உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த 2021 ம் ஆண்டில் நடத்தப்பட்ட தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு அணியும் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. ஓர் உலகக்கோப்பைக்கும் அடுத்த உலகக்கோப்பைக்கும் இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் எந்த இரு அணிகள் அதிகமான வெற்றி சதவீதத்தைக் கொண்டுள்ளதோ அந்த அணிகளே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். அந்த வகையில் தற்போது வரை முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் உள்ளன. அடுத்த நான்கு இடங்கள் முறையே இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வென்று தொடரையும் கைப்பற்றி உள்ளது. இத்தொடரில் பாகிஸ்தான் தோல்வியுற்றதால் உலகக்கோப்பை டெஸ்ட் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பினை இழந்தது.
அதே சமயத்தில் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள இந்திய அணி தற்போது வங்கதேசத்துடனும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் அதன் பின் ஆஸ்திரேலியாவுடனும் 4 டெஸ்ட் போட்டிகளில் மோத உள்ளது. 6 போட்டிகளில் இந்திய அணி 5 போட்டிகளில் வென்றால் உலகக்கோப்பை டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெறும்.