ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 112, ஜடேஜா 57, ஷுப்மன் கில் 45 ரன்கள் எடுத்தனர். அதேபோல் ஆஸ்திரேலிய அணி தரப்பில் லயன், ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 131 ரன்கள் பின்னிலையில் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட் ஒரு முனையில் நிதானமாக ஆட மறுமுனையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வேகமாக விக்கெட்டுகளை இழந்தனர். லபூஷனே 28 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ஸ்மித்தை 8 ரன்களில் பும்ரா போல்டாக்கினார். நிதானமாக ஆடிய வேட் 137 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா அணி 133 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணியைவிட 2 ரன்களே ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ள நிலையில், அந்த அணி, கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே வைத்திருப்பதால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. போட்டியின் நான்காம் நாளான நாளையே போட்டி முடிவுக்கு வர வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.