4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை போட்டியின் 5 வது லீக் ஆட்டத்தில் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவிற்கு 200 ரன்களை ஆஸ்திரேலியா அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 46 ரன்களும், டேவிட் வார்னர் 41 ரன்களும் எடுத்துள்ளனர். ஜடேஜா 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், அஸ்வின், ஹர்திக் பாண்டியா, சிராஜ் தலா ஒரு விக்கெட்களையும் எடுத்தனர்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ஆட்டத்தின் முதல் 2 ஓவர்களிலேயே இந்திய அணி வீரர்கள் இஷான் கிஷன், ஷ்ரேயாஸ், ரோஹித் ஷர்மா அடுத்தடுத்து டக் அவுட் ஆனதால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் 41.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 201 ரன்களை குவித்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் 97 ரன்களும், விராட் கோலி 85 ரன்களும் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.