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின்னரும் தனது அதிரடி ஆட்டத்தை மாற்றாமல் கலக்கி வருகிறார் டி வில்லியர்ஸ். இவர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் சிம்ரன் ஹெட்மையர் இணைந்து இருப்பது புது உற்சாகத்தை அணிக்கு தருகிறது. 

 

virat

 

உலகின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான யுவேந்திர சாஹல் நல்ல ஃபார்மில் உள்ளார். ஸ்பின் பவுலிங்கில் யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், மொயின் அலி, பவன் நெகி ஆகியோர் கொண்ட யூனிட் வலுவாக உள்ளது. ஃபாஸ்ட் பவுலிங்கில் உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, நேதன் கோல்டர் நைல், மொகமது சிராஜ், டிம் சவுதி ஆகியோர் உள்ளனர். 
 

உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களான மொயின் அலி, காலின் டி கிராண்ட் ஹோம், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஆகியோர் அதிரடி பேட்டிங்கிலும், விக்கெட் எடுக்கும் திறனும் கொண்டு அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார்கள். மற்ற ஆல்ரவுண்டர்களான பிரயாஷ் ரே பர்மான், அக் ஷதீப் நாத், குர்கீரத் சிங், ஷிவம் துபே ஆகியோர் அணியை சமநிலைப்படுத்த உதவுவார்கள்.
 

பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன்னும், ஆஷிஸ் நெஹ்ரா துணை பயிற்சியாளராகவும் இந்த ஆண்டு நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை விளையாடிய 11 தொடர்களில் ஆர்.சி.பி. மூன்று முறை மட்டுமே இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது. அனுபவம் நிறைந்த வீரர்கள் இருந்தும் ஒவ்வொரு முறையும் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது ஆர்.சி.பி. அணி. 

 

ab de

 

கடந்த ஆண்டு விளையாடிய பிரன்டன் மெக்கலம், கிறிஸ் வோக்ஸ், கோரி ஆன்டர்ஸன் ஆகிய 9 வீரர்களை நீக்கி விட்டு புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சில வருடங்களாக அணியின் டாப் ஆர்டர் சிறப்பாகவும், மிடில் மற்றும் லோயர் ஆர்டர் சொதப்பியும் வந்தது. இந்த வருடம் அதை மாற்றும் வகையில் லோயர் ஆர்டர் பலமாக அமைந்துள்ளது. ஆனால் வழக்கம்போல இந்த முறையும் ஸ்பெஷலிஸ்ட் டி20 ஃபாஸ்ட் பவுலர்கள் இல்லாமல் இருப்பது அணிக்கு பலவீனமாக இருக்க வாய்ப்புண்டு.  
 

ஆர்சிபி அணியில் வெளிநாட்டு வீரர்கள் நான்கு பேர் மட்டுமே விளையாட முடியும் நிலையில் டிவில்லியர்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர் மற்றும் ஒரு ஆல் ரவுண்டர், ஒரு ஃபாஸ்ட் பவுலர் மட்டுமே அணியில் விளையாட முடியும். சரியான காம்பிநேசன் இல்லாமல் எந்த இடத்தில் வீரர்கள் களமிறங்குவது என்பது அணிக்கு பலவீனமாக அமையும். மொத்தம் உள்ள 24 வீரர்களில் ஆர்.சி.பி. அணியில் 16 வீரர்கள் இந்திய வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.

 

பலம்: 


வலுவான மிடில் ஆர்டர் பேட்டிங்.

லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.

அனுபவமுள்ள ஆல்ரவுண்டர்கள். 

 

பலவீனம்:


ஸ்பெஷலிஸ்ட் ஓப்பனிங் இணை இல்லாதது.

டி-20 க்கு ஏற்ற இந்திய ஃபாஸ்ட் பவுலர் இல்லாதது.
 


பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள்: 


விராட் கோலி(கேப்டன்), டி வில்லியர்ஸ், பார்த்தீவ் படேல், யுவேந்திர சாஹல், சிம்ரன் ஹெட்மையர், மொயின் அலி, காலின் டி கிராண்ட் ஹோம், மார்கஸ் ஸ்டாயினிஸ், ஷிவம் துபே,   ஹென்ரிச் கிளாசன்,  உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, நேதன் கோல்டர் நைல், மொகமது சிராஜ், டிம் சவுதி, வாஷிங்டன் சுந்தர், பவன் நெகி, மிலிந்த் குமார், ஹிமாத் சிங், பிரயாஷ் ரே பர்மான், அக் ஷ்தீப் நாத், குர்கீரத் சிங், தேவ்தத் படிக்கல், கேஜ்ரோலியா.