Skip to main content

13 வருடங்கள் ஆகிவிட்டன!!! தன்னுடைய சாதனையை நினைவு கூர்ந்த யுவராஜ் சிங்!!!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

Yuvraj Singh

 

ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்து இன்றோடு 13 வருடங்கள் ஆகிவிட்டன என்று இந்திய அணியின் மூத்த வீரர் யுவராஜ் சிங், அத்தருணத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

 

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் அதிரடியான ஆட்டத்திற்கும், களத்தில் துடிப்பான ஃபீல்டிங்கிற்கும் பெயர் பெற்றவர். 28 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது, அத்தொடரில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. அத்தொடருக்குப் பின் இந்திய அணியில் ஒரு ஜாம்பவானாக உருவெடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்துவந்தார்.

 

நீண்ட இடைவெளிக்குப் பின் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தாலும், தொடர்ச்சியான இளம் வீரர்களின் வருகையால் அணியில் அவருக்குச் சரியான இடம் கிடைக்காமல் போனது. பின் யுவராஜ் சிங் சர்வதேசப் போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் யுவராஜ் சிங் 13 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

 

2007 -ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாக இன்று வரை பார்க்கப்படுகிறது. அப்போட்டியில் 16 பந்துகளில் 58 ரன்கள் குவித்து அசத்தினார் யுவராஜ் சிங்.

 

Ad

 

அந்த நாளை நினைவு கூறும் விதமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், "சிக்ஸர் அடித்த ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, 13 வருடங்கள் ஆகிவிட்டன" என்றும் "காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது" என்றும் பதிவிட்டுள்ளார்.